ஈஸ்டர் தாக்குதல் பிள்ளையானுடைய கைதோடும் சலேயினுடைய கைதோடும் முடிந்து விடுகின்ற ஒரு விடயமா?-

யிர்த்த ஞாயிறு தாக்குதல் விசாரணைகள் நிறைவேற்று அதிகாரமுள்ள நான்கு ஜனாதிபதிகளைக் கண்டுவிட்டது. பிரதான சூத்திரதாரி தண்டிக்கப்படுவாரா என்ற கேள்வி இன்னமும் விடைகாணப்படாமல் நம்பிக்கையையும் எதிர்பார்ப்பையும் மட்டும் ஏற்படுத்திவிட்டு அமைதியாக இருக்கின்றது. கிட்டத்தட்ட அனைத்து விசாரணைகளும் முடிந்துவிட்டது ஆனால் எதுவும் இன்னும் முடியவடையவில்லை.

மூன்று தசாப்தங்களுக்கு மேல் இந்நாட்டில் புரையோடிப்போய் இருந்த உள்நாட்டுப் போரை முடிவுக்குக் கொண்டுவந்த ஒரு கெட்டித்தனமான இராணுவமும் அதன் புலானாய்வுத்துறையும் இருந்தும் கூட ஒரு தீர்க்கமான பதிலைப் பெறமுடியாத நிலையில் இன்னும் அனுமானங்களை மட்டும் மையப்படுத்தி நமது ஊடகவியலாளர்கள் கேள்வி கேட்கும் நிலையில் உண்மை நமக்கு முன்னால் ஊமையாகி நிற்கின்றது.

உயிர்த்த ஞாயிறன்று தற்கொலைத் தாக்குதல் இடம்பெற்ற பின்னர் இதனை விசாரணை செய்ய பொருத்தமானவர்கள வெளிநாட்டுப் புலனாய்வு அதிகாரிகளே என்று பிரதமராக இருந்த ரணில் விக்ரமசிங்க பகிரங்கமாகச் சொன்னதோடு அமெரிக்காவின் எப்.பி.ஐ அதிகாரிகளுக்கு அழைப்பும் விடுத்தார். அமெரிக்காவின் சீ.ஐ.ஏ. அதிகாரிகளுக்கும் பச்சைக் கொடி காட்டினார். அவர்களுடைய விசாரணையின் முடிவில் தங்களுடைய செல்லப்பிள்ளையான ஐஎஸ்ஐஎஸ் மீது பழியைப் போட்டு லாவகமாக நகர்ந்து கொண்டார்கள். விசாரணை செய்யும் வட்டத்துக்குள் வெளிநாட்டு அதிகாரிகளை உள்வாங்கியே ஆக வேண்டும் என்பதில் பிரதமர் ரணில் விக்ரமசிங்க ஏன் பிடிவாதமாக இருந்தார் என்பதை நாம் ஆராயவே இல்லை. எமது விசாரணை அதிகாரிகளும் அதைத் தவிர்ந்து கொண்டார்கள்.

பொதுவாக உலக நடைமுறை ஒன்று இருக்கின்றது. அதாவது ஜனாதிபதி வெளி நாடொன்றில் இருக்கும் போது தனது நாட்டில் ஏதாவது அனர்த்தம் நிகழ்ந்தால் வெளிநாட்டுக்குச் சென்ற ஜனாதிபதி தனது அனைத்து நிகழ்வுகளையும் ரத்து செய்து விட்டு நாட்டுக்குத் திரும்புவிடுவார். அவர் நாட்டுக்குத் திரும்பியதும் முதலாவது செய்கின்ற பணி சம்பவ இடத்துக்கு விஜயம் செய்வதாகவே இருக்கும். ஆனால் ஜனாதிபதி மைத்திரிபால சிரிசேன இந்த நடைமுறையைப் பின்பற்றவில்லை. தனது வெளிநாட்டுப் பயணத்தை ரத்து செய்துவிட்டு பதறியடித்துக் கொண்டு நாட்டுக்குத் திரும்பவுமில்லை, சம்பவ இடத்துக்குச் செல்லவுமில்லை. பின்னாளில் தனக்கு கொலை அச்சுருத்தல் இருப்பதை அவர் வெளிப்படுத்தினார். ஈஸ்டர் தாக்குதல் குறித்து ஊடகங்கள் வெளியிட்ட செய்தி மூலமே தனக்கு அறியக் கிடைத்தது என்றார். தாக்குதல் சூத்திரதாரி நாடு எதுவென்று தனக்குத் தெரியும் ஆனால் பலமான அவர்களை நம்மால் எதுவும் செய்ய முடியாது என்றார். ஜனாதிபதியிடம் நீ

26.10.2018 இரவோடு இரவாக ரணிலை பிரதமர் பதவியில் இருந்து தூக்கிவிட்டு மஹிந்த ராஜபக்ஷவை பிரதமாராக்கிய பின்னணியில் இருந்தும் அதன் பின்னரே ஜனாதிபதி மைத்திரிபால சிரிசேனவுக்கு உயிரச்சுறுத்தல் அதிகரித்தது என்பதிலிருந்தும் ஈஸ்டர் தாக்குதல் பின்னணியைப் பார்க்கத் தவறிய சில புள்ளிகளும் இருக்கவே செய்கின்றன. அவற்றிலிருந்து சில கேள்விகளை கேட்க நாம் தவறிவிட்டோம்.

கொச்சிக்கடை கிறித்தவ தேவலாயத்திலிருந்து 100 மீட்டர் தூரத்தில் வைக்கப்பட்டிருந்த வெடிகுண்டு பொருத்தப்பட்ட வேன் வண்டியை மறு நாள் மாலை நேரம்தான் நமது பாதுகாப்புத் தரப்பினர் செயலிழக்கச் செய்ய முடியாமல் அதை வெடிக்க வைத்து அழித்தனர். அது வெடித்ததோடு அதனைச் சுற்றி இருந்த அனைத்துத் தடயங்களும் அப்படியே அழிந்து போயின. கேஸ் சிலிண்டர் ரிமோட்கொன்ட்ரோல் வெடிகுண்டு முறைமை பற்றியோ அல்லது அக்குண்டு பொருத்தப்பட்டிருந்த முறைமைகள் பற்றியோ பாதுகாப்புத் தரப்புக் கேள்விகள் ஏன் எம்மிடமிருந்து எழவில்லை? சரி அதை விடுவோம். எதற்காக அவ்விடத்தில் அத்தகையதொரு குண்டு வைக்கப்பட்டது என்ற கேள்வியையும் நாம் கேட்கத் தவறிவிட்டோம். தற்கொலைத் தாக்குதல் நடத்துவதற்கான முழுமையான திட்டமிடல் செயற்படுத்தப்பட்டது. ஏழு பேர் வெடித்துச் சிதறினார்கள். வேறு எங்குமே வெடிகுண்டுகள் வைக்கப்படவில்லை, அப்படியிருக்கும் போது இந்த இடத்தில் மட்டும் ஏன் ஒரு வெடி குண்டு வைக்கப்பட்டது? அதுவும் கேஸ் சிலிண்டர் உத்தியைப் பயன்படுத்திய நிலையில்... மறுநாட் கண்டு பிடிக்கப்படும் வரை அது ஏன் வெடிக்கவே இல்லை? (ஒரு வேளை ஜனாதிபதி மைத்திபால சிரிசேன கொச்சிக்கடை தேவாலயத்துக்கு எல்லா அரசியல் தலைவர்களையும் போல் வருகை தந்து, பாதிப்புகளைப் பார்வையிட்டுவிட்டு, ஊடகங்களுக்கு கருத்துச் சொல்லிவிட்டு, ஜனாதிபதி மாளிகைக்கு அந்த வழியாகத் திரும்பிச் செல்லும் போது அது வெடித்திருக்குமோ என்னவோ!!) தற்கொலைத் தாக்குதல் அதிர்ச்சியில் நமது நாட்டு ஊடகவியலாளர்களும், மக்களும் குறிப்பாக பாதுகாப்புத் துறை அதிகாரிகளும் இந்த வெடிகுண்டை மறந்தே விட்டார்கள்.

மன்னார் படுகை எம்-2 ஏலம் மீண்டும் 2019 ஜனவரியில் மீண்டும் சர்வதேச ஏலமிடப்பட்டது. இதில் நான்கு சர்வதேச நிறுவனங்கள் பங்குபற்றியிருந்தன. 2019 மே 09ஆம் திகதி சமர்ப்பித்தலுக்கான இறுதித் திகதி ஆனால் 2019 ஏப்பரல் 21 வெஎகுண்டுகள் வெடித்தன. அதற்கு ஈஸ்டர் தாக்குதல் என்று பெயர் வைக்கப்பட்டது. தாக்குதலுக்கான பிரதான காரணம் 2019 மார்ச் 15இல் நியுசிலாந்தில் முஸ்லிம் பள்ளிவாசலில் கிறித்தவத் தீவிரவாதியால் மேற்கொள்ளப்பட்ட பயங்கரவாதத் தாக்குதலுக்கு பதில் அளிப்பதற்காகவும் அதில் கொள்ளப்பட்டவர்களுக்காகப் பழிவாங்கும் விதமாகவும் இலங்கையில் கிறித்தவ தேவாலயங்கள் முஸ்லிம் தீவிரவாதிகளால் இலக்கு வைக்கப்பட்டன, என்று சொல்லப்பட்டது. அதை அப்படியே ஏற்றுக் கொண்டால் ஏழு முஸ்லிம் தீவிரவாதிகளும் ஏழு கிறித்தவ தேவாலயங்களில் தானே குண்டை வெடிக்கச் செய்திருக்க வேண்டும். எதற்காக நட்சத்திர ஹோட்டல்கள் தேர்வு செய்யப்பட்டன? இந்தக் கேள்வியைக் கேட்கத் தவறிவிட்டோம். இதன் பின்னால் இருந்த பொருளாதாரக் காரணி என்ன? இலங்கையில் மேற்கொள்ளப்படும் முதலீடுகளுக்கு விடுக்கப்பட்ட நேரடி எச்சரிக்கை இது. சுற்றுலாத்துறையை அடியோடு சிதைத்த சம்பவம் இது. இலங்கையில் மேற்கொள்ளப்படும் முதலீடுகளுக்கு எதிரான எதிரி யார்? முதலீடுகளுக்கு எதிரான தனது எச்சரிக்கையை ஏன் கிறித்தவர்களின் முக்கியமான ஈஸ்டர் தினத்துக்குள் புதைத்து மறைக்க முயல வேண்டும்? நாட்டின் பொருளாதாரத்தை அடியோடு சிதைத்த நட்சத்திர ஹோட்டல் மீதான தாக்குதலை மறந்துவிட்டு இன்று வரை நாம் தேவாலயங்கள் மீதான தாக்குதலைப் பற்றி மட்டுமே முன்னிலைப்படுத்த எப்படித் தயார்படுத்தப்பட்டோம்? இதங்குப் பின்னால் இருந்த மக்கள் ஊடகங்கள் எவை? ஏன் அவை இதைச் செய்தன? முதலீடுகள் மீதான தாக்குதல் மன்னால் படுகையின் எம்-2 பகிரங்க சர்வதேச ஏலத்தின் சமர்ப்பித்தலை எவ்வாறு பாதித்தது? அந்த முதலீடுகளை இது எப்படி அச்சுறுத்தியது?

ஈஸ்டர் தாக்குதல் முடிந்த பின்னர்அமைச்சர் ரிசாட்பதியுதீன், அமைச்சர் மங்கள சமர வீர, அமைச்சர் ரவிகருணாநாயக்க, ஆளுநர் ஹிஸ்புல்லா ஆகிய நான்கு பேரும் மட்டும் ஏன் குறிவைக்கப்பட்டார்கள்? குறிப்பாக ரிசாட் பதியுதீனை முழுமையாக ஓரங்கட்ட ஏன் முயற்சி எடுக்கப்பட்டது? ஐஎஸ்ஐஎஸ் அமைப்பின் பிரதான பங்காளராகவும் தாக்குதலின் அணுசரனையாளராகவும் அமைச்சர் ரிசாத்தை முத்திரை குத்தி முழுமையாக ஓரங்கட்ட ஏன் முயற்சி எடுக்கப்பட்டது? இதற்காக உண்ணாவிரதம் இருக்கும் நாடகம் ஏன் அரங்கேற்றப்பட்டது? அவ்வுண்ணாவிரதம் பின்னர் ஏன் வீரியம் பெறவில்லை? அதன் பின்னால் இருந்த நபர்கள் எதற்காக இதைச் செய்தார்கள். பாராளுமன்ற உறுப்பினர் அத்துரலிய ரத்ன தேரரரும் பாராளுமன்ற உறுப்பினர் வியாழேந்திரனும் எப்படி இந்த நேர்கோட்டில் சந்தித்தார்கள்?

ரணில் விக்ரமசிங்கவின் நல்லாட்சி அவரை இலங்கையின் பிரதமர்களில் ஒருவராக மட்டுமே பதிவு செய்தது. இலங்கை வரலாற்றில் அவரை ஒரு நிறைவேற்று அதிகாரமுள்ள ஜனாதிபதியாக்குவதற்கும் 'தேசிய பாதுகாப்புக்கு அச்சுறுத்தல்' என்ற சுலோகத்தோடு கோத்தாபய ஜனாதிபதி தேர்தலை எதிர்கொண்டதற்கும் ஏதும் தொடர்புகள் உள்ளதுவா? ஜனாதிபதி கோட்டாபய எடுத்த இரண்டு தீர்மானங்கள் அவரை முட்டாள்தனமான ஜனாதிபதியாக இலங்கை வரலாற்றில் பதிவு செய்தன. முதலாவது மஞ்சல் இறக்குமதியைஅ னுமதிக்காமை, அடுத்து 2021 ஏப்ரல் 22இல் இராசாயணப் பசளை இறக்குமதியைத் தடை செய்தமை அதன் பின் தொடர்ச்சியான சங்கிலிக் கோர்வை போன்று பிரச்சினைக்கு மேல் பிரச்சினை. மக்கள் போராட்டம் வெடிக்கும் வரை அது முன்கொண்டு செல்லப்பட்டது. பிரதமர் மகிந்த பதவி விலகி பாராளுமன்ற உறுப்பினர் ரணிலைப் பிரதமராக்கினார். ஜனாதிபதி கோட்டாபய நாட்டைவிட்டே தப்பியோடச் செய்யப்பட்டார். பின்னர் பதவி விலகினார் பின்னர் பிரதமர் ரணில் நிறைவேற்று அதிகாரமுள்ள ஜனாதிபதியானார். இதற்கிடையே தேசிய பாதுக்காப்புக்கு அச்சுறுத்தல் என்ற சுலோகம் எப்படி காணாமல் போனது? ஏன் இரண்டு ஜனாதிபதிகளும் ஈஸ்டர் தாக்குதலை அப்படியே கைவிட்டனர்? மைத்திரி பால சிரிசேன ஜனாதிபதியால் பிரதமராக்கப்பட்ட மஹிந்தவுக்கு எதிராக சட்டப் போராட்டத்தை முன்னெடுத்து அரசியல் ரீதியில் 2018இல் அவமானப்படுத்திய ரணிலை 2022இல் பிரதமராகவும் ஜனாதியாகவும் பதவி அளித்து அழகு பார்த்த தருணங்களின் பின் உள்ள வெளிப்படையான ரகசியப் புள்ளிகளை இணைக்க நாம் எப்படித் தவறிப் போனோம்?

இது போல இந்தத் தாக்குதல் குறித்து இன்னும் பல கேள்விகளை நாம் கேட்கத் தவறி இருக்கின்றோம். சந்தர்ப்பம் கனிந்து வரும் போது அவற்றையும் நாம் கேட்போம். அதற்கிடையே கடைசியாக ஒரேயொரு கேள்வியைக் கேட்க மறவாதிருப்போம்.

ஈஸ்டர் தாக்குதல் பிள்ளையானுடைய கைதோடும் சலேயினுடைய கைதோடும் முடிந்து விடுகின்ற ஒரு விடயமா?

இது பற்றிய இன்னும் விரிவானவிடயங்களை இன்னுமொரு கட்டுரையில் பார்ப்போம்.

S.I.M.M. Deanne - BA,MA,MSW, PhD(R), பாதுகாப்பு மற்றும் அரசியல் ஆய்வாளர்

இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :