கல்முனை மஹ்மூத் மகளிர் கல்லூரிக்கு புதிய அதிபர்: கல்வி வளர்ச்சியை முன்னெடுக்க ஏ.எம். நெளஷாத் பொறுப்பேற்பு



யூ.கே. காலித்தீன்-
ல்முனை கல்வி வலயத்திற்கு உட்பட்ட கல்முனை மஹ்மூத் மகளிர் கல்லூரி (தேசிய பாடசாலை) தனது 20வது நிரந்தர புதிய அதிபராக இலங்கை கல்வி நிர்வாக சேவை தரம்–I அதிகாரியான ஏ.எம். நெளஷாத் அவர்கள் நியமிக்கப்பட்டு, 2026 ஏப்ரல் 26ஆம் திகதி உத்தியோகபூர்வமாக கடமைகளை பொறுப்பேற்றுக்கொண்டார்.

இந்நிகழ்வு கல்முனை வலயக் கல்விப் பணிப்பாளர் எம்.எஸ். சஹ்துல் நஜீம் அவர்களின் முன்னிலையில் நடைபெற்றது.

1971 ஆம் ஆண்டு ஜனவரி 5ஆம் திகதி “மஹ்மூத் மகளிர் கல்லூரி” எனப் பெயர் மாற்றம் பெற்ற இப்பாடசாலை, 55 ஆண்டுகளாக கல்வி சேவையில் சிறந்து விளங்கி வருகிறது. கிழக்கு மாகாணம், அம்பாறை மாவட்டத்தில் அமைந்துள்ள இக்கல்லூரி, கல்முனை வலயக் கல்விப் பணிமனையின் நிர்வாகத்தின் கீழ் இயங்கி, முஸ்லிம் பெண்கள் கல்வி வளர்ச்சியில் தனித்துவமான இடத்தைப் பெற்றுள்ளது.

புதிய அதிபர் ஏ.எம். நெளஷாத் அவர்கள், கல்முனை ஸாஹிரா கல்லூரியில் இரண்டாம் நிலைக் கல்வியைப் பெற்றதுடன், மத்திய முகாம் அஸ்-சிராஜ் வித்தியாலயத்தில் கலைப் பிரிவில் (3A) சிறப்பாகத் தேர்ச்சி பெற்றவர். தொடர்ந்து, கொழும்பு பல்கலைக்கழகத்தில் தகவல் தொழில்நுட்ப முகாமைத்துவம் (MIT) இளமானி பட்டம் பெற்றதுடன், கல்வி மற்றும் கல்வி முகாமைத்துவத்தில் பட்டப்பின் டிப்ளோமா (PGDEM, PGDE) மற்றும் கல்வி முதுமானி (M.Ed) பட்டங்களையும் பெற்றுள்ளார்.

இலங்கை கல்வி நிர்வாக சேவை போட்டித் தேர்வில் வெற்றி பெற்று சேவையில் இணைந்த அவர், தனது பணிக்காலத்தில் சம்மாந்துறை கல்வி வலயத்தில் பிரதிக் கல்விப் பணிப்பாளராகவும், மாவனெல்லை ஸாஹிரா கல்லூரியில் அதிபராகவும், கல்முனை ஸாஹிரா கல்லூரியில் பிரதி அதிபராகவும் பணியாற்றியுள்ளார். மேலும், கிண்ணியா கல்வி வலயத்தில் பிரதிக் கல்விப் பணிப்பாளராக சேவை செய்த அனுபவமும் அவருக்கு உண்டு.

அனுபவம் மிக்க இளம் கல்வி நிர்வாகியாகவும், திறமையான உளவள வளவாளராகவும் திகழும் அவர், புதிய பொறுப்பை ஏற்றுக்கொண்டதையடுத்து நிகழ்வில் உரையாற்றினார்.

அவர் தனது உரையில்,
“நீண்ட வரலாற்றைக் கொண்ட முஸ்லிம் மகளிர் கல்வி நிறுவனமான இக்கல்லூரியில் அதிபராக பொறுப்பேற்பது எனக்கு பெரும் பொறுப்பாகும். கல்வி மட்டுமின்றி ஒழுக்கம், பண்பாடு மற்றும் சமூகப் பொறுப்புணர்வு கொண்ட மாணவிகளை உருவாக்குவதே என் முக்கிய இலக்கு. ஆசிரியர்கள், பெற்றோர், பழைய மாணவிகள் மற்றும் சமூகத்தின் ஒத்துழைப்புடன் இப்பாடசாலையை மேலும் முன்னேற்றுவோம்,” எனத் தெரிவித்தார்.

இந்நிகழ்வில் கல்முனை வலயக் கல்விப் பணிப்பாளர், பிரதிக் கல்விப் பணிப்பாளர்கள், உதவிக் கல்விப் பணிப்பாளர்கள், கோட்டக் கல்வி பணிப்பாளர்கள், வலயக் கல்வி அலுவலக உயர் அதிகாரிகள், பல பாடசாலைகளின் அதிபர்கள், பிரதி மற்றும் உதவி அதிபர்கள், பாடசாலை அபிவிருத்தி நிறைவேற்றுக் குழு உறுப்பினர்கள், பழைய மாணவிகள் சங்க பிரதிநிதிகள், ஆசிரியர்கள், பெற்றோர்கள் மற்றும் சமூகப் பிரதிநிதிகள் உட்பட பலர் கலந்து கொண்டு நிகழ்வை சிறப்பித்தனர்.

இந்த நியமனம், கல்முனை மஹ்மூத் மகளிர் கல்லூரியின் கல்வி மற்றும் பண்பாட்டு முன்னேற்றத்திற்கு புதிய ஓர் அத்தியாயத்தைத் திறக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.




இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :