தென்கிழக்குப் பல்கலைக்கழகத்தில் முன்னாயத்த கற்கைநெறி நிறைவு: மாணவர்களுக்கு சான்றிதழ்கள் வழங்கல்



தென்கிழக்குப் பல்கலைக்கழகத்தின் இஸ்லாமியக் கற்கைகள் மற்றும் அரபு மொழி பீடத்தின் 2022/2023 கல்வியாண்டு மாணவர்களுக்கான முன்னாயத்த கற்கைநெறியை (Intensive Programme) நிறைவு செய்த மாணவர்களுக்கு சான்றிதழ்கள் வழங்கும் நிகழ்வு 2026.07.06 ஆம் திகதி தொழில்நுட்பவியல் பீட கேட்போர் கூடத்தில் இடம்பெற்றது.

நிகழ்வின் ஆரம்பத்தில், முன்னாயத்த கற்கைநெறியின் ஒருங்கிணைப்பாளர் கலாநிதி ஏ.எச். றிபாஸ் வரவேற்புரையாற்றினார். தனது உரையில், இக்கற்கைநெறியின் நோக்கம், அதன் கல்விசார் முக்கியத்துவம் மற்றும் மாணவர்களின் கல்வி மற்றும் ஆளுமை மேம்பாட்டில் அது வழங்கும் பங்களிப்பு குறித்து விளக்கமளித்தார்.

அதனைத் தொடர்ந்து, இஸ்லாமியக் கற்கைகள் மற்றும் அரபு மொழிப் பீடத்தின் பீடாதிபதி கலாநிதி எம்.ஐ.எம். ஜெஸீல் தலைமையுரையாற்றினார்.

அவர் தனது உரையில், இஸ்லாமியக் கற்கைகள் மற்றும் அரபு மொழிப் பீடம் மாணவர் எண்ணிக்கையில் பல்கலைக்கழகத்தின் மிகப்பெரிய பீடமாகத் திகழ்வதுடன், ஒவ்வொரு கல்வியாண்டிலும் சுமார் 500 மாணவர்களைப் பட்டதாரிகளாக உருவாக்கி, சமூகத்திற்கும் நாட்டிற்கும் தேவையான ஆசிரியர்கள், நிர்வாகிகள், வழிகாட்டிகள் மற்றும் தலைமைத்துவ ஆளுமைகளை உருவாக்கி வருவதாகக் குறிப்பிட்டார்.

இஸ்லாமியக் கண்ணோட்டத்தில் ஒவ்வொரு முஸ்லிமும் சமூகத்திற்கு வழிகாட்டியாகவும் முன்மாதிரியாகவும் (Role Model) திகழ வேண்டும் என்பதை வலியுறுத்திய அவர், மாணவர்களின் ஆளுமை, தலைமைத்துவம் மற்றும் சமூகப் பொறுப்புணர்வை வளர்ப்பதே பீடத்தின் முக்கிய இலக்காகும் என்றார்.

மேலும், பல்கலைக்கழகக் கல்வி என்பது பாட அறிவைப் பெறுவதில் மட்டுப்படாமல், மாணவர்களை சமகால உலகின் சவால்களுக்கு முகங்கொடுக்கத் தயார்படுத்தும் முழுமையான கல்விச் செயல்முறையாக அமைய வேண்டும் என்றும் குறிப்பிட்டார். அதற்காகவே பாடத்திட்டத்துடன் இணைந்த கல்விசார் முயற்சியாக முன்னாயத்த கற்கைநெறி அறிமுகப்படுத்தப்பட்டதாகவும், பல்கலைக்கழகச் சூழலுக்கு மாணவர்களைப் பழக்கப்படுத்துதல், சுயகற்றல் திறனை மேம்படுத்துதல் மற்றும் எதிர்கால கல்வி வாழ்க்கைக்குத் தேவையான அடிப்படைத் திறன்களை வளர்த்தெடுத்தல் ஆகிய நோக்கங்களுடன் இத்திட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டதாகவும் தெரிவித்தார்.

டிஜிட்டல் அறிவாற்றல் (Digital Literacy), அரபு மற்றும் ஆங்கில மொழிப் புலமை, தொடர்பாடல் திறன் ஆகியவை இன்றைய உலகில் ஒவ்வொரு பட்டதாரிக்கும் இன்றியமையாத அடிப்படைத் திறன்களாக மாறியுள்ளன எனக் குறிப்பிட்ட அவர், கணினி மற்றும் தகவல் தொழில்நுட்ப அறிவின்றி இருப்பது இக்காலத்தில் கல்வியறிவின்மைக்கு ஒப்பானதாகக் கருதப்படுகின்றது என்றும் தெரிவித்தார். எனவே, மாணவர்கள் வழங்கப்படும் கல்வி வாய்ப்புகளை முழுமையாகப் பயன்படுத்தி தங்களது திறன்களை தொடர்ந்து மேம்படுத்திக் கொள்ள வேண்டும் என வலியுறுத்தினார்.

மேலும், மாணவர்களுக்கு வழங்கப்படும் ஒவ்வொரு கல்வி வாய்ப்பும் இறைவனால் வழங்கப்பட்ட அருட்கொடையாகும்; அவற்றை எவ்வாறு பயன்படுத்தினோம் என்பது குறித்து ஒவ்வொருவரும் பொறுப்புக்கூற வேண்டியவர்கள் என்பதையும் நினைவூட்டிய அவர், தனிப்பட்ட முன்னேற்றத்திற்காக மட்டுமன்றி சமூகத்திற்கும் நாட்டிற்கும் பயனுள்ள பட்டதாரிகளாக உருவாக வேண்டும் என்ற இஸ்லாமியப் பண்பை மாணவர்கள் வளர்த்துக்கொள்ள வேண்டுமென அறிவுறுத்தினார்.

இந்த முன்னாயத்த கற்கைநெறியை வெற்றிகரமாக முன்னெடுத்த ஒருங்கிணைப்பாளர் கலாநிதி ஏ.எச். றிபாஸ் மற்றும் அதற்குப் பங்களித்த அனைத்து கல்விசார் பணியாளர்களுக்கும் அவர் தனது பாராட்டுகளையும் நன்றிகளையும் தெரிவித்தார். மாணவர்களின் திறன்களை மேம்படுத்தும் இத்தகைய கல்வி முயற்சிகளை முன்னெடுத்து வரும் பல்கலைக்கழக நிர்வாகத்திற்கும், உபவேந்தருக்கும் தனது நன்றியைப் பதிவு செய்தார்.

இதனைத் தொடர்ந்து, 2022/2023 கல்வியாண்டைச் சேர்ந்த மாணவர்களுக்கு முன்னாயத்த கற்கைநெறி நிறைவு சான்றிதழ்கள் உத்தியோகபூர்வமாக வழங்கப்பட்டன.

பின்னர், தென்கிழக்குப் பல்கலைக்கழக உபவேந்தர் பேராசிரியர் (கலாநிதி) எஸ்.எம். ஜுனைடீன் சிறப்புரையாற்றுகையில், இத்தகைய முன்னாயத்த கற்கைநெறிகள் மாணவர்களின் ஆளுமை, மொழித்திறன், தகவல் தொழில்நுட்ப அறிவு மற்றும் தலைமைத்துவத் திறன்களை ஒருங்கிணைத்து மேம்படுத்தும் பயனுள்ள கல்வி முயற்சிகளாக அமைந்துள்ளன என்று தெரிவித்தார்.

இன்றைய உலகில் தமிழ், அரபு மற்றும் ஆங்கிலம் ஆகிய மூன்று மொழிகளிலும் புலமை பெற்றிருப்பது மாணவர்களுக்கு மிகப்பெரிய பலமாக அமையும் என்றும், மொழித்திறனுடன் தகவல் தொழில்நுட்ப அறிவையும் இணைத்துப் பயன்படுத்தும் திறன் எதிர்கால கல்வி மற்றும் தொழில்துறையில் வெற்றியை நிர்ணயிக்கும் முக்கிய காரணியாக மாறியுள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டினார்.

மேலும், செயற்கை நுண்ணறிவு (Artificial Intelligence – AI) தொழில்நுட்பத்தின் பயன்பாடு நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில், அதனை வெறுமனே பயன்படுத்துவது மட்டுமல்லாது, துல்லியமான பின்னணித் தகவல்களை (Context) வழங்கும் திறனும், சரியான வழிகாட்டல் அறிவுறுத்தல்களை (Prompting) உருவாக்கும் ஆற்றலும் மாணவர்களுக்கு இன்றியமையாத திறன்களாக மாறியுள்ளன என்றார். தொழில்நுட்பம் மனித சிந்தனைக்கு மாற்றாக அல்ல; மாறாக அறிவார்ந்த முறையில் பயன்படுத்தப்பட வேண்டிய துணைக் கருவி என்பதையும் அவர் வலியுறுத்தினார்.

அதேவேளை, பல்கலைக்கழகக் கல்வி என்பது பாடநூல் அறிவைப் பெறுவதில் மட்டுப்படாமல், சமகால உலகைப் புரிந்துகொள்ளும் திறன், பொதுஅறிவு, தொடர்பாடல் ஆற்றல், சமூக உறவுகளைப் பேணும் பண்பு மற்றும் தொழில்முறை ஒழுக்கம் போன்ற மென்பண்புத் திறன்களையும் வளர்த்துக்கொள்ள வேண்டிய கல்விப் பயணமாக அமைய வேண்டும் என்றும் குறிப்பிட்டார்.

தற்போதைய தொழில்துறை உலகம் தகவல் தொழில்நுட்பத் திறன், மொழித்திறன், தலைமைத்துவம், தொடர்பாடல் திறன் மற்றும் தொழில்முறை ஒழுக்கம் ஆகியவற்றுடன் பணிக்குத் தயாரான பட்டதாரிகளையே எதிர்பார்க்கின்றது என்பதால், பல்கலைக்கழகக் கல்விக் காலத்திலேயே இத்தகைய திறன்களை மாணவர்கள் முழுமையாகப் பெற்றுக்கொள்ள வேண்டும் என அவர் வலியுறுத்தினார்.

உயர்கல்வியில் ஆண் மாணவர்களின் பங்கேற்பு குறைந்து வருவது கவலைக்கிடமான போக்காக இருப்பதாகவும், குடும்பங்களும் சமூகமும் ஆண் பிள்ளைகளை உயர்கல்வியை நோக்கி ஊக்குவிக்க வேண்டியது காலத்தின் தேவையாகும் என்றும் குறிப்பிட்ட அவர், அறிவு, திறன் மற்றும் நற்பண்புகளுடன் சமூகத்திற்கு பொறுப்பான பட்டதாரிகளை உருவாக்குவதே பல்கலைக்கழகத்தின் பிரதான நோக்கமாகும் என்றார்.

நிகழ்வின் இறுதியில் உதவி விரிவுரையாளர் எம்.எஸ்.எவ். பஹீமா நன்றியுரையாற்றினார். இந்நிகழ்வில் பல்கலைக்கழகத்தின் கல்விசார் பணியாளர்கள், நிர்வாக அலுவலர்கள், மாணவர்கள் மற்றும் அழைக்கப்பட்ட அதிதிகள் எனப் பலர் கலந்துகொண்டனர்.

 























 

இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :