கண்டி மாவட்டத்தின் தெல்தோட்டை மற்றும் கம்பளை கல்வி வலயங்களுக்கு உட்பட்ட பாடசாலைகள் “தித்வா” சூறாவளியால் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ள நிலையில், அவற்றை ஆய்வு செய்ய தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனம் (NBRO) மற்றும் கல்வி அமைச்சின் பொறியியல் பிரிவினர் இன்னும் உரிய நடவடிக்கை எடுக்காததை சுட்டிக்காட்டி, மாகாண சபைத் தேர்தலை அவசரமாக நடத்துமாறு ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் ரவூப் ஹக்கீம் எம்.பி. பிரதமர் ஹரிணி அமரசூரியவிடம் வலியுறுத்தினார்.
செவ்வாய்க்கிழமை (03) பாராளுமன்றத்தில் கல்வி அமைச்சுக்கான கேள்வியொன்றின் போது உரையாற்றிய அவர், மாகாண சபைத் தேர்தல் நடைபெறாததால் தற்போது மாகாண அமைச்சர்கள் இல்லாமல் ஆளுநர்களே நிர்வாகத்தை முன்னெடுத்து வருவதாகவும், இதனால் கல்வி உட்பட பல துறைகளில் தீர்மானங்களை விரைவாக எடுக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார்.
தெல்தோட்டை முஸ்லிம் மகா வித்தியாலயத்திற்கு அருகில் ஏற்பட்ட பாரிய நிலச்சரிவால் பாடசாலை விளையாட்டு மைதானம், அருகிலுள்ள வீடுகள் மற்றும் ஆரம்பப் பிரிவு கட்டிடங்கள் ஆபத்தான நிலையில் உள்ளதாக குறிப்பிட்ட அவர், கண்டி மாவட்டத்தில் மட்டுமே சுமார் 150 பாடசாலைகள் இதே போன்ற அபாய நிலையை எதிர்கொள்வதாக கூறினார். இதுவரை NBRO அதிகாரிகள் பல பகுதிகளுக்கும் சென்று ஆய்வு மேற்கொள்ளாதது கவலைக்குரியது எனவும் தெரிவித்தார்.
இதற்குப் பதிலளித்த பிரதமர் ஹரிணி அமரசூரிய, பாதிக்கப்பட்ட பாடசாலைகள் தொடர்பில் கல்வி அமைச்சின் பொறியியல் பிரிவு ஆய்வுகளை மேற்கொண்டுள்ளதாகவும், NBRO அறிக்கைகள் உறுதிப்படுத்தப்பட்ட பின்னரே நிரந்தர தீர்வுகள் வழங்க முடியும் எனவும் தெரிவித்தார். சில பாடசாலைகளை திருத்த முடியுமெனவும், சிலவற்றை முழுமையாக அகற்ற வேண்டிய நிலை இருப்பதாகவும் கூறினார்.
மேலும், கம்பளை கல்வி வலயத்திற்கு உட்பட்ட பேரவில, படித்தலாவ, பரணகல போன்ற பகுதிகளில் உள்ள பாடசாலைகள் முழுமையாக மூடப்பட்டு மாணவர்கள் மாற்றுப் பாடசாலைகளில் கல்வி கற்று வருவதாகவும், முஸ்லிம் பாடசாலைகளில் ஆண்டியாகடவத்த அல்-ஹிக்மா பாடசாலை நிலச்சரிவு அபாயத்தால் முற்றிலும் பயன்படுத்த முடியாத நிலையில் இருப்பதாகவும் ரவூப் ஹக்கீம் சுட்டிக்காட்டினார்.
இந்நிலையில், மாகாண சபை அமைச்சர்கள் இல்லாத காரணத்தால் பல நிர்வாக அனுமதிகள் தாமதமடைவதாகவும், இதனை கருத்தில் கொண்டு கல்வி அமைச்சு உடனடி நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டுமெனவும், அதற்காக அவசரமாக மாகாண சபைத் தேர்தலை நடத்த வேண்டுமெனவும் அவர் வலியுறுத்தினார்.

0 comments :
Post a Comment