டெங்கு இல்லா நிந்தவூரை உருவாக்க அனைவரும் ஒன்றிணைய வேண்டும்



சுற்றுச்சூழல் பாதுகாப்பு ஒவ்வொரு குடிமகனின் பொறுப்பு – நிந்தவூர் பிராஜசக்தி தவிசாளர் ஏ.எல். ஜாபிர் வலியுறுத்தல்

தேசிய டெங்கு ஒழிப்பு வேலைத்திட்டத்தின் கீழ், நிந்தவூர் 16ஆம் பிரிவில் அமைந்துள்ள மத்திய வடிகால் மற்றும் அதனைச் சூழவுள்ள சுற்றுச்சூழல் பகுதிகளைத் தூய்மைப்படுத்தும் விசேட டெங்கு ஒழிப்பு சிரமதான நிகழ்வு கடந்த வியாழக்கிழமை (25) இடம்பெற்றது.

நிந்தவூர் பிராஜசக்தி தவிசாளர் ஏ.எல். ஜாபிர் தலைமையில் முன்னெடுக்கப்பட்ட இந்நிகழ்வில், நிந்தவூர் பிரதேச சபை உறுப்பினர்கள், பிரதேச செயலக உத்தியோகத்தர்கள், கிராம உத்தியோகத்தர்கள், பொருளாதார அபிவிருத்தி உத்தியோகத்தர்கள், சமுர்த்தி அபிவிருத்தி உத்தியோகத்தர்கள், பொது சுகாதார பரிசோதகர்கள், டெங்கு ஒழிப்பு அணியினர், பிரதேச சபை ஊழியர்கள் மற்றும் அப்பகுதி பொதுமக்கள் பெருமளவில் கலந்துகொண்டு வடிகால்களை சுத்தப்படுத்துதல், கழிவுகளை அகற்றுதல் மற்றும் டெங்கு நுளம்புகள் பெருகக்கூடிய இடங்களை ஒழிக்கும் பணிகளில் ஈடுபட்டனர்.

நிகழ்வில் உரையாற்றிய நிந்தவூர் பிராஜசக்தி தவிசாளர் ஏ.எல். ஜாபிர், "டெங்கு நோய் என்பது ஒரு குடும்பத்தையோ ஒரு பகுதியையோ மட்டுமல்ல, முழு சமூகத்தையும் பாதிக்கக்கூடிய பொது சுகாதாரப் பிரச்சினையாகும். இதனை முற்றாகக் கட்டுப்படுத்துவதற்கு அரச நிறுவனங்களின் செயற்பாடுகளோடு பொதுமக்களின் செயற்பாட்டு பங்களிப்பும் அவசியமாகிறது" என்று தெரிவித்தார்.

அவர் மேலும் கூறுகையில், "வீடுகள், வர்த்தக நிலையங்கள், கல்வி நிறுவனங்கள், வழிபாட்டுத் தலங்கள் மற்றும் பொது இடங்களில் நீர் தேங்கும் சூழ்நிலைகளை முற்றாக அகற்றுவதன் மூலம் டெங்கு பரவலைக் கணிசமாகக் குறைக்க முடியும். வாரத்திற்கு குறைந்தது 30 நிமிடங்களாவது ஒதுக்கி ஒவ்வொரு குடும்பமும் தங்களது சுற்றுப்புறத்தை சுத்தப்படுத்தும் பழக்கத்தை உருவாக்க வேண்டும். சுத்தமான சுற்றுச்சூழலே ஆரோக்கியமான சமூகத்திற்கான அடித்தளமாகும்" என்றார்.

மேலும், "டெங்கு ஒழிப்பு என்பது ஒரு நாள் சிரமதானத்துடன் நிறைவடையும் பணியல்ல. இது தொடர்ச்சியாக முன்னெடுக்கப்பட வேண்டிய சமூக இயக்கமாகும். அரச அதிகாரிகள், சுகாதாரப் பிரிவினர், உள்ளூராட்சி மன்றங்கள் மற்றும் பொதுமக்கள் அனைவரும் இணைந்து செயற்பட்டால்தான் 'டெங்கு இல்லா நிந்தவூர்' என்ற இலக்கை நிச்சயமாக அடைய முடியும்" என்றும் அவர் வலியுறுத்தினார்.

இந்நிகழ்வை வெற்றிகரமாக முன்னெடுக்க ஒத்துழைப்பு வழங்கிய நிந்தவூர் பிரதேச செயலகம், நிந்தவூர் பிரதேச சபை, பொது சுகாதார அலுவலகம், அனைத்து அரச உத்தியோகத்தர்கள், டெங்கு ஒழிப்பு அணியினர், பிரதேச சபை ஊழியர்கள் மற்றும் தன்னார்வத்துடன் பங்கேற்ற பொதுமக்கள் அனைவருக்கும் தனது மனமார்ந்த நன்றிகளைத் தெரிவித்தார்.

நிந்தவூர் பிரதேசத்தில் டெங்கு நோயை முற்றாக ஒழித்து, சுத்தமானதும் ஆரோக்கியமானதுமான சூழலை உருவாக்கும் நோக்கில் இவ்வாறான சிரமதானங்கள் மற்றும் மக்கள் விழிப்புணர்வு நடவடிக்கைகள் தொடர்ச்சியாக முன்னெடுக்கப்படும் என்றும் நிந்தவூர் பிராஜசக்தி தவிசாளர் ஏ.எல். ஜாபிர் தெரிவித்தார்.





 

இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :