ஆறு ஆண்டுகளை வெற்றிகரமாக நிறைவு செய்த ஆர் ஜே மீடியா ஊடக வலையமைப்பு



பண்டாரநாயக்க சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் பிரமாண்ட கௌரவிப்பு விழா

"முயற்சிக்கு என்றும் முதலிடம்" என்ற தொனிப்பொருளுடன் கடந்த ஆறு ஆண்டுகளாக ஊடகம், கல்வி, சமூக சேவை மற்றும் ஆளுமை மேம்பாட்டுத் துறைகளில் பல்வேறு செயற்பாடுகளை முன்னெடுத்து வரும் ஆர் ஜே மீடியா ஊடக வலையமைப்பின் ஆறாவது ஆண்டு நிறைவு விழாவும், கௌரவிப்பு நிகழ்வும் நேற்று கொழும்பிலுள்ள பண்டாரநாயக்க சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் வெகுவிமரிசையாக இடம்பெற்றது.

ஆர் ஜே மீடியா ஊடக வலையமைப்பின் பணிப்பாளர் ஏ.எம். இன்ஷாப் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில், தென்கிழக்குப் பல்கலைக்கழகத்தின் கலை மற்றும் கலாச்சார பீடத்தின் பீடாதிபதி பேராசிரியர் கலாநிதி எம்.எம். பாஸில் பிரதம அதிதியாகக் கலந்து கொண்டு நிகழ்வைச் சிறப்பித்தார்.

கௌரவ அதிதிகளாக கிழக்குப் பல்கலைக்கழகத்தின் சிரேஷ்ட விரிவுரையாளர் அஷ்ஷெய்க் றிஸ்வி மஜீதி, வைத்தியர் பி. றிம்ஸான், சிரேஷ்ட வானிலை அதிகாரி ஸாலிஹீன், சிரேஷ்ட ஊடகவியலாளர் ஸமீஹா ஸபீர், சாய்ந்தமருது பிரதேச கலாச்சார அபிவிருத்தி உத்தியோகத்தர் றஸ்மி மூஸா, தேசிய சமூக அபிவிருத்தி நிறுவனத்தின் சிரேஷ்ட முன்னாள் விரிவுரையாளரும் சிரேஷ்ட உளவியல் ஆலோசகருமான அஸ்மியாஸ் ஷஹீத், விரிவுரையாளர் றமீஸா கான் மற்றும் சிரேஷ்ட ஊடகவியலாளர் இர்ஷாத் ஏ. காதர் ஆகியோர் கலந்து கொண்டனர்.

விசேட அதிதிகளாக வசந்தம் தொலைக்காட்சியின் செய்தி வாசிப்பாளர் எம். கவிதா பாரதி, ஆய்வாளர் ஹென்ரி மிட்செல், வசந்தம் தொலைக்காட்சியின் நிகழ்ச்சித் தொகுப்பாளரும் தயாரிப்பாளருமான ஏ.எம். அஸ்கர் மற்றும் ஸிக்னேச்சர் குளோ நிறுவனத்தின் பணிப்பாளர் எஸ்.எச். இஷ்ரத் ரிஜா ஆகியோரும் நிகழ்வில் பங்கேற்றனர்.

நிகழ்வில் கலந்து கொண்ட பிரதம அதிதி, கௌரவ அதிதிகள் மற்றும் விசேட அதிதிகளுக்கு அவர்களது கல்வி, சமூக, ஊடக மற்றும் தொழில்துறைப் பங்களிப்புகளைப் பாராட்டும் வகையில் நினைவுச் சின்னங்களும் விருதுகளும் வழங்கி கௌரவிக்கப்பட்டன.

ஆர் ஜே மீடியாவின் ஆறாவது ஆண்டு நிறைவை முன்னிட்டு அதன் உறுப்பினர்களுக்கான கௌரவிப்பும் நடைபெற்றதுடன், ஆர் ஜே மீடியா நடத்திய ஊடகக் கற்கைநெறியை வெற்றிகரமாகப் பூர்த்தி செய்த மாணவர்களுக்கும் சான்றிதழ்கள் மற்றும் நினைவுப் பரிசுகள் வழங்கப்பட்டன.

மேலும், மருதாணிப் போட்டியில் வெற்றி பெற்றவர்களும் கௌரவிக்கப்பட்டனர். ஓராண்டு காலமாக தேசிய ரீதியில் நடத்தப்பட்ட "அறிவிப்பாளர் குரல் மகுடம்" போட்டியில் முதலிடம் பெற்று சாம்பியனாகத் தெரிவான அம்பாறை மாவட்டத்தைச் சேர்ந்த எ.ஸி. ஹதீகா ஸனானிஸ் அவர்களுக்கு "குரல் மகுடம்" விருது வழங்கி கௌரவிக்கப்பட்டது. அத்துடன், போட்டியில் வெற்றி பெற்ற ஏனைய போட்டியாளர்களுக்கும் விருதுகள் வழங்கப்பட்டன.

இதேவேளை, தொழில் மற்றும் வணிகத் துறைகளில் சிறந்து விளங்கும் தொழில் முனைவோர்களுக்கு பிசினஸ் எக்ஸலன்ஸ் (Business Excellence) விருதுகள் வழங்கி அவர்களின் சாதனைகள் பாராட்டப்பட்டன.

பல கலைநிகழ்ச்சிகள், விருது வழங்கல்கள் மற்றும் கௌரவிப்பு நிகழ்வுகளுடன் நடைபெற்ற இவ்விழாவில் நாட்டின் பல்வேறு பகுதிகளிலிருந்து வருகை தந்த நூற்றுக்கணக்கானோர் கலந்து கொண்டு நிகழ்வைச் சிறப்பித்தனர்.

திறமைகளை அடையாளம் கண்டு ஊக்குவிப்பதோடு, சமூகப் பொறுப்புணர்வுடன் புதிய தலைமுறை ஊடகவியலாளர்கள் மற்றும் ஆளுமைகளை உருவாக்கும் பணியில் ஆர் ஜே மீடியா ஊடக வலையமைப்பு தொடர்ந்தும் முன்னோடியாகச் செயற்பட்டு வருவதை அதன் ஆறாவது ஆண்டு விழா மீண்டும் உறுதிப்படுத்தியமை குறிப்பிடத்தக்கது.












 

இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :