நாட்டை யுத்தத்திலிருந்து பாதுகாப்பதிலும், அனர்த்தங்களிலிருந்து மக்களை காப்பாற்றுவதும் இதுபோன்று நாட்டின் கரையோரப் பிரதேசங்களை கடலரிப்பிலிருந்து பாதுகாப்பதும், தடுப்பதும் அரசின் தலையாய கடமையாகும் என்று இலங்கை ஜனநாயக முன்னணியின் தலைவர் ஏ.பி.கமால்டீன் தெரிவித்தார்.
அம்பாரை மாவட்ட மாளிகைக்காடு கரையோர பிரதேசத்தில் அமைந்துள்ள முஸ்லிம் மையவாடியும் அதனை அண்டியுள்ள மஸ்ஜிதுல் அந்நூர் ஜும்ஆ பள்ளிவாசலும் சுமார் 75 வருடங்களுக்கு முன்பே அமையப்பெற்றது. அந்த மையவாடி கடல் அரிப்பினால் காவுகொள்ளப்பட்டு அடக்கம் செய்யப்பட்ட ஜனாஸாக்கள் வெளிவந்த வண்ணம் இருக்கின்றன. அதுமட்டுமின்றி வீடுகள், பாதைகள், மதஸ்தானங்கள், பாடசாலைகள், மீனவர் இல்லங்கள், மீன் பதனிடும் நிலையங்கள் தினந்தோறும் அழிக்கப்பட்டும் வருகின்றன என்றும் அவர் சுட்டிக்காட்டினார்.
இலங்கை ஜனநாயக முன்னணியின் அட்டாளைச்சேனை தலைமைக் காரியாலயத்தில் இன்று (25) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின்போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
அவர் இதுதொடர்பில் மேலும் கருத்துத் தெரிவிக்கையில், மாளிகைக்காடு முஸ்லிம் மையவாடி பிரதேசம் 2004 ஆம் ஆண்டு ஏற்பட்ட சுனாமியினாலும், ஒலுவில் துறைமுகம் அமையப்பெற்றதனாலும் துறைமுகத்திற்கு வடக்கே ஒலுவில், நிந்தவூர், காரைதீவு, மாளிகைக்காடு, சாய்ந்தமருது, கல்முனை, பாண்டிருப்பு, மருதமுனை வரையிலுள்ள கடலோரப் பிரதேசங்கள் தாழமுக்கம் காரணமாக ஏற்படும் கடல் சீற்றத்தினால் வருடா வருடம் இராட்சத அலையினால் இப்பிரதேசங்கள் பாரிய பாதிப்புக்குள்ளாகின்றன. இதை தடுப்பதற்கான உடனடி நடவடிக்கையினை அரசு எடுக்கவேண்டுமென கேட்டுக் கொள்கிறேன்.
மஹிந்த ராஜபக்ஷ அரசாங்கத்தில் சுமார் 500 ஏக்கர் நிலப்பரப்பை கடல் எல்லைக்குள் மண் நிரப்பி துறைமுக நகரம் (Port City) அமைக்க முடியுமென்றால் ஏன் இப்பிரதேச கடலரிப்பை பாரிய கற்களைப்போட்டு தடுத்து நிறுத்த முடியாதென இலங்கை ஜனநாயக முன்னணி கேட்க விரும்புகிறது.
இவ்விடயத்திற்கு மிக விரைவில் ஆக்கபூர்வமான நடவடிக்கையினை அரசும், அது சார்ந்த அதிகாரிகளும் கூடிய கவனம் செலுத்தி, இலங்கையின் கரையோரப் பிரதேசத்தினையும் இலங்கையின் பூகோள வரைபடத்தின் ஸ்தீரத் தன்மையினையும் பாதுகாக்க முன்வரவேண்டும்.
இதை அரசு கண்டுகொள்ளாமல் கடந்து செல்லுமாக இருந்தால் எதிர்காலத்தில், மாங்காய் வடிவிலான இலங்கையின் வரைபடம் முந்திரி விதை போன்று ஆகிவிடும் என்பதை சுட்டிக் காட்ட விரும்புகிறேன் என்றார்.

0 comments :
Post a Comment