இந்த ஆய்வு மாநாட்டில் பிரதம விருந்தினராக கலந்து கொண்டு உரையாற்றிய தென்கிழக்குப் பல்கலைக்கழக உபவேந்தர் பேராசிரியர் கலாநிதி எஸ்.எம். ஜுனைடீன், இளங்கலை மட்டத்திலேயே மாணவர்களிடையே ஆய்வுப் பண்பாட்டை வளர்த்துவரும் இஸ்லாமியக் கற்கைகள் மற்றும் அரபு மொழிப் பீடத்தின் முயற்சி மிகவும் பாராட்டத்தக்கதென தெரிவித்தார்.
மேலும் அவர் உரையாற்றுகையில், “இன்றைய அறிவு மையமான உலகில் பல்கலைக்கழகங்கள் அறிவைப் பரப்பும் நிலையங்கள் மட்டுமல்ல; புதிய அறிவை உருவாக்கும் மையங்களாகவும் திகழ்கின்றன. ஆய்வு என்பது முதுநிலை மாணவர்களுக்கோ அல்லது பேராசிரியர்களுக்கோ மட்டுமான ஒன்றல்ல. இளங்கலை மாணவர்களும் ஆய்வில் முக்கிய பங்காற்றுகின்றனர்” எனக் குறிப்பிட்டார்.
இஸ்லாமியக் கல்வி மற்றும் அரபு மொழிப் பீட மாணவர்கள்,
புனித மரபுகள், பாரம்பரிய நூல்கள், அரபு மொழி இலக்கியங்கள், வரலாற்றுக் கையெழுத்துப் பிரதிகள், சமகால சமூகப் பிரச்சினைகள் உள்ளிட்ட பல்வேறு துறைகளில் ஆய்வுகளை மேற்கொண்டு வருவது மகிழ்ச்சியளிப்பதாகவும் அவர் சுட்டிக்காட்டினார்.
ஆய்வுப் பணிகள் மாணவர்களின் விமர்சனச் சிந்தனை, பகுப்பாய்வு திறன், சுய அறிவாற்றல் போன்றவற்றை வளர்க்க உதவுவதாகக் குறிப்பிட்ட உபவேந்தர்,
“ஆய்வில் நேர்மை, நம்பகத்தன்மை, மேற்கோள் ஒழுங்கு ஆகியவை இன்றியமையாதவை. பிறர் எழுத்துகளை உரிய மேற்கோளின்றி பயன்படுத்துவது கல்விசார் ஒழுங்குகளுக்கும் இஸ்லாமிய மதிப்புகளுக்கும் முரணானதாகும்” எனவும் தெரிவித்தார்.
மேலும், செயற்கை நுண்ணறிவு (AI) தொழில்நுட்பம் கல்விக்கு உதவிகரமான கருவியாக பயன்படுத்தப்படலாம் என்றாலும், அது மாணவர்களின் சொந்த சிந்தனைக்கு மாற்றாக இருக்கக் கூடாது என்றும் அவர் வலியுறுத்தினார்.
“இன்றைய டிஜிட்டல் காலத்தில் அனைத்தும் தடம் பதியப்படுகின்றன. ஆய்வுகள், கட்டுரைகள், சமூக ஊடக பதிவுகள் என எதுவாயினும் ஒருவரின் நிரந்தர டிஜிட்டல் அடையாளமாக மாறுகின்றன. ஆகவே மாணவர்கள் தங்கள் கல்விசார் பணிகளில் மிகவும் பொறுப்புடன் செயல்பட வேண்டும்” என அவர் அறிவுறுத்தினார்.
இஸ்லாமிய அறிஞர் மரபில் காணப்படும் ஹதீஸ் அறிவியல் மேற்கோள் ஒழுங்கை எடுத்துக்காட்டிய உபவேந்தர்,
ஆய்வுகளில் உண்மைத்தன்மை மற்றும் சங்கிலித் தொடர் நம்பகத்தன்மை இஸ்லாமிய அறிவியல் மரபுடன் நெருக்கமாக தொடர்புடையது என்றும் கூறினார்.
இந்த ஆய்வு மாநாடு மாணவர்களின் அறிவுப் பயணத்தை கொண்டாடும் ஒரு கல்விசார் மேடையாக விளங்குவதாகக் குறிப்பிட்ட அவர், மாணவர்கள் தங்களது சொந்த மொழியிலும் சிந்தனையிலும் ஆய்வுகளை மேற்கொண்டு, அறிவு உருவாக்குநர்களாக மாற வேண்டும் எனவும் குறிப்பிட்டார்.
இந்த நிகழ்விற்கு இஸ்லாமியக் கல்வி மற்றும் அரபு மொழிப் பீடத்தின் பீடாதிபதி அஷ் ஷேக் எம்.எச்.ஏ. முனாஸ் தலைமைவகித்தார்.
நிகழ்வில், வரவேற்புரையை மாநாட்டு ஒருங்கிணைப்பாளர் விரிவுரையாளர் எம்.எம்.எப். பஹீமா நிகழ்த்தினார். இங்கு அரபு மொழித் துறைத் தலைவர் கலாநிதி ஏ.எம். றாஸிக், இஸ்லாமியக் கல்வித் துறைத் தலைவர் பேராசிரியர் கலாநிதி எஸ்.எம்.எம். நபீஸ் ஆகியோரும் உரையாற்றினர். நன்றியுரையை மாநாட்டின் செயலாளர் விரிவுரையாளர் எம்.எஸ்.எப். நிஸ்பா நிகழ்த்தினார். இங்கு உபவேந்தருக்கு நினைவுச் சின்னம் ஒன்றும் வழங்கி வைக்கப்பட்டது.
இங்கு உரையாற்றிய இஸ்லாமிய கற்கைகள் மற்றும் அரபு மொழிப் பீடத்தின் பீடாதிபதி அஷ் ஷேக் எம்.எச்.ஏ. முனாஸ், தென்கிழக்குப் பல்கலைக்கழகத்தின் இஸ்லாமியக் கற்கைகள் மற்றும் அரபு மொழிப் பீடம் ஏற்பாடு செய்த 12-ஆவது இளங்கலை ஆய்வு மாநாடு (UGRC 2026), இளங்கலை மாணவர்களிடையே ஆய்வுப் பண்பாட்டை வளர்த்தெடுக்கும் ஒரு முக்கிய கல்விசார் மேடையாக விளங்குகிறது. 2013 ஆம் ஆண்டு இளங்கலை மாணவர்களுக்கான ஆய்வு வெளிப்பாட்டுத் தளமாக ஆரம்பிக்கப்பட்ட இந்த மாநாடு, தொடர்ச்சியான வளர்ச்சியுடன் இன்று 12 ஆண்டுகளை நிறைவு செய்துள்ளது.
இந்த மாநாடு, ஒரு சாதாரண நிகழ்வாக இல்லாமல், இறுதியாண்டு மாணவர்கள் தங்களது பாடத்திட்டத்தின் ஒரு பகுதியாக மேற்கொண்ட ஆய்வுகளின் முடிவுகளை கல்வியாளர்கள் முன்னிலையில் சமர்ப்பிக்கும் நோக்கில் நடத்தப்படுகிறது. இவ்வருட மாநாட்டில் 34 இளங்கலை மாணவர்கள் தங்களது ஆய்வுச் சுருக்கங்களை சமர்ப்பித்து, நிபுணர்கள் மற்றும் மேற்பார்வையாளர்களின் ஆலோசனைகளின் அடிப்படையில் அவற்றை மேலும் செம்மைப்படுத்தும் வாய்ப்பைப் பெற்றுள்ளனர்.
ஆரம்பத்தில் பீட மாணவர்களுக்கு மட்டுப்படுத்தப்பட்டிருந்த இந்த ஆய்வு மாநாடு, எதிர்காலத்தில் பிராந்திய பல்கலைக்கழக மாணவர்களையும் இணைக்கும் வகையில் விரிவுபடுத்த தீர்மானிக்கப்பட்டுள்ளது. மாணவர்களை ஆய்வு முறைகள், அறிவியல் நேர்மை மற்றும் கல்விசார் தரம் ஆகியவற்றில் பயிற்றுவிக்கும் இந்த மாநாடு, எதிர்கால சிறந்த ஆய்வாளர்களை உருவாக்கும் ஒரு முக்கிய கல்விசார் முயற்சியாகத் தொடர்கிறது என்றார்.
13 ஆண்டுகளாக தொடர்ச்சியாக நடத்தப்பட்டு வரும் இளங்கலை ஆய்வு மாநாடு, மாணவர்களின் ஆய்வுத் திறனை மேம்படுத்தும் முக்கிய கல்விசார் மேடையாக விளங்குவதாக கல்வியாளர்கள் தெரிவித்தனர்.

0 comments :
Post a Comment