தலைநகரை தளமாகக் கொண்டு இயங்கி வரும் புதிய அலை கலை வட்டம் அமைப்பின் ஏற்பாட்டில், கலை, இலக்கியம், ஊடகம், ஆன்மீகம் மற்றும் சமூகப் பணிகளில் ஈடுபட்டு வருகிற 20 பெண்கள் நேற்று (7) சனிக்கிழமை நடைபெற்ற நிகழ்வில் “வீரவனிதையர்” விருது வழங்கி கௌரவிக்கப்பட்டனர்.
அந்நிகழ்வில் உலகளவில் அறியப்பட்ட மனித உரிமை மற்றும் மகளிர் உரிமைகள் செயற்பாட்டாளரானதும், கண்டி மனித அபிவிருத்தி தாபனத்தின் தலைமை இயக்குநருமான திருமதி லோகேஸ்வரி சிவப்பிரகாசம் அவர்களுக்கு “வீரவனிதையர்” விருது வழங்கி கௌரவிக்கப்பட்டது.
நிகழ்வில் பிரதம அதிதியாக கலந்துகொண்ட மகளிர் மற்றும் சிறுவர் விவகார அமைச்சர் சரோஜா சாவித்திரி போல்ராஜ் அவர்கள் இவ்விருதினை வழங்கி வைத்தார்.
மனித அபிவிருத்தி தாபனத்தின் பணிப்பாளர் நாயகமான கலாநிதி பி.பி. சிவப்பிரகாசம் அவர்களின் துணைவியாரான லோகேஸ்வரி சிவப்பிரகாசம், கடந்த நாற்பது ஆண்டுகளாக சமூக மற்றும் மகளிர் அபிவிருத்தி நடவடிக்கைகளில் தொடர்ந்து ஈடுபட்டு வருபவர் ஆவார்.
மகளிர் உரிமைகள் தொடர்பாக தனது பயணத்தில் பல ஆக்கங்களையும் உருவாக்கியுள்ள இவர், பெண்களுக்கு எதிரான வன்முறைகள் மற்றும் அதற்கான தண்டனைகள் குறித்து பல ஆய்வுக் கையேடுகளையும் வெளியிட்டுள்ளார்.
மேலும் சிறுவர் துஷ்பிரயோகம், பெண்களுக்கு எதிரான வன்முறைகள், மது ஒழிப்பு, பெண்கள் உரிமைகள், தலைமைத்துவம், மனித உரிமைகள், நல்லிணக்கம் மற்றும் பால்நிலை சமத்துவம் போன்ற தலைப்புகளில் நாட்டின் பல பகுதிகளில் வளவாளராகச் செயல்பட்டு வருகிறார்.
வேள்வி அமைப்பின் ஸ்தாபகரான இவர், வடக்கு, கிழக்கு மற்றும் மலையகப் பகுதிகள் உள்ளிட்ட பல பிரதேசங்களில் சமூக சேவைகளை மேற்கொண்டுள்ளார்.
பன்முக ஆளுமையுடைய லோகேஸ்வரி சிவப்பிரகாசம் பல வெளிநாடுகளுக்கு பயணம் செய்து பயிற்சிகளைப் பெற்றதுடன், அவற்றை பல்வேறு துறைகளில் பகிர்ந்து வழங்கியும் வருகிறார்.

0 comments :
Post a Comment