புற்றுநோயை முன்கூட்டியே கண்டறிவோம் – தென்கிழக்கு பல்கலைக்கழகத்தில் விழிப்புணர்வு நிகழ்வு



தென்கிழக்கு பல்கலைக்கழக மாணவர் நலன்புரிப் பிரிவு மற்றும் பல்கலைக்கழக சுகாதார நிலையத்தில் ஒத்துழைப்புடன், கிழக்கு மாகாண சுகாதார அமைச்சு மற்றும் கல்முனை பிராந்திய சுகாதார சேவைகள் பணிமனை ஆகியவற்றின் வழிகாட்டுதலின் கீழ் “Cancer Early Detection & Prevention Programme” எனும் புற்றுநோய் முன்னறிதல் மற்றும் தடுப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி 2026.03.11 ஆம் திகதி தொழில்நுட்பவியல் பீட கேட்போர் அரங்கில் இடம்பெற்றது.

இந்த நிகழ்வில் சிரேஷ்ட உதவிப் பதிவாளர் எம்.ரீ. அஹமட் அஷ்ஹர் பல்கலைக்கழக நிர்வாகிகள், சுகாதார அதிகாரிகள், கல்வியாளர்கள், மாணவர்கள் மற்றும் பணியாளர்கள் பலர் கலந்து கொண்டனர்.

நிகழ்வை தென்கிழக்குப் பல்கலைக்கழக உபவேந்தர் பேராசிரியர் கலாநிதி எஸ்.எம். ஜுனைடீன் கலந்து கொண்டு ஆரம்பித்து வைத்தார்.

நிகழ்ச்சியின் வரவேற்பு மற்றும் பிரதான உரையை கல்முனை பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் டாக்டர் ஷகிலா இஸ்ஸதீன் ஆற்றினார்

அவர் தனது உரையில் Non-Communicable Diseases (NCD) எனப்படும் தொற்றாத நோய்கள் உலகளாவிய ரீதியில் மிகப்பெரிய சுகாதார சவாலாக மாறியுள்ளதை குறிப்பிட்டார்.

இலங்கையில் மருத்துவமனைகளில் சேரும் நோயாளிகளில் சுமார் 82% பேர் தொற்றாத நோய்களால் பாதிக்கப்பட்டவர்கள் என்றும், நாட்டில் ஏற்படும் மரணங்களில் பெரும்பாலானவை இந்நோய்களால் ஏற்படுகின்றன என்றும் அவர் தெரிவித்தார்.

மேலும், இந்நோய்கள் அரசாங்கத்திற்கும் மக்களுக்கும் பெரும் பொருளாதார சுமையை ஏற்படுத்துகின்றன என்றும் அவர் கூறினார். உதாரணமாக, ஒரு சாதாரண நீரிழிவு நோயாளியை மாதம் ஒருமுறை மருத்துவமனையில் பின்தொடர்வதற்கே அரசாங்கம் குறிப்பிடத்தக்க செலவினை மேற்கொள்ள வேண்டியுள்ளது எனவும் விளக்கினார்.

அதேவேளை, நோயாளிகளின் குடும்பங்களும் போக்குவரத்து, மருந்து செலவுகள் மற்றும் வேலைநாட்கள் இழப்பு போன்ற காரணங்களால் கூடுதல் சுமையை சந்திக்க வேண்டியுள்ளது என்றும் அவர் குறிப்பிட்டார்.

புகைத்தல், தவறான உணவுப் பழக்கங்கள், உடற்பயிற்சி இல்லாமை மற்றும் சோம்பேறித் வாழ்க்கை முறை போன்றவை புற்றுநோய் உள்ளிட்ட தொற்றாத நோய்களுக்கு முக்கிய காரணிகளாக உள்ளதாகவும் அவர் வலியுறுத்தினார். மாணவர்கள் ஆரோக்கியமான வாழ்க்கை முறையை கடைப்பிடித்து அந்த விழிப்புணர்வை சமூகத்திற்கும் பரப்ப வேண்டும் எனவும் அவர் கேட்டுக்கொண்டார்.

இதனைத் தொடர்ந்து கிழக்கு மாகாண சுகாதார அமைச்சின் செயலாளர் திரு எச்.ஈ.எம்.டபிள்யூ.ஜி. திசாநாயக்க உரையாற்றினார்.

அவர் கடந்த ஆண்டில் அம்பாறை, திருகோணமலை, மட்டக்களப்பு மற்றும் கல்முனை மாவட்டங்களில் நடத்தப்பட்ட பெரிய அளவிலான மருத்துவ முகாம்கள் குறித்து நினைவுபடுத்தினார். அவற்றின் மூலம் ஆயிரக்கணக்கான மக்கள் மருத்துவ பரிசோதனை மற்றும் சிகிச்சை சேவைகளைப் பெற்றதுடன், மூன்றுசக்கர வண்டிகள், சைக்கிள்கள், வீல் சேர், நடைக்கோல்கள் போன்ற உதவிப் பொருட்களும் வழங்கப்பட்டதாக தெரிவித்தார்.

மேலும், எதிர்காலத்தில் மாணவர்கள், தொழிலாளர்கள், விவசாயிகள், மீனவர்கள் உள்ளிட்ட பல்வேறு சமூகக் குழுக்களை இலக்காகக் கொண்டு 100க்கும் மேற்பட்ட விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் கிழக்கு மாகாணம் முழுவதும் நடத்த திட்டமிடப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.

அவர் தனது உரையில் உலகளாவிய அளவில் புற்றுநோய் அதிகரித்து வருவதாகவும், செயற்கை உணவுப் பொருட்களின் அதிகப்படியான பயன்பாடு, புகைத்தல் மற்றும் மதுபானப் பழக்கம் போன்றவை இந்நோய்களின் பரவலுக்கு முக்கிய காரணங்களாக உள்ளதாகவும் தெரிவித்தார். மக்கள் ஆரோக்கியமான வாழ்க்கை முறையை கடைப்பிடித்து இவ்வாறான ஆபத்தான பழக்கங்களைத் தவிர்க்க வேண்டும் எனவும் அவர் வலியுறுத்தினார்.

நிகழ்ச்சியின் போது சுகாதார துறையைச் சேர்ந்த மருத்துவர்கள் பலரும் அறிவியல் விளக்கக் கருத்துரைகளை வழங்கினர்.

கல்முனை பிராந்திய சுகாதார சேவைகள் பணிமனை Non-Communicable Diseases மருத்துவ அதிகாரி டாக்டர் பௌசாத் “புற்றுநோயின் அவலோகம் மற்றும் ஆபத்து காரணிகள்” என்ற தலைப்பில் விளக்க உரை வழங்கினார்.

அதேபோல் பிராந்திய பல் சிகிச்சை நிபுணர் டாக்டர் U. ஹபீப் முகம்மட், வாய் புற்றுநோய் தடுப்பு மற்றும் ஆரம்ப அறிகுறிகள் தொடர்பாக விழிப்புணர்வு உரையாற்றினார்.

அத்துடன் ஏறாவூர் சுகாதார வைத்திய வைத்திய அதிகாரி டாக்டர் பாத்திமா ஷாபிரா முகம்மட் வாசீம், “Breast Cancer” (மார்பகப் புற்றுநோய்) தொடர்பாக விரிவான விளக்க உரை ஒன்றை வழங்கினார். அவர் தனது உரையில் மார்பகப் புற்றுநோயின் ஆரம்ப அறிகுறிகள், பெண்கள் தாங்களே மேற்கொள்ளக்கூடிய சுய பரிசோதனை முறைகள் மற்றும் ஆரம்பத்திலேயே கண்டறிதலின் முக்கியத்துவம் குறித்து மாணவர்களுக்கும் பணியாளர்களுக்கும் விழிப்புணர்வு ஏற்படுத்தினார்.

இந்த உரைகளின் மூலம் புற்றுநோயின் ஆரம்ப அறிகுறிகள், தடுப்பு வழிமுறைகள் மற்றும் முன்கூட்டியே கண்டறிதலின் முக்கியத்துவம் குறித்து மாணவர்களுக்கு விரிவான விளக்கங்கள் வழங்கப்பட்டன.

நிகழ்ச்சியின் இறுதியில்  தென்கிழக்கு பல்கலைக்கழக மாணவர் நலன்புரி சேவைகள் பிரிவின் பணிப்பாளர் கலாநிதி ஏ.என்.எம். முபாறக் நன்றி உரையாற்றினார்.

அவர் இந்த முக்கியமான விழிப்புணர்வு நிகழ்ச்சியை ஏற்பாடு செய்த கிழக்கு மாகாண சுகாதார அமைச்சு, கல்முனை RDHS அலுவலகம், பல்கலைக்கழக நிர்வாகம் மற்றும் கலந்து கொண்ட அனைத்து சுகாதார அதிகாரிகளுக்கும் தனது நன்றியைத் தெரிவித்தார்.

















 











இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :