@. விவசாயிகளின் பிரச்சினைகளுக்கு விரைவில் தீர்வு.
@. தேவையான வீதிகளை அமைத்து போக்குவரத்தை இலகுபடுத்த விரைவான திட்டங்கள்.
@. அவசர தேவைகளைக் கருத்தில் கொண்டு பாலங்கள் நிர்மாணம்.
@. வீடுகளை அமைக்கும் திட்டம்.
@. வடிகாங்களுக்கு முன்னுரிமை.
@. பாடசாலைகள் வைத்தியசாலைகள் மற்றும் அவசர உற்கட்டமைப்புகளுக்கு முன்னுரிமை.
சாய்ந்தமருது மக்களிடம் கடந்த இருபது ஆண்டுகளாக பல அரசியல்வாதிகள் ஏராளமான வாக்குறுதிகளை வழங்கினர். ஆனால் அவர்கள் மக்களுக்கு வழங்கிய எந்த வாக்குறுதிகளையும் நிறைவேற்றவில்லை. இவர்களது எந்த வாக்குறுதிகளும் செயல்படுத்தப்படாமல் போனது மக்களின் நம்பிக்கையைத் தகர்த்தது, என்று பாராளுமன்ற உறுப்பினரும் கரையோர மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுக்களின் தலைவரும் அரசியலமைப்பு பேரவை உறுப்பினருமான அபூபக்கர் ஆதம்பாவா தெரிவித்தார்.
கரைவாகுப்பற்று கீழ்குடாக்கரை கண்டம் மற்றும் தீவு வட்டை மேற்குக் கண்டம் என்பவற்றை ஊடறுக்கும் கிடாமூலை பள்ளாற்றிற்கான புதிய பாலம் அமைப்பது தொடர்பான ஆலோசனைக்கூட்டமும் நடைமுறைப்படுத்தப்படும் பிரதேச அபிவிருத்திகள் தொடர்பில் மக்களுக்குத் தெளிவூடும் நிகழ்வும் சாய்ந்தமருது அல் அமானா நற்பணி மன்றத்தின் ஏற்பாட்டில் சாய்ந்தமருது ஜும்ஆ பெரிய பள்ளிவாசலின் செயலாளர் ஏஷார் மீராசாஹிபின் வழிநடத்தலில் முன்னாள் அதிபர் ஐ.எல்.ஏ. மஜீதின் தலைமையில் சாய்ந்தமருது கலாசார மண்டபத்தில் 2025.11.05 ஆம் திகதி இடம்பெற்றது.
இந்நிகழ்வுக்குப் பிரதம அதிதியாக கலந்துகொண்டு உரையாற்றும்போதே பாராளுமன்ற உறுப்பினர் ஆதம்பாவா மேற்படி கருத்துக்களை முன்வைத்தார்.
“நில பிரச்சினை, வெள்ளப்பாதிப்பு, வீடமைப்பு போன்ற மக்களின் அடிப்படை கோரிக்கைகள் தொடர்பில் கடந்தகால அரசியல்வாதிகளின் அலட்சியம் காரணமாக மக்களின் வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது என்றும் இப்போது நாம் அரசியல் சொற்பொழிவுகளால் அல்ல, செயல் திட்டங்களால் அந்த மக்களின் நம்பிக்கைகளை மீட்டுக் கொடுக்கப் போகிறோம் என்றும் தெரிவித்தார்.
சாய்ந்தமருது கல்முனை உள்ளிட்ட பிரதேச மக்களின் நீண்ட கால தேவையாக இருக்கும் இடப்பிரச்சினைக்கான தீர்வை எட்டும் நிலைக்கு முன்னேறியுள்ளதாகவும் அண்மையில் இடம்பெற்ற மாவட்ட அபிவிருத்திக் குழுக் கூட்டத்தில் இதற்கான அங்கீகாரம் கிடைத்துள்ளதாகவும் தெரிவித்தார்.
அரசாங்கத்தினால் ஒதுக்கப்பட்ட நிதிகள், வீதி நிர்மாணங்கள், வீடமைப்பு திட்டங்கள் மற்றும் வெள்ளப் பாதுகாப்பு நடவடிக்கைகள் போன்றவற்றுக்கு ஒதுக்கீடு செய்யப்பட்டு வேலைத்திட்டங்கள் இடம்பெற்றுவருவதாகவும் கல்லோயா வேலைத்திட்டம், கல்லரிச்சல் முதல் கிட்டங்கி வரையான வேலைத்திட்டங்கள் மற்றும் அம்பாறை கல்முனை வீதியில் உள்ள மாவடிப்பள்ளி பால நிர்மாணம் என பணிகள் நீண்டு செல்வதாகவும் தெரிவித்தார்.
கடந்த கால அரசாங்கங்கள் பல ஆண்டுகளாக இந்த பிரதேசத்தில் நிலவிய இடம்பிரச்சினைகளைத் தீர்க்க முன்வரவில்லை என்றும் இபோதுதான் குறித்த பிரச்சினைக்கு தீர்வைப்பெற முயச்சிகள் எடுக்கபட்டுள்ளதாகவும் தெரிவித்தார்.
முழு பிரதேசங்களையும் இணைக்கும் வலுவான போக்குவரத்து மற்றும் வெள்ளப் பாதுகாப்பு கண்ணோட்டத்திற்காக பல வீதிகள், கால்வாய்கள், பாலங்கள் மற்றும் மீள்கட்டுமான திட்டங்கள் முன்னெடுக்கப்படும் என்றும் குறிப்பாக காரைதீவு பகுதியில் 30 கோடி ரூபாய் செலவில் ஒரு முக்கிய பாலத்தை விரைவில் நிர்மாணிக்க திட்டமிடப்பட்டிருப்பதாகவும் தெரிவித்தார்.
“ஏழை பயனாளிகளை அடையாளம் கண்டு அவர்களுக்கு வீடுகளை வழங்குவது, வீதிகளைக் கொங்கிரீட் செய்வது, வயல்கள் மற்றும் நீர் நிலைகளை சரி செய்வது” போன்ற வாழ்வாதார சார்ந்த திட்டங்கள் இந்த ஆட்சிக்காலத்தில் தொடங்கப்பட்டு நிறைவேற்றப்படுவதாகவும் அவர் உரையில் குறிப்பிட்டார்.
அஷ்செய்க் றஹீம் வரவேற்புரை நிகழ்த்தினார். நிகழ்வின் போது சாய்ந்தமருது ஜும்ஆ பெரிய பள்ளிவாசலின் தலைவரும் வர்த்தக சங்கத்தின் தலைவருமான தொழிலதிபர் எம்.எஸ்.எம். முபாறக், முன்னாள் அதிபர் ஐ.எல்.ஏ. மஜீத், முன்னாள் அதிபரும் சட்டத்தரணியுமான எம்.சி. ஆதம்பாவா, அல் அமானா நற்பணி மன்றத்தின் தலைவர் அல் ஹாஜ் ஏ.எல்.ஏ. பரீட், அஷ்செய்க் எம். நவாஸ் ஆகியோரும் உரையாற்றினர். நிகழ்வின்போது பாராளுமன்ற உறுப்பினரின் செயலாளர் எஸ். இம்தியாஸ் பிரசன்னமாகியிருந்தார்.
இங்கு தொடர்ந்து கருத்து வெளியிட்ட பாராளுமன்ற உறுப்பினர்,
தான் பாராளுமன்ற உறுப்பினராகிய பிறகு பிரதேசத்தை மையமாக வைத்து பல திட்டங்களை செயல்படுத்தியிருக்கிறேன் என்றும் இன்னும் ஒரு வருட காலத்துக்குள் மேலும் பல செயல்முறை முடிவுகள் எட்டப்படும் என்றும் தெரிவித்தார். “இவை பொதுவாக மக்களுக்கு தேவையான அடிப்படை வசதிகளை வழங்கும் வகையில் இருக்கும்; இதில் கிராம சேவகர் பிரிவுகள், மாவட்ட அபிவிருத்திக் குழுக்கள் மற்றும் மத்திய அரசு இணைந்து செயல்படும் என்றும் தெரிவித்தார்.
தேசிய மக்கள் சக்தி (National People's Power, தேமச (NPP )கட்சியின் நிலைப்பாட்டையும் விளக்கினார். தங்களது கட்சி கடந்த கால அரசியலிலிருந்து மாறுபட்டு, வெளிப்படையான நிர்வாகத்தையும் மக்களுக்கு நேரடி நன்மை அளிக்கும் செயல் முறை அரசியலையும் முன்னிறுத்துகிறது என்றும் நாங்கள் வாக்குறுதி அளிப்பதற்காக அல்ல, அதை நிறைவேற்றுவதற்காகவே இங்கு இருக்கிறோம்,” எனவும் தெரிவித்தார்.
“சாய்ந்தமருது போன்ற அபிவிருத்தியில் பின்தங்கிய பிரதேசங்களில் இனி அரசியல் விளையாட்டுக்களுக்கு இடமில்லை என்றும் தாங்கள் இங்கு மக்கள் நலனுக்காக செயல்படப் போகிறோம்; அதற்காக தேசிய மக்கள் சக்தி ஆட்சியில் பொறுப்புள்ள வளர்ச்சியை உறுதி செய்யும்.” என்றும் தெரிவித்தார்.
நாம் சொன்னதைச் செய்யத் துடிப்போம்; கடந்தகால அரசியல்வாதிகள் போல மக்களை ஏமாற்றமாட்டோம். தேசிய மக்கள் சக்தி அரசியல் என்பது உண்மையில் செயல்முறை அரசியல் என்பதை சாய்ந்தமருது மக்கள் காணவிருக்கிறார்கள்,” எனவும் வலியுறுத்தினார்.
ஆதம்பாவா தனது உரையின் ஒரு பகுதியில் இஸ்லாமிய ஆட்சியின்முறையின் சிறந்த மாதிரியாக உமர் இப்னு அல்-கத்தாப் (ரலி) அவர்களின் ஆட்சியை எடுத்துக்காட்டாகக் குறிப்பிட்டார்.
“உமர் ரலி அவர்களின் ஆட்சி என்பது நேர்மையுடனும் நியாயத்துடனும் நிரம்பிய ஒரு ஆட்சி. அவர் மக்களின் சொத்து, உரிமை, நம்பிக்கை ஆகியவற்றை அல்லாஹ்வுக்கு பின்பட்ட புனிதமான பொறுப்பாகக் கருதினார். இன்று அந்த ஆட்சிமுறைதான் நமக்கு முன்மாதிரியாக இருக்க வேண்டும்,” எனவும் குறிப்பிட்டார்.
“ஒரு உண்மையான அரசியல்வாதி என்பது அதிகாரத்தை அனுபவிக்க அல்ல; மக்களின் நலனைப் பாதுகாக்கப் பிறந்தவன். உமர் ரலி போன்று நீதியுடன் ஆட்சி செய்வதே எனது கடமையாக நான் கருதுகிறேன். என்றும் தெரிவித்தார்.
இங்கு கருத்துத் தெரிவித்த சாய்ந்தமருது ஜும்ஆ பெரிய பள்ளிவாசலின் தலைவரும் வர்த்தக சங்கத்தின் தலைவருமான தொழிலதிபர் எம்.எஸ்.எம். முபாறக்,
இந்த பிராந்தியத்தில் நல்ல காரியங்களை முன்னெடுக்க சிலர் வர்த்தக நோக்கத்துடன் நினைப்பார்கள் – பெரிய அளவில் கடன் எடுத்து, வட்டியுடன் திருப்பிச் செலுத்தும் முயற்சிகளாகவோ, அல்லது சில ஏக்கர் நிலத்தில் கட்டிடங்கள் எழுப்புவதாகவோ சிந்திப்பார்கள். அதுபோல அரசியல்வாதிகளும் எங்களிடம் பெரிய கதைகள் சொல்லி மக்களை கவரும் காலத்தை நாங்கள் கண்டிருக்கிறோம்.
ஆனால் இன்று நாம் மதித்து அழைத்து அமர வைத்திருக்கும் நமது ஊரின் மகன் பாராளுமன்ற உறுப்பினர் ஆதம்பாவாவை அல்லாஹ் சிறப்பாகத் தேர்ந்தெடுத்திருக்கிறார். பல ஆண்டுகளாக அவர் உண்மையுடன் பாடுபட்டதால்தான் இன்று நமது ஊரும், நமது மாவட்டமும், நாட்டும்கூட பல நன்மைகளை அடைந்து வருகிறது.
அவர் மக்கள் மத்தியில் கலந்துகொண்டு, இரவு பகல் பாராமல் உழைப்பது அல்லாஹ் தந்த உற்சாகத்தின் பலனாகும். ஜனாதிபதியுடன் இணைந்து பணியாற்றும் அளவிற்கு அல்லாஹ் அவருக்கு வழி திறந்திருக்கிறார். அவருடைய ஆசான்களும், பெற்றோர்களும், அவரை நல்ல வழியில் வளர்த்தார்கள்.
எங்களுடைய ஊர்மக்களாகிய நாம் அனைவரும் அவருக்காக துஆ செய்வதே நமது கடமை. அவர் செய்ய நினைக்கும் நல்ல காரியங்கள் இன்ஷா அல்லாஹ் நிறைவேறும்.
முன்னர் சிலர் அரசியலுக்குள் நுழைய தயக்கம் கொண்டார்கள். “என்ன நடக்கும்?”, “யார் நம்பிக்கைக்குரியவர்?” என்று யோசித்தார்கள். ஆனால் நமது பாராளுமன்ற உறுப்பினர் ஒருபோதும் நம்பிக்கையை இழக்கவில்லை. அவர் அல்லாஹ்வின் திட்டத்தில் நம்பிக்கை வைத்தார். அவர் விடாமுயற்சி கொண்டார்.
இன்று அவருடைய முயற்சியின் பலனாகவே அவர் பாராளுமன்ற உறுப்பினராகப் பதவியேற்றுள்ளார். அதுபோலவே அவரது நண்பர் ஜனாதிபதியாக உயர்ந்துள்ளார். இருவரும் தூய நோக்கத்துடன், மக்களின் நலனுக்காக உழைக்கின்றனர். அல்லாஹ் அவர்களுக்கு மேலும் வெற்றி வழங்கி, எங்கள் ஊருக்கும் நமது சமூகத்திற்கும் நன்மை தருவானாக.” என்றார்
இங்கு கருத்துத் தெரிவித்த அல் அமானா நற்பணி மன்றத்தின் தலைவர் அல் ஹாஜ் ஏ.எல்.ஏ. பரீட், ஊரின் தேவைகளை உணர்ந்து செயல்படும் தலைவராக பாராளுமன்ற உறுப்பினர் ஆதம்பாவா திகழ்கிறார் என்றும்
குடாக்கரை மேற்கண்டம் மற்றும் கீழ்கண்ட விவசாய பிரிவில் சுமார் 900 ஏக்கர் பரப்பளவுள்ள விவசாய நிலங்கள் இருப்பதாகவும் அவைகளில் பயிர்ச்செய்கை செய்யக்கூடிய காணிகளை அடையாளம் கண்டு அவற்றுக்கு முறையான பாய்ச்சல் வடிச்சல்களை வழங்கி விவசாயிகளை ஊக்குவிக்க முடியும் என்றும் ஆற்றங்கரைகளில் மூன்று அடிக்கு குறையாத உயரமுள்ள வன்ட்கள் (bunds) அமைக்க வேண்டிய அவசியம் உள்ளது என்றும் தற்போதைய வன்ட்கள் பல இடங்களில் சேதமடைந்துள்ளதால், வெள்ளம் ஊடுருவி விவசாய நிலங்களை பாதிக்கிறது என்றும் தெரிவித்தார். இந்த வன்ட்கள் சரியாக அமைக்கப்பட்டால், நீர் வளமும் பாதுகாக்கப்பட்டு, விவசாய உற்பத்தியும் அதிகரிக்கும்.” என்றும் தெரிவித்தார்.
மாவடிப்பள்ளி – குடாக்கரை கண்டம் ஊடான கல்முனை நோக்கிய இணைப்பு வீதி புணரமைப்பு பணிகள் சில மாதங்களுக்கு முன் துவங்கப்பட்டு தற்போது நிறுத்தப்பட்டுள்ளது என்றும் அந்தப் பணியை விரைவில் மீளத் தொடங்க வேண்டும் என்ற கோரிக்கையையும் பரீட் ஹாஜி முன்வைத்தார்.
வீதி அமைந்தால், வாகன போக்குவரத்து நெரிசல் குறைந்து, கிராமப்புற மக்களுக்கு நகரப் பகுதிகளுடன் எளிதான தொடர்பாடல் கிடைக்கும் என்றும் தெரிவித்தார். இந்த வீதி திட்டம் எங்கள் ஊரின் பொருளாதார வளர்ச்சிக்கும், பொது மக்கள் மற்றும் விவசாயிகளின் தினசரி பயணத்திற்கும் பெரும் ஆதாரமாகும் என்றும் தெரிவித்தார்.
கடந்த 2004 ஆம் ஆண்டு டிசம்பர் 26 ஆம் தேதி ஏற்பட்ட சுனாமி பேரழிவு காரணமாக சாய்ந்தமருது மாளிகைக்காடு பிரதேசம் வெகுவாக பாதிக்கப்பட்டதாகவும் பாதிக்கப்பட்ட மக்களை பாதுகாப்பான இடங்களில் குடியேற்றும் பொருட்டு குடாக்கரை கீழ்க்கண்டம் பகுதியில் நெற்செய்கை பண்ணப்படாத காணிகள் அரசால் சுவீகரிக்கப்பட்டு அந்த மக்களுக்கு இருப்பிடங்கள் அமைத்துக் கொடுக்கப்பட்டதாகவும் மீதமுள்ள பாதிக்கப்பட்ட மக்களும் சுமார் ஐந்து சதுர கிலோமீட்டருக்குள் 34000 மக்கள் வாழும் சாய்ந்தமருது மக்கள் இடமின்றி அல்லலுறுவதாகவும் அவர்களுக்கான ஒரே வழி மீதமுள்ள குறிப்பிட்ட அளவான காணிகளையாவது நிரப்பி குடிமனைகளை அமைப்பதுதான் என்றும் தெரிவித்தார்.
அத்துடன் தற்போது குடியேற்றப்பட்டு வாழும் குடும்பங்களும் பல்வேறு பிரச்சனைகளை எதிர்நோக்குவதாகவும் அவற்றில் சில வீதிகளை உயர்த்தித் தரும் நடவடிக்கை எடுக்கப்பட்டால் மக்களின் பிரச்சினை தீர்ந்துவிடும்.” என்றும் தெரிவித்தார்.
நிகழ்வில் அல் அமானா நற்பணி மன்றத்தினால் பாராளுமன்ற உறுப்பினரிடம் மகஜர் ஒன்றும் கையளிக்கப்பட்டன. இங்கு உலமாக்கள், ஊர்ப்பிரமுகர்கள், பயனாளிகள் மற்றும் பாராளுமன்ற உறுப்பினரின் இணைப்பாளர்கள் என பலரும் பங்கு கொண்டிருந்தனர்.

0 comments :
Post a Comment