“ஒரு சமூகம் சிறப்பாக உருவாக வேண்டும் என்றால், மற்றவர்களின் நலனைப் பார்க்கும் பண்பு அவசியம். அஷ்ஷெய்க் எஸ்.எச். ஆதம்பாவா மதனி, இதனை தம் வாழ்க்கையால் நடைமுறைப்படுத்தியவர் என அகில இலங்கை ஜம்இய்யதுல் உலமாவின் தலைவர் அஷ்ஷெய்க் எம்.ஐ.எம்.றிஸ்வி முப்தி தெரிவித்தார்.
அம்பாறை மாவட்ட ஜம்இய்யதுல் உலமா உத்தியோகபூர்வமாக ஆரம்பிக்கப்பட்டதில் இருந்து அதன் செயலாளராகவும் உப தலைவராகவும் செயற்பட்டு வந்த அஷ்ஷெய்க் எஸ்.எச். ஆதம்பாவா (மதனி, எம்.ஏ.) அவர்கள் 1998 ஆம் ஆண்டு முதல் தொடர்ச்சியாக 25 வருடங்கள் தலைவராக செயற்பட்டு, அதன் வளர்ச்சிக்காகவும் சமூக, சன்மார்க்க முன்னேற்றத்திற்காகவும் பெரும் பங்காற்றியமைக்காக; அம்பாறை மாவட்ட ஜம்இய்யதுல் உலமாவின் தற்போதைய நிர்வாகம் ஏற்பாடு செய்திருந்த கௌரவிப்பு மற்றும் அஷ்ஷெய்க் எஸ்.எச். ஆதம்பாவா அவர்களது சமய, சமூக மற்றும் கல்வித் துறைகளில் ஆற்றிய உன்னத சேவைகள் பற்றிய சிறப்புக் கட்டுரைகள் மற்றும் வாழ்த்துச் செய்திகள் அடங்கிய சிறப்பு மலர் வெளியிட்டு வைக்கும் நிகழ்வும் அம்பாறை மாவட்ட ஜம்இய்யதுல் உலமாவின் தலைவர் அஷ்ஷெய்க் ஐ.எல்.எம்.ஹாஷிம் சூரி மதனி தலைமையில் 2025.10.26 ஆம் திகதி மாளிகைக்காடு பாவா றோயல் வரவேற்பு மண்டபத்தில் இடம்பெற்றது.
இந்நிகழ்வுக்குப் பிரதம அதிதியாக கலந்துகொண்டு உரையாற்றும் போதே அஷ்ஷெய்க் எம்.ஐ.எம்.றிஸ்வி முப்தி, மேற்படி கருத்துக்களை முன்வைத்தார்.
“உலமாக்கள் என்பது குர்ஆனின் விளக்கமாய் வாழும் மனிதர்கள். அல்லாஹ் அவர்களை மக்களின் வழிகாட்டிகளாக உருவாக்கியிருக்கிறான். அஷ்ஷெய்க் ஆதம்பாவா மதனி அவர்கள், உண்மையான உலமாக்களின் பிரதிநிதி. அவர் கல்விக்குப் பெரும் முக்கியத்துவம் கொடுத்தார்; முஸ்லிம் சமூகத்தின் மத அடையாளத்தையும், தேசிய ஒற்றுமையையும் இணைக்கப் பாடுபட்டார்,” எனத் தெரிவித்தார்.
“ஒரு சமூகம் சிறப்பாக உருவாக வேண்டும் என்றால், மற்றவர்களுக்கான நன்மைகளைப் பார்க்கும் பண்பு அவசியம். ஆதம்பாவா மதனி அவர்கள் இதனை தம் வாழ்க்கையால் நடைமுறைப்படுத்தியவர். அவர் பல தலைமுறைகளுக்கு உந்துசக்தியாக விளங்கியுள்ளார்,” என்று அஷ்ஷெய்க் றிஸ்வி முப்தி குறிப்பிட்டார்.
அவர் தனது உரையின் போது இஸ்லாமிய ஒற்றுமை, உலமாக்களின் கல்விச் சீர்திருத்தப் பணி, மற்றும் இளைய தலைமுறையை மார்க்கத்துடன் இணைக்கும் தேவை போன்ற விடயங்களையும் வலியுறுத்தினார்.
அம்பாறை மாவட்ட ஜம்இய்யதுல் உலமாவின் செயலாளர் அஷ்ஷெய்க் ஏ.எல். நாஸிர் கனி (ஹாமி, எம்.ஏ) இன் நெறிப்படுத்தலில் இடம்பெற்ற இந்நிகழ்வில் அகில இலங்கை ஜம்இய்யதுல் உலமாவின் தலைவர் அஷ்ஷெய்க் எம்.ஜ.எம். றிஸ்வி முப்தி அவர்கள் பிரதம அதிதியாக கலந்து சிறப்பித்திருந்தார்.
நிகழ்வில் ஏற்புரையாற்றிய அஷ்ஷெய்க் ஆதம்பாவா மதனி,. “ஒரு சமூகத்தின் முன்னேற்றத்திற்கு அறிவும் பண்பும் தான் பிரதானம். செல்வம் அல்ல, அறிவும் தாராள மனப்பான்மையும் தான் சமுதாயத்தின் உண்மையான செல்வம்,” என தெரிவித்தார்.
அம்பாறை மாவட்ட ஜம்இய்யத்துல் உலமா கடந்த பல வருடங்களாக மேற்கொண்டு வரும் மத, கல்வி மற்றும் சமூக மேம்பாட்டு பணிகளை பாராட்டிய அவர், “ஜம்இய்யத்துல் உலமா என்பது வெறும் பெயர் அல்ல, அது சமுதாயத்தை வழிநடத்தும் ஒளிக்கொடி,” எனக் குறிப்பிட்டார்.
அஷ்ஷெய்க் ஆதம்பாவா மதனி அவர்கள் தனது உரையில், இன்றைய சமூகத்தில் இஸ்லாமிய கல்வியின் முக்கியத்துவத்தையும் அதன் வழியாக உருவாக வேண்டிய இளம் தலைமுறையின் பொறுப்பையும் வலியுறுத்தினார்.
“மதரஸாக்கள் நம் சமுதாயத்தின் இதயம் போன்றவை. அவை சீராக இயங்கினால் தான் சமூகம் வளரும். மதக் கல்வியை வாழ்க்கை நெறியாக மாற்றும் வகையில் நமது இளைஞர்கள் உருவாக வேண்டும்,” என்றும் அவர் கூறினார்.
“இந்த நிகழ்வு வெறும் நிகழ்ச்சி அல்ல; அறிவு, ஆன்மிகம், பண்பாடு ஆகிய மூன்றையும் வழிநடத்தும் முக்கிய பங்காளிகளின் ஒன்று கூடல், எங்களில் இருந்து உருவாகும் ஒவ்வொரு மாணவரும் சமூக மாற்றத்தின் விளக்காக இருப்பார்,” என்றார்.
உலமாக்கள் தங்களது கடமைகளை உணர்ந்து, சமூகத்தில் வழிகாட்டிகளாக நிற்க வேண்டும் என்றும், அவர்கள் அறிவுடன் கூடிய மனிதநேயத்தையும் இணைத்துக் கற்பிக்க வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார்.
“உலமாக்கள் வழிநடத்தும் சமூகம் தான் வளர்ச்சியடையும். நமது இளைஞர்கள் மதப் பற்றும் சமூகப் பொறுப்பும் கொண்டவர்களாக வளர வேண்டும்,” எனவும் அவர் தெரிவித்தார்.
அம்பாறை ஜம்இய்யத்துல் உலமா தலைவர் அஷ்ஷெய்க் ஐ.எல்.எம். ஹாஷிம் சூரி அவர்களின் வழிநடத்தலில்; அமைப்பு மேற்கொண்டு வரும் பணிகளை பாராட்டிய அவர், இளம் உலமாக்கள் சமூக சேவையிலும் கல்வி முன்னேற்றத்திலும் ஈடுபடுமாறு அழைப்பு விடுத்தார்.
“நவீன உலகில் நம் மாணவர்கள் அறிவியல், தொழில்நுட்பம், சமூக அறிவு ஆகிய துறைகளிலும் முன்னேற வேண்டும். அதே நேரத்தில் அவர்கள் மத நெறிகளிலிருந்து விலகாமல் இருக்க வேண்டும்,”எனவும் வலியுறுத்தினார்.
“சமூக ஒற்றுமை, சகிப்புத் தன்மை, மற்றும் அல்லாஹ்வின் வழியில் ஒன்றிணைதல் மட்டுமே நம்மை நிலைபேறான வளர்ச்சிக்கு அழைத்துச் செல்லும்” எனவும் தெரிவித்தார்.
அம்பாறை மாவட்ட ஜம்இய்யத்துல் உலமாவின் தலைவர் அஷ்ஷெய்க் ஐ.எல்.எம். ஹாஷிம் சூரி (மதனி) அவர்கள், அஷ்ஷெய்க் எஸ்.எச். ஆதம்பாவா மதனி அவர்களை நினைவுகூர்ந்து ஆழமான உணர்வுகளுடன் தலைமை உரையை வழங்கினார்.
அவர் தனது உரையில், ஆதம்பாவா மதனி அவர்கள் மார்க்கத்திலும் சமூகத்திலும் அரசியலிலும் பரந்த பார்வையுடன் சிந்தித்த ஆளுமை எனவும், மதம், கல்வி மற்றும் சமூக முன்னேற்றத்திற்காக அவர் செய்த தியாகங்களும் சேவைகளும் எக்காலத்திலும் மறக்க முடியாதவை எனவும் குறிப்பிட்டார்.
ஆதம்பாவா மதனி அவர்கள் மார்க்க அறிஞராக மட்டும் இல்லாமல், அரசியல் நுண்ணறிவும் சமூகப் புரிதலும் கொண்ட தலைசிறந்த ஆளுமை எனவும், சமூகத்தின் ஒற்றுமைக்காக எப்போதும் உழைத்தவர் எனவும் விளக்கினார். அவருடைய சிந்தனை எப்போதும் பரந்த கண்ணோட்டத்துடன் இருந்தது; மார்க்கம், அரசியல், சமூக உறவுகள் ஆகிய அனைத்தையும் இணைக்கும் வகையில் இருந்தது என்று அஷ்ஷெய்க் ஹாஷிம் சூரி தெரிவித்தார்.
ஆதம்பாவா மதனி அவர்கள் கல்வித் துறையில் ஆற்றிய பங்களிப்பையும் சிறப்பித்தார். ஷர்கியா, காசிபுல் உலூம்,அல் ஹாமியா, தைபா உள்ளிட்ட பல அரபுக் கல்லூரிகளில் அதிபராகச் செயற்பட்டதாகவும்; அவர் நிர்வாகத்தில் ஒழுக்கம், நேர்மை, தாழ்மை ஆகியவற்றின் முன்னுதாரணமாக இருந்தார் என்றும் அதிபராக இருந்தபோதும் எளிமையான வாழ்க்கை முறையிலேயே இருந்து, கல்வி நிர்வாகத்தைச் சிறப்பாக நடத்தி வந்தது அவரது திறமையையும் பொறுப்புணர்வையும் வெளிப்படுத்துவதாக அஷ்ஷெய்க் ஹாஷிம் சூரி குறிப்பிட்டார்.
மதீனாவில் இருந்த காலங்களில் ஆதம்பாவா மதனி அவர்களின் அமைதியான பண்பு, அமல்களில் ஈடுபாடு, குர்ஆன் பாராயணத்தில் ஆர்வம் ஆகியவை குறிப்பிடத்தக்கவை எனவும் அவர் குறிப்பிட்டார். “ஒரு நாளைக்கு இரண்டு ஜூஸ் பாராயணம் செய்வதற்கும் ஆர்வம் கொண்டவர். மார்க்க பண்பாட்டில் முழுமையாக ஈடுபட்டவர்” என அவர் நினைவுகூர்ந்தார்.
அவர் மேலும் வலியுறுத்தியதாவது, “ஒரு உலமாவை கௌரவிப்பது ஒரு இபாதத்தாகும். சமூகத்திற்கும் மதத்திற்கும் சேவை செய்தவர்களைப் பாராட்டுவது நமது கடமை. இத்தகைய ஆளுமைகள் சமூகத்திற்கு ஒளி பாய்ச்சும் விளக்குகள்” என்றார். சமூக நன்மைக்காக உழைத்தவர்களை நினைவுகூர்வது நம்முடைய மார்க்கப் பொறுப்பு என்றும் அவர் வலியுறுத்தினார்.
நிகழ்வில் கலந்து கொள்ள தேசிய தலைவர் அஷ்ஷெய்க் எம்.ஐ.எம். றிஸ்வி முப்தி அவர்கள் ஆர்வத்துடன் கிழக்குக்கு வந்தது குறித்து ஹாஷிம் சூரி மதனி அவர்கள் பாராட்டினார். எவ்வளவு பணிகள் இருந்தாலும் இவ்விழாவில் கலந்து கொள்வது தமக்குச் சரியான கடமையாகக் கருதி வந்ததற்காக றிஸ்வி ஹஸ்ரத்தின் மார்க்க அன்பையும் அவரின் பொறுப்புணர்வையும் அவர் புகழ்ந்தார்.
ஆதம்பாவா மதனி அவர்களைப் போல் மதம், கல்வி, அரசியல் மற்றும் சமூக துறைகளில் இணைந்த பணிகளைச் செய்த ஆளுமைகள் அரிது. அவரின் நினைவு இளைஞர் தலைமுறைக்கு ஒரு வழிகாட்டியாக நிற்கட்டும்” எனவும் தெரிவித்தார்.
நிகழ்வில் வரவேற்புரையை அம்பாறை மாவட்ட ஜம்இய்யதுல் உலமாவின் செயலாளர் அஷ்ஷெய்க் ஏ.எல். நாஸிர் கனி (ஹாமி, எம்.ஏ) நிகழ்த்தினார். இங்கு விசேட உரை ஒன்றை ஜம்இய்யதுல் உலமாவின் சாய்ந்தமருது கிளையின் தலைவர் அஷ்ஷெய்க் மீராசாஹிப் சலீம் (ஷர்கி) ஆற்றினார். அத்துடன் இங்கு வெளியிடப்பட்ட நினைவுச்சோலை சிறப்பு மலரின் அறிமுக உரையை அம்பாறை மாவட்ட ஜம்இய்யதுல் உலமாவின் பொருளாளர் அஷ்ஷெய்க் இசட்.எம். நதீர் நிகழ்த்தினார். அம்பாறை மாவட்ட ஜம்இய்யதுல் உலமாவின் உதவிச் செயலாளர் அஷ்ஷெய்க் எம்.எல். பைசால் (காஷிபி எம்.ஏ.) நிகழ்த்தினார்.
நிகழ்வின்போது அஷ்ஷெய்க் எஸ்.எச். ஆதம்பாவா (மதனி, எம்.ஏ.) தொடர்பான நினைவுச்சோலை சிறப்பு மலரினை சாய்ந்தமருது பிரதேச செயலாளர் ஆஷிக், முன்னாள் பிரதேச செயலாளர் ஏ.எல்.எம். சலீம், சாய்ந்தமருது மாளிகைக்காடு ஜும்ஆ பெரிய பள்ளிவாசலின் தலைவரும் தொழிலதிபருமான எம்.எஸ்.எம். முபாறக், நஸீர் மார்க்கட்டிங் நஸீர் உள்ளிட்டவர்களும் அம்பாறை மாவாட்ட பிரதேச ஜம்இய்யதுல் உலமா கிளை நிர்வாகிகளும் பெற்றுக்கொண்டார்.
அம்பாறை மாவாட்ட பிரதேச ஜம்இய்யதுல் உலமா கிளைகளின் பிரதிநிதிகளாலும் அஷ்ஷெய்க் ஆதம்பாவா மதனி அவர்கள் பொன்னாடைகள் மற்றும் நினைவுப்பரிசுகள் வழங்கி கெளரவிக்கப்பட்டது விஷேட அம்சமாகும்.
நிகழ்வில் பிராந்திய உலமாக்கள், கல்வியாலாளர்கள், வர்த்தகர்கள், ஆதம்பாவா மதனி அவர்களின் குடும்ப உறவினர்கள் நலன்விரும்பிகள் என பலரும் கலந்து கொண்டிருந்தனர்.
.jpg)
0 comments :
Post a Comment