அரசாங்கத்தின் 100 பசுமையான கரையோரப் பூங்காக்கள் அமைக்கும் தேசிய திட்டம் தொடர்ச்சியாக முன்னெடுக்கப்பட்டு வரும் நிலையில், பாராளுமன்ற உறுப்பினர் அபூபக்கர் ஆதம்பாவா அவர்களினால் சாய்ந்தமருது சதுக்கம் அண்மித்த பிரதேசத்திலும், கல்முனை – 2B பிரதேசத்திலும் புதிய பூங்காக்கள் அமைப்பதற்கான அடிக்கல் நாட்டும் நிகழ்வு நேற்று (01) திங்கட்கிழமை அங்குரார்ப்பணமாக நடைபெற்றது.
இந்த நிகழ்வில் சாய்ந்தமருது பிரதேச செயலாளர் எம். எம். ஆசிக், உதவி பிரதேச செயலாளர் எம். ஐ. முஆபிகா, கரையோரப் பாதுகாப்புத் திணைக்கள பொறியியலாளர் எம். துலஷிதாஸன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
பசுமைச் சூழலை மேம்படுத்தி, கடலோர மக்களுக்கு சுவாசிக்கும் இடங்களையும், ஓய்வு பெறும் சுற்றுலா தளங்களையும் வழங்கும் நோக்கில் அரசு முன்னெடுத்து வரும் இத்திட்டம், பாராளுமன்ற உறுப்பினர் அபூபக்கர் ஆதம்பாவாவின் சிறப்பு முன்மொழிவுக்கு அமைவாக கடலோரப் பாதுகாப்புத் திணைக்களத்தின் நிதி ஒதுக்கீட்டின் கீழ் நடைமுறைப்படுத்தப்படுகிறது.
இந்நிகழ்ச்சியின் போது உரையாற்றிய எம்.பி. ஆதம்பாவா, “கரையோரங்களை பாதுகாத்து, பசுமையை வளர்ப்பது எதிர்கால தலைமுறைக்கு வழங்கப்படும் விலைமதிப்பற்ற சொத்து ஆகும். சாய்ந்தமருது மற்றும் கல்முனை பகுதிகளில் மட்டுமல்லாது, கிழக்கு மாகாணம் முழுவதும் பசுமையான பூங்காக்கள் உருவாக்கப்படும்” எனக் குறிப்பிட்டார்.
மேலும், இத்திட்டத்தின் கீழ் இன்னும் 8 பூங்காக்கள் அமைப்பதற்கான அடிக்கல் நாட்டும் நிகழ்வுகள் வரவிருக்கும் நாட்களில் இடம்பெறவுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.

0 comments :
Post a Comment