பகிடிவதைக்கு எதிராக தென்கிழக்குப் பல்கலையில் மாணவர் பிரகடனம்!



ல்கலைக்கழகங்களில் பகிடிவதைகள் மீண்டும் தலைதூக்கக் முனையும் இன்றைய நிலையில் இலங்கையில் எந்தப் பல்கலைக்கழகங்களிலும் இடம்பெறாத நிகழ்வொன்று கடந்த 2025.07.01 ஆம் திகதி தென்கிழக்குப் பல்கலைக்கழகத்தில் இடம்பெற்றது. அண்மையில் புதிதாக உபவேந்தராக பதவியேற்ற பேராசிரியர் கலாநிதி எஸ்.எம். ஜுனைடீன் உள்ளிட்ட பல்கலைக்கழக உயர்மட்ட குழுவினர் பல்கலைக்கழகத்தில் இடம்பெற்ற நிகழ்வு ஒன்றில் பங்குகொண்டிருந்த போதே மாணவர்கள் முன்வந்து பகிடிவதைக்கு எதிரான பிரகடனம் ஒன்றை வெளியிட்டனர்.

இவர்களது பிரகடனத்தில் பின்வருமாறு குறிப்பிட்டுள்ளனர்:

2022 மற்றும் 2023 கல்வியாண்டு மாணவர்களாகிய நாங்கள், 2023 மற்றும் 2024 மாணவர்களை உள்ளீர்க்கும் இந்த மகத்தான நாளில் ஜூலை முதலாம் திகதி 2025ம் ஆண்டில் பின்வரும் உடன்பாட்டை பிரகடனப்படுத்துகிறோம் என்பதில் மகிழ்ச்சி அடைகின்றோம்.

இங்கு வருகை தந்திருக்கின்ற 2023/2024 கல்வியாண்டு மாணவர்களை எவ்வித பகிடிவதைகளுக்கும் உட்படுத்தாமல் சகோதர வாஞ்சையுடன் இந்தப் பல்கலைக்கழகத்திற்குள்ளும் வெளியிலும் அவர்களை நாங்கள் பாதுகாப்போம் என்று பிரகடனப்படுத்துகிறோம்.

மேலும், முதலாம் வருட மாணவர்களுக்கு உடல் ரீதியாகவோ, உள ரீதியாகவோ புண்படுத்தக்கூடிய எந்தவித நடவடிக்கைகளிலும் நாங்கள் ஈடுபடுவதில்லை என்ற உடன்பாட்டையும் உங்கள் முன் இப்போதே நாங்கள் பிரகடனப்படுத்துகிறோம்.

இந்தப் பிரகடனத்தை நாங்கள் எவ்வித அழுத்தமும் இன்றி நாங்களாகவே எங்கள் தொகுதி மாணவர்கள் சார்பில் தெளிவித்துக் கொள்கிறோம்.

வரலாற்று முக்கியத்துடன் மிகக் இந்த கைங்கரியத்தை ஏனைய பீட மாணவர்களும் பின்பற்ற வேண்டும் என்றும் வேண்டுகோள் விடுக்கின்றோம்.

இலங்கை தென்கிழக்குப் பல்கலைக்கழக உபவேந்தர் பேராசிரியர் கலாநிதி எஸ்.எம். ஜுனைடீன் மற்றும் இஸ்லாமிய கற்கைகள் அரபுமொழி பீடத்தின் பீடாதிபதி அஷ்- ஷெய்க் எம்.எச்.ஏ. முனாஸ் ஏனைய பீடாதிபதிகள், பல்கலைக்கழக நிர்வாக அதிகாரிகள் என அனைவர் முன்னிலையிலும் இந்த உடன்பாடை தெரிவிப்பதில் மகிழ்ச்சி அடைகின்றோம். என தெரிவிக்கப்பட்டுள்ளது.

குறித்த நிகழ்வில் மாணவர்கள் பிரகடனத்தை வெளியிடுவதற்கு முன்பாக உரையாற்றிய உபவேந்தர் ஜுனைடீன், மாணவர்கள் ஆர்வத்தோடு கல்வி நடவடிக்கைகளிலும் விரிவுரைகளிலும் தொடர்ச்சியாக ஈடுபடவேண்டும் என்றும் அதேவேளை பல்கலைக்கழக விதிகளையும் நடத்தை முறைகளையும் முழுமையாக கடைப்பிடிக்க வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டார்.

வன்முறைகளில் இருந்தும் தேவையற்ற குழப்பங்களில் இருந்தும் ஒதுங்கி இருப்பது மாணவர்களின் எதிர்கால முன்னேற்றத்துக்கு உறுதுணையாக அமையும் என்றும் தெரிவித்தார்.

பாடசாலைக் கல்வி முதல் பல்கலைக்கழக கல்வியைத் தொடர ஆரம்பிப்பது வரை பெற்றோர்கள் ஆற்றிய பிள்ளைகள் மீதான கண்காணிப்புகளை பல்கலைக்கழக கல்வி முடியும் வரை இரட்டிப்பாக்கி பார்க்கவேண்டும் என்றும் கேட்டுக்கொண்டார்.

பகிடிவதை மாணவர்களின் வாழ்வை சீரழித்துள்ளதாகவும் அரசு அதற்கு எதிராக இறுக்கமான சட்டங்களை அமுல்படுத்தியுள்ளதாகவும் இந்த விடயத்தில் மாணவர்களும் பெற்றோரும் மிகுந்த அவதானத்துடன் செயற்பட வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டார்.

அண்மையில் தென்கிழக்குப் பல்கலைக்கழகத்தில் இடம்பெற்றதாகக் கூறப்படும் பகிடிவதை தொடர்பாக உபவேந்தர் உள்ளிட்ட பல்கலைக்கழக நிர்வாகம் விரைந்து செயற்பட்ட விதம் பலராலும் மெச்சப்படுகின்றன.

குறித்த பகிடிவதைகளில் ஈடுபட்டதாகக் கூறப்படுவோர் சட்டத்தின் முன் நிறுத்தப்பட்டுள்ளனர். இவர்கள் சட்டத்தின் முன் குற்றவாளிகளாக அடையாளப்படுத்தப்படுவார்களானால்  உச்ச தண்டனைகளைப் பெறுவர்.


தென்கிழக்குப் பல்கலைக்கழக நிர்வாகம், மாணவர்களின் பாதுகாப்பு மற்றும் கல்வி நடவடிக்கைகளை முன்னெடுப்பதில் மிகுந்த கரிசனையுடன் பணியாற்றுவதாக மாணவர்கள் கருத்து வெளியிடுகின்றனர்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :