கம்பஹா மாவட்டத்தில் வெள்ளம் ஏற்படுவதை கட்டுப்படுத்துவதற்கு எடுக்கப்பட்டு வரும் நடவடிக்கைகளை தொடர்ந்தும் முன்னெடுப்பது தொடர்பாக கம்பஹா மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுத்தலைவரும் தொழில் பிரதியமைச்சருமான மஹிந்த ஜயசிங்க மற்றும் மாவட்ட செயலாளர் லலிந்த கமகே ஆகியோரின் தலைமையில் நேற்று முன்தினம் (17) இடம்பெற்ற மாவட்ட அனர்த்த முகாமைத்துவ உபகுழுக்கூட்டத்தில் கலந்துரையாடப்பட்டது.
இதன்போது கம்பஹா மாவட்ட அனர்த்த முகாமைத்துவ ஒருங்கிணைப்பு ஒன்றியம், நீர்ப்பாசன திணைக்களம், காணி அபிவிருத்தி கூட்டுத்தாபனம், மாகாண வீதி அபிவிருத்தி அதிகாரசபை மற்றும் பல அரச நிறுவனங்களை ஒருங்கிணைத்து பல மாதங்களாக முன்னெடுக்கப்பட்டு வரும் நடவடிக்கைகளான நீரோட்டத்திற்கு உள்ள தடைகளை நீக்குதல், கால்வாய்களின் இரு புறங்களையும் சுத்தம் செய்தல் மற்றும் கால்வாய்களை ஆழமாக்கல் ஆகிய நடவடிக்கைகளின் முன்னேற்றம், அவற்றை முன்னெடுப்பதில் ஏற்பட்டுள்ள பிரச்சினைகளை தீர்ப்பதற்கான வழிமுறைகள் தொடர்பாக கலந்துரையாடப்பட்டது.
2024 இல் ஆரம்பிக்கப்பட்ட கம்பஹா மாவட்டத்தில் வெள்ள அனர்த்தத்தை கட்டுப்படுத்துவதற்காக திட்டமிடப்பட்ட வேலைத்திட்டங்கள் 15 ஆகும்.
அதில் முக்கியமாக அத்தனகல்ல ஓயாவின் 7.4 கிலோமீட்டர் சுத்தம் செய்வதற்கு திட்டமிடப்பட்டிருந்த நிலையில், தற்போது 3 கிலோ மீட்டர் (40%) பகுதி நிறைவடைந்துள்ளது. மேலும் ஊருவல் ஓயாவின் 1 கிலோமீட்டர் சுத்தம் செய்யப்பட்டு வருகிறது.
வெள்ளத்தினால் பாதிக்கப்படும் பிரதேசங்கள் மற்றும் மாவட்டத்திலுள்ள சகல கால்வாய்களை வரைபடத்தில் சேர்த்தல், அது தொடர்பான தரவுகளை சேர்த்தலின் முக்கியத்துவம், திட்டமிடப்பட்டுள்ள வேலைத்திட்டங்களை உடனடியாக ஆரம்பிப்பதற்கான முன்னெடுப்பக்கள் தொடர்பாக மேலும் கலந்துரையாடப்பட்டது.
இக்கலந்துரையாடலில் கம்பஹா மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர்கள், மேலதிக செயலாளர் ஆசிரி வீரசேகர, மாவட்ட அனர்த்த முகாமைத்துவ உதவிப் பணிப்பாளர், பிரதேச செயலாளர்கள், அரச நிறுவன தலைவர்கள் உட்பட அதிகாரிகள் பலரும் கலந்து கொண்டிருந்தனர்.
0 comments :
Post a Comment