மலையக மக்களை இலங்கையின் அர்த்தமுள்ள குடிகளாக்கும் பொறுப்பு பிரித்தானியாவுக்கும் உண்டு.-உயர்ஸ்தானிகரைச் சந்தித்த திலகர் வலியுறுத்து



ரு நூறு வருடங்களாக இலங்கையில் மாற்றாந்தாய் மனப்பான்மையுடன் நடாத்தப்படும் இலங்கை மலையகத் தமிழ் மக்களை, இலங்கையின் அர்த்தமுள்ள குடிகளாக்குவதில் பிரித்தானியாவும் பங்களிப்பு செய்ய வேண்டியுள்ளது. ஏனெனில், இன்று மலையகம் அடைந்திருக்கும் 200 ஆண்டுகளின் ஆரம்பப் புள்ளி நீங்களே என இலங்கைக்கான பிரித்தானிய உயர்ஸ்தானிகரிடம் வலியுறுத்தியதாக மலையக அரசியல் அரங்கத்தின் தலைமை ஒருங்கிணைப்பாளரும் முன்னாள் நுவரெலியா மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான மயில்வாகனம் திலகராஜா தெரிவித்துள்ளார்.

இலங்கைக்கான பிரித்தானிய உயர்ஸ்தானிகர் அன்றூ பட்ரிக் அவர்களுக்கும் மலையக அரசியல் அரங்கத்துக்கும் இடையேயான சந்திப்பு அவரது உத்தியோகபூர்வ இல்லத்தில் (23/4) இடம்பெற்றது. உயர்ஸ்தானிகரின் அழைப்பின் பேரில் மலையக அரசியல் அரங்கத்தின் தலைமை ஒருங்கிணைப்பாளர் மயில்வாகனம் திலகராஜா, செயலாளர் நா. கிருஷ்ணகுமார் ஆகியோர் இச் சந்திப்பில் கலந்து கொண்டுள்ளனர்.

இந்தச் சந்திப்பில் கலந்துரையாடப்பட்ட விடயங்கள் குறித்து மலையக அரசியல் அரங்கம் அனுப்பி இருக்கும் ஊடக அறிக்கையில் பின்வருமாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.

இலங்கை மலையகத் தமிழ் மக்கள், இலங்கையில் தமது 200 ஆண்டு நிறைவை அனுஷ்டிக்கும் இந்த கால கட்டத்தில் பிரித்தானியாவுக்கான புதிய இலங்கைத் தூதுவராகிய நீங்கள் உங்களது இல்லத்துக்கு எம்மை அழைப்பு விடுத்தமை வரவேற்கத்தக்கது. ஏனெனில் எங்களின் 200 ஆண்டுகால இலங்கை வாழ்வைத் தொடக்கி வைத்தவர்கள் நீங்களே.நீங்கள் எங்களை அழைத்து வந்த நோக்கம் பொருளாதார அடிப்படையிலானது என்றபோதும், இலங்கைக்கு சுதந்திரம் வழங்குவதற்கு முன்னதாகவே எங்களை அரசியல் சமூகமாக ஏற்று அங்கீகரித்து இலங்கைப் பிரஜாவுரிமை வழங்கியதை நன்றியுடன் நினைவுகூர்கிறோம். எனினும் இலங்கை சுதந்திரம் அடைந்ததோடு எங்களது இலங்கைப் பிரஜாவுரிமையை எங்களது சுதேச அரசாங்கமே பறித்தது என்பதையும் வருத்தத்துடன் நினைவுபடுத்த வேண்டியவர்களாக உள்ளோம்.

இலங்கைக் குடியுரிமைப் பறிப்புக்கு முன்னதான ஐந்து ஆண்டுகளிலேயே இலங்கையர் எல்லோருக்கும் வழங்கிய இலவசக் கல்வி வாய்ப்பையும் எங்களுக்கு அரசு மறுத்தது. இன்றுவரை சுகாதாரம், குடிநீர், பாதை, காணி, வீடு, முகவரி என இன்னோரன்ன அடிப்படை உரிமைகள் அரச பொறிமுறையில் வழங்கப்படாது மறுக்கப்பட்ட வர்க்கமாக, பெருந்தோட்ட முறைமையை ஒளித்து கட்டும் நிகழ்ச்சி நிரலுடன் மலையக மக்களை சிதறடிக்கப்பட்ட சமூகமாக அலையவிடும் ஐம்பதாண்டு காலத்திட்டத்தின் அரைவாசி காலத்தை அரசு எட்டிவிட்ட நிலையிலேயே மக்களாகிய நாங்கள் 200 ஆண்டுகளை அனுஷ்டிக்கிறோம். அதனை ஒவ்வொரு தரப்பும் ஒவ்வொரு விதமாக நினைவு கூர்ந்தார்கள். சில அரச சார்பற்ற நிறுவனங்கள் இந்த நிலைமையைக் கொண்டாடவும் செய்தார்கள்.

எமது மலையக அரசியல் அரங்கம் இந்த 200 ஆண்டு கால போராட்ட வாழ்வின் அடிப்படையில் அடுத்த 100 ஆண்டுகளுக்கான அத்திவாரத்தை எவ்வாறு இடுவது ? எமக்கு மறுக்கப்பட்ட அரசியல் உரிமைகளை பெற்றுக் கொள்வதற்கான பொறிமுறை ஒன்றை அரசியல் அணுகுமுறையாக எவ்வாறு அணுகுவது? எனும் உரையாடல் வெளியை அரங்கத்தின் ஊடே உருவாக்கினோம். 24 தலைப்புகளில் இரண்டு ஆண்டுகளாக எங்களது ஆய்வாளர்களைக் கொண்டே ஆய்வு செய்து ஆவணமாக்கியுள்ளோம். இனி அவற்றை அரச கொள்கை வகுப்பாளர்கள்களுக்கு கொண்டு சேர்க்கும் வழிமுறைகளை ஆராய்ந்து வருகிறோம்.

இலங்கையில் எங்களது இன்றைய நிலைமைக்கு இலங்கை அரசு மாத்திரம் இன்றி இந்திய, பிரித்தானிய அரசுகளும் வகை கூற வேண்டும் என நாங்கள் எண்ணுகிறோம். ஆனால் இந்த இரண்டு அரசாங்கங்களும் கட்புலனாகும் கட்டுமான அபிவிருத்திக்கு காட்டும் ஆர்வத்தை கல்வி சார்ந்து காட்டுவதாக எங்களுக்குத் தெரியவில்லை. இலங்கையினால் இலவசக் கல்வி மறுக்கப்பட்ட நாற்பதாண்டு காலத்தை நாங்கள் எட்டிப்பிடிக்க வேண்டி இருக்கிறது. அந்த இடைவெளியை வேகமாக நிரப்ப சிறப்பு ஏற்பாடுகள் ( Affirmative Action) தேவைப்படுகிறது. இலங்கை அரசிடம் அப்படி ஒன்று இருப்பதாகத் தெரியவில்லை. சிடா, ஜி.டி.இசட் போன்ற திட்டங்களையே அவை கணக்கில் வைத்துள்ளன. எனவே இந்தியா, இங்கிலாந்து ஆகிய நாடுகள் எங்களது கல்விக்கு எவ்வாறு உதவலாம் என்பதை நல்லதொரு முன்மொழிவாக நாங்கள் தயார் செய்துள்ளோம். இந்த முன்மொழிவின் ஊடாக குறித்த கால எல்லையில் மலையக சமூகத்தில் கலாநிதிகளை, முதுமாணிகளை, பட்டதாரிகளை, கணித விஞ்ஞான ஆசிரியர்களை உருவாக்க முடியும். இதன் மூலம் திட்ட காலத்தின் பின்னதாக எமது சமூகத்தில் அதனை நிலைபெறச் செய்ய முடியும்.அதற்கான பொறுப்பை சமூகம் ஏற்றுக் கொள்ள வேண்டும்.

மலையக மக்களின் சுகாதார விருத்தி சார்ந்து பிரித்தானிய அரசின் அபிவிருத்தி முகவரான ஜனநாயகத்துக்கான வெஸ்ட்மினிஸ்ட்டர் மன்றம் எடுக்கும் முன்முயற்சிகளுக்கு நன்றியும் பாராட்டுகளும் தெரிவிக்கிறோம். ஆனால் அவை அரசின் சுகாதார கொள்கையுடன் இணைந்து செல்கிறதா என்பதை கவனத்தில் கொள்வது அவசியம். எனது பாராளுமன்ற காலத்தில் சுகாதார மேற்பார்வைக் குழு தலைவராக செயற்பட்டு முழுமையான உத்தியோகபூர்வ அறிக்கை ஒன்றை இலங்கைப் பாராளுமன்றத்துக்கு சமர்ப்பித்துவிட்டு வந்தேன். அதில் தொடர்புடைய ஐந்து அமைச்சுக்களின் எழுத்துமூல உடன்பாடு பின்னிணைப்பாக சேர்த்துள்ளேன். அதனை உள்வாங்கிக் கொள்வது தோட்ட சுகாதார முறையை அரச சுகாதார முறையைக்குள் கொண்டு வருவதற்கான அடிப்படையைக் கொடுக்கும்.

எது எவ்வாறெனினும் மலையக மக்களை காணி உரிமையற்ற மக்களாகவே 200 வருடங்கள் வைத்து இருக்கும் இலங்கை அரசு 225-250 ஆண்டு காலத்திற்கு இவ்வாறே இழுத்துச் சென்று விடுமானால் இந்தச் சமூகம் சிதறுண்ட சமூகமாக, இன அடையாளம் இழந்த சமூகமாக மாற்றப்படும் அபாயமே உள்ளது.

எனவேதான் தெற்கே சிங்கள மக்களைப் போல மலையகப் பெருந்தோட்ட மக்களையும் சிறு தோட்ட உடமையாளர்களாக்கும் முதன்மைக் குறிக்கோளுடன் மலையக அரசியல் அரங்கத்தின் அரசியல் நகர்வுகளை முன்வைக்கின்றோம். அதுவரை நாங்கள் இந்த நாட்டில் பேப்பரில் கொடுக்கப்பட்ட வாக்களிக்கும் உரிமை மட்டும் பெற்ற மக்களாகவே வாழவைக்குப்படுவோம்.
தற்போது அரசாங்கத்தினால் நடைமுறைப்படுத்தப்படும் 'உறுமய' காணி வழங்கலில் இது வெட்ட வெளிச்சமாகத் தெரிகிறது. காணி உரிமையை முழுமையாகப் பெற்றுக் கொள்ளும்போதே மலையகத் தமிழ் மக்கள் இலங்கையில் அர்த்தமுள்ள பிரஜை எனும் அந்தஸ்த்தினைப் பெறுவர். அதற்காகவே நாங்கள் போராடுகிறோம். அதற்கு எங்களை இந்த நாட்டுக்கு அழைத்து வந்த பிரித்தானியாவுக்கும் பொறுப்பு இருக்கிறது. அதனை நிறைவேற்றுவீர்கள் என எதிர்பார்க்கிறோம்" என தெரிவிக்கப்பட்டுள்ளது. சமூகத்தின் கோரிக்கையாக உள்ள அர்த்தமுள்ள குடியுரிமை விடயத்தை வலியுறுத்தும் சுயாதீன ஆய்வறிக்கை ஒன்றையும் கையளித்துள்ளனர்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :