இலங்கையின் சுகாதார சேவைகளின் வரலாறும், கிழக்குக் கரையின் சுகாதாரமும்.- டாக்டர் கியாஸ் சம்சுடீன்தொடர் 09
மருத்துவ மற்றும் பொது சுகாதார சேவைகள்
ராணுவ மற்றும் தோட்ட மருத்துவ சேவையிலிருந்து உருவாகிய 1859 ஆம் ஆண்டின் சிவில் மருத்துவத் துறை ஆரம்பத்தில் முதன்மையாக நோய்வாய்ப்பட்டவர்களைக் கவனிப்பதிலும் , பெரியம்மைபோன்ற தொற்றுநோய்களைக் கட்டுப்படுத்துவதிலும் கவனம் செலுத்தினாலும், 1913 இல் உருவான பொது சுகாதார சேவைகள் கிளை நோய் தடுப்பில் இன்றுவரை பாரிய பங்காற்றுகிறது.

1912 ஆம் ஆண்டு இலங்கையில் துப்புரவு துறை (Sanitation Department)அமைப்பது குறித்து பரிசீலிக்க ஆளுநரால் ஒரு குழு நியமிக்கப்பட்டு அதன் பரிந்துரையில் 1913 இல் இத்துறையின் சுகாதாரக் கிளையை உருவாகும் வரை, நோய்வாய்ப்பட்டவர்களுக்கு சிகிச்சை அளிப்பதற்கும் , நாட்டின் பொது சுகாதாரத் தேவைகளை கவனிப்பதற்கும் ஒரே வகை மருத்துவ அதிகாரிகளை மருத்துவத் துறை கொண்டிருந்தது .
ராக்ஃபெல்லர் அறக்கட்டளையின் ஒத்துழைப்புடன் 1916 இல் தொடங்கப்பட்ட "ஹூக்-வேர்ம்" கொழுக்கிப் புளு (Hook Worm) பிரச்சாரம், பொது சுகாதாரப் பணியின் மதிப்பை உயர்த்தியது. அத்துடன் பொது சுகாதாரத் திட்டத்தில் தனிநபர் சுகாதாரம் இணைக்கப்பட வேண்டியதன் அவசியத்தையும் உணர்த்தியது .
இதன் விளைவாக, 1926 ஆம் ஆண்டு ராக்பெல்லர் அறக்கட்டளைக்கும் காலனித்துவ அரசாங்கத்திற்கும் இடையிலான கூட்டு முயற்சியாக பரீட்சாத்த அடிப்படையில், களுத்துறையில் சுகாதாரப் பிரிவு நிறுவப்பட்டது.

இந்த முதல் சுகாதாரப் பிரிவின் வேலைத் திட்டத்தில் மகப்பேறு மற்றும் குழந்தைகள் நலச் சேவைகள், சுகாதாரக் கல்வி, தொற்று நோய்கள் தடுப்பு பணி மற்றும் பாடசாலை மருத்துவ ஆய்வுகள் ஆகியவை அடங்கும்.

1937 ஆம் ஆண்டில், அனைத்து மாகாணங்களுக்குமான இந்த அலகுகளின் பெருக்கத்துடன் ஒரே நேரத்தில் மலேரியா கட்டுப்பாட்டு பணியும் சுகாதார அலகு திட்டங்களில் இணைக்கப்பட்டது.

எனவே 1926 ஆம் ஆண்டில் சுகாதார பிரிவு முறைமையை உருவாக்கியதன் மூலம் நோய் தடுப்பு சேவைகள் (Preventive Service ) மேலும் மறுசீரமைக்கப்பட்டன.

சுகாதார சேவைகளின் நிர்வாகத்தில் அடுத்த முக்கியமான அடையாளமாக, 1926 ஆம் ஆண்டில், மருத்துவ மற்றும் சுகாதார சேவைகள் இயக்குனரின் கீழ் நோய் சிகிச்சை மற்றும் நோய் தடுப்பு சேவைகளின் ஒருங்கிணைப்பு இருந்தது.

இரு சேவைகளையும் ஒருங்கிணைக்கும் W.H.O. போன்ற சர்வதேச அமைப்புகளின், பரிந்துரைக்கு பல ஆண்டுகளுக்கு முன்பே இலங்கையில் இது நடைமுறைக்கு வந்தது .

சுகாதார பிரிவு தற்பொழுது முழு தீவையும் உள்ளடக்கிய புவியியல் ரீதியாக நன்கு வரையறுக்கப்பட்ட (354) சுகாதார பிரிவுகள் (MOH) மூலம் தடுப்பு சுகாதார சேவைகள் வழங்குகிறது.

சுகாதார மருத்துவ அதிகாரி (MOH) மற்றும் சமூக அடிப்படையிலான நிபுணர்களின் குழு இதற்கு பொறுப்பாக இருக்கிறது.

1931 இல் டொனமோர் அரசியலமைப்பின் படி தீவின் மருத்துவ மற்றும் பொது சுகாதார சேவைகளுக்குப் பொறுப்பான சுகாதார அமைச்சரை நியமித்தது நோய் சிகிச்சை மற்றும் தடுப்புப் பணிகளுக்கு(Preventive and Curative Service) பெரும் உத்வேகத்தை அளித்தது.
1947 இல் சோல்பரி அரசியலமைப்பின் கீழ் ஒரு அமைச்சின் கீழ் சுகாதாரம் மற்றும் உள்ளூராட்சியை ஒன்றிணைத்தது தீவின் சுகாதார சேவைகளின் பரிணாம வளர்ச்சியில் மேலும் ஒரு படியாகும்.

தற்போது சுகாதார அமைச்சு மற்றும் உள்ளூராட்சி அமைச்சு என இரண்டு தனித்தனி அமைச்சுகளாக பிரிக்கப்பட்டுள்ளது.

1952 ஆம் ஆண்டின் 12 ஆம் இலக்க சுகாதாரச் சேவைச் சட்டம் சுகாதார திணைக்களத்தை மருத்துவ சேவைகளின் பிரிவு, பொது சுகாதார சேவைகளின் பிரிவு மற்றும் ஆய்வக சேவைகளின் பிரிவு என மூன்று பிரிவுகளாக பிரிக்க வழிவகுத்தது. அத்துடன் சுகாதார சேவைகள் இயக்குனருக்கு 3 துணை இயக்குனருக்கும் வழிவகுத்தது.

அதன் படி 1952 இற்கு பின் சுகாதார சேவைகள் இயக்குனருக்கு மூன்று துணை இயக்குனர்கள் காணப்பட்டனர்.

நோய் தீர்க்கும் பணிக்கு பொறுப்பான "மருத்துவ சேவைகள்" துணை இயக்குநர், தடுப்புப் பணிகளுக்குப் பொறுப்பான "பொது சுகாதார சேவைகளின்" துணை இயக்குநர் மற்றும் "ஆய்வக சேவைகளின்' துணை இயக்குநர்.
இந்த காலப்பகுதியில் சுகாதார சேவைகள் திணைக்களம் எதிர்பார்த்திருக்க முடியாத அளவிற்கு விரிவடைந்தது. அக்காலத்தில் மற்ற நாடுகளின் மத்திய மருத்துவ நிர்வாகங்களைப் போலல்லாமல், இந்தத் துறையானது தேசிய அளவில் முழு நாட்டிற்கும் நோய்த்தடுப்பு மற்றும் தடுப்பு சேவைகளுக்கு மட்டுமே பொறுப்பாயிருந்தது . எமது சுகாதார சேவை 50 களிலேயே ஒரு தேசிய சுகாதார சேவை என்ற நிலையை எட்டியது .

80 களில் சமூக சுகாதார சேவைகள் (பொது சுகாதாரம்) ஓரளவு நன்கு ஒழுங்கமைக்கப்பட்ட பொது சுகாதார சேவையானது. ஒவ்வொரு சுகாதார அலகு பகுதியிலும் விரிவான மற்றும் நன்கு திட்டமிடப்பட்ட தடுப்பு சுகாதாரப் பாதுகாப்புத் திட்டம் காணப்பட்டது . இத் திட்டத்தின் முக்கிய கூறுகள் பின்வருமாறு காணப்பட்டது :

(1) முக்கியமான தரவுகளின் சேகரிப்பு, பகுப்பாய்வு மற்றும் விளக்கம்.

(2) தொற்று நோய்களின் கட்டுப்பாடு.

(3) பாடசாலை சுகாதாரம் உட்பட தாய் மற்றும் குழந்தை ஆரோக்கியம்.

(4) சுற்றுச்சூழல் ஆரோக்கியம்.

(5) சுகாதார கல்வி.

அப்போது 102 சுகாதாரப் பிரிவுகள் காணப்பட்டன. ஒவ்வொரு பிரிவும் சுகாதார மருத்துவ அதிகாரி மற்றும் பொது சுகாதார ஆய்வாளர்கள், பொது சுகாதார செவிலியர்கள் மற்றும் பொது சுகாதார மருத்துவச்சிகள் அடங்கிய பொது சுகாதார பணியாளர்கள் குழுவால் நிர்வகிக்கப்பட்டது. இந்த சேவையானது மக்களின் சுகாதார நிலைக்கு குறிப்பிடத்தக்க பங்களிப்பை தொடர்ந்து வழங்கிவந்தது. சின்னம்மை, காலரா, மலேரியா போன்ற முக்கிய தொற்று நோய்கள் கட்டுக்குள் வைக்கப்பட்டன அல்லது முற்றாக ஒழிக்கப்பட்டன. மகப்பேறு இறப்பு விகிதம் மற்றும் சிசு இறப்பு விகிதத்தில் குறிப்பிடத்தக்க குறைப்பு ஏற்பட்டது. ஒரு விரிவான தாய் மற்றும் குழந்தை சுகாதார சேவை பொதுவாக தாய்மார்களுக்கு அவர்களின் வீடுகள், கிளினிக்குகள், மகப்பேறு இல்லங்கள் மற்றும் அருகாமையில் அமைந்துள்ள பிற நிறுவனங்களில் கிடைத்தது .

இந்த சேவைகள் துரதிருஷ்டவசமாக வேகமாக அதிகரித்து வரும் மக்கள் தொகைக்கேற்ப செயல்படவில்லை. சராசரியாக 40,000 மக்கள்தொகையைப் பராமரிப்பதற்காக முதலில் திட்டமிடப்பட்டு, ஒரு சுகாதாரப் பிரிவு அப்போது 150,000 க்கும் அதிகமான மக்கள்தொகையின் தேவைகளைப் பூர்த்தி செய்ய வேண்டியிருந்தது . அத்தகைய ஒரு விரிவான தடுப்புத் திட்டத்திற்கான மனிதவளத் தேவைகள் தேவைகளை விட மிகவும் குறைவாகவே காணப்பட்டன. அப்போது பொது சுகாதாரத் திட்டங்கள் புறக்கணிக்கப்படுவதன் விளைவாக மருத்துவமனை அல்லது நோயாளி பராமரிப்புத் திட்டங்களுக்கு முக்கியத்துவம் கொடுப்பதில் மாற்றம் ஏற்பட்டது. இந்த முக்கியமான சேவையை வலுப்படுத்த வேண்டியதன் அவசியம் அரசாங்கத்தின் கவனத்தைப் பெற்றதும் சுகாதார நிர்வாகத்தின் புதிய கொள்கையின் கீழ் சுகாதார திட்டத்தின் இந்த அம்சத்திற்கு அதிக முன்னுரிமை வழங்கப்பட்டுள்ளது.


தற்போது சுகாதார அமைச்சு பின்வரும் பிரிவுகளை கொண்டிருக்கிறது

சுகாதாரத் துறை

நோய் தீர்க்கும் சேவைகள்.

மத்திய அமைச்சின் கீழ் உள்ள வைத்தியசாலைகள்.

வாய் வழி சுகாதார சேவைகள்.

பெருந் தோட்டம் மற்றும் நகர சுகாதார சேவைகள்.

நோய்த் தடுப்பு பராமரிப்பு சேவைகள்

தொற்று நோய்களைக் கட்டுப்படுத்தல்.

நோய் காவியின் ஊடாகப் பரப்பப்படும் நோய்களைக் கட்டுப்படுத்தல்.

தொற்றா நோய்களைக் கட்டுப்படுத்தல்.

தாய் சேய் சுகாதார சேவைகள்.

போஷாக்கு.

அனர்தத்துக்கு முன் ஆயத்தம் மற்றும் பதில் சேவைகள்.


சுற்றுச்சூழல் மற்றும் தொழில்சார் ஆரோக்கியம்.

சுகாதார மேம்பாடு மற்றும் உணவு பாதுகாப்பு.

இளைஞர்கள் முதியவர்கள் மற்றும் ஊனமுற்றோருக்கான சேவைகள்.

பொது சுகாதார கால்நடை சேவைகள்.

புகையிலை மற்றும் மதுபானங்கள் கட்டுப்பாடு.

இதர சேவைகள்

கல்வி, பயிற்சி மற்றும் ஆராய்ச்சி.

ஆய்வுகூடச் சேவைகள்.

குருதி மாற்றீடு சேவைகள்.

சுகாதார சேவைகளின் தரம் மற்றும் பாதுகாப்பு.

மருத்துவ வழங்கல் சேவைகள்.

உயிரியல் மருந்துவ பொறியியல் சேவைகள்.

முகாமைத்துவம் அபிவிருத்தி மற்றும் திட்டமிடல் சேவைகள்.

மனித வள மேம்பாடு.

நிதி சேவைகள்.

மருத்துவ புள்ளிவிவர சேவைகள்.

தனியார் சுகாதார சேவைகளை ஒழுங்குபடுத்தல்.

மருந்துகள் மற்றும் மருத்துவ சாதனங்களின் கட்டுப்பாடு.

சுதேச மருத்துவத் துறை.

மேலும் பதினைந்திற்கும் மேற்பட்ட பிரதி பணிப்பாளர் நாயகங்கள் ஒவ்வொரு பிரிவுக்கும் பொறுப்பாக இருக்கின்றனர்.

நோய்வாய்ப்பட்டவர்களின் கவனிப்பைப் பொறுத்தவரை, பொறுப்பு கிட்டத்தட்ட முற்றிலும் துறை சார்ந்தது.

தொடரும்.....
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :