200வது வருடத்திலாவது மலையக மக்களின் அபிலாஷைகள் ஈடேறட்டும் - புதுவருட வாழ்த்துச் செய்தியில் உதயா எம்பி உருக்கம்



பிறக்கும் 2023 புதுவருடம் நாட்டு மக்களுக்கு வாழ்வில் அமைதியையும் சுபீட்சத்தையும் ஏற்படுத்தி நாட்டின் பொருளாதார மீட்சிக்கு வித்திடும் வருடமாக அமைய வாழ்த்துவதாக தொழிலாளர் தேசிய சங்கத்தின் தலைவரும் ஐக்கிய மக்கள் சக்தியின் நுவரெலியா மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமாகிய மயில்வாகனம் உதயகுமார் தெரிவித்துள்ளார்.

புது வருடத்தை முன்னிட்டு விடுத்துள்ள வாழ்த்துச் செய்தியில் பாராளுமன்ற உறுப்பினர் மயில்வாகனம் உதயகுமார் மேலும் தெரிவிக்கையில்,

உலகில் கொரோனா தொற்று பரவிய 2019 வருடம் தொடக்கம் இன்றுவரை பல்வேறு நாடுகள் பொருளாதார ரீதியில் பாதிப்பை எதிர்நோக்கி வருகின்றன. குறிப்பாக நமது இலங்கை நாடானது மிகவும் பாதிப்படைந்த பொருளாதார வீழ்ச்சியை சந்தித்துள்ளது. நாட்டு மக்களிடையே குறிப்பாக மலையக மக்களிடையே வறுமை, போஷாக்கின்மை, வருமானமின்மை அதிகரித்துச் செல்கிறது.

இதற்கு தொற்று நோய், நிர்வாகச் சிக்கல்கள் காரணமாக இருந்த போதிலும் நாட்டு மக்களின் அன்றாட பொருளாதாரம் மற்றும் வாழ்வாதாரத்திற்கு இது பேரிடியாக மாறியுள்ளது. இதனால் பெரிய வியாபாரம் தொடக்கம் சிறிய சுயதொழில் வரை அனைத்தும் பாதிக்கப்பட்டுள்ளது. ஆயிரக்கணக்கானவர்கள் தொழில் வாய்ப்பை இழந்துள்ளனர். கற்றவர்கள், புத்திஜீவிகள், பாமர மக்கள் என பலர் நாட்டை விட்டு வௌியேறியுள்ளனர். பலர் வாழ்வாதார வழியின்றி தவிக்கின்றனர்.

எனவே இவ்வாறான இன்னல்களில் இருந்து நாட்டு மக்களை சுபீட்சமான பாதைக்கு மீட்டெடுக்கும் ஆண்டாக பிறக்கும் 2023ஆம் ஆண்டு அமைய வேண்டும் என எல்லோருக்கும் பொதுவான இறைவனை பிரார்த்திக்கிறேன்.

குறிப்பாக மலையக மக்கள் இலங்கைக்கு வருகை தந்து 2023ம் ஆண்டு 200 வருடங்கள் பூர்த்தியாகிறது. இன்னமும் இந்த மக்களின் வாழ்க்கைத் தரம் உயரவில்லை. இன்னும் முழுமையான அரசியல், அபிவிருத்தி மற்றும் உரிமைகளுக்காக ஏங்கி நிற்கும் மக்களாகவே மலையக மக்கள் உள்ளனர். அதனால்தான் 2023ம் ஆண்டை மலையக மக்களுக்கான ஆண்டாக அறிவித்து அவர்களின் முன்னேற்றத்தில் கூடிய கவனம் செலுத்துமாறு நாம் பாராளுமன்றில் வலியுறுத்தியுள்ளோம். 2023ம் ஆண்டில் மலையக மக்களின் பிரச்சினைகள் கனிசமான அளவு நிவர்த்தி செய்யப்பட வேண்டும் என புது வருடத்தில் பிரார்த்தனை செய்வோம். 200வது வருடத்திலாவது மலையக மக்களின் அபிலாஷைகள் நிறைவு பெறட்டும்.

புதிய எழுச்சியுடன் புதிய சிந்தனைகளுடன் புதிய மாற்றத்துடன் புதிய வருடத்தில் காலடியெடுத்து வைத்து நாட்டின் முன்னேற்றத்திற்கு ஒருதாயின் பிள்ளைகளாக ஒன்றிணைவோம்.

இவ்வாறு பாராளுமன்ற உறுப்பினர் மயில்வாகனம் உதயகுமார் தெரிவித்துள்ளார்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :