கிழக்கில் 397 கணித பாட ஆசிரியர்களுக்கு பற்றாக்குறை! ஆனால் கல்முனையில் 397 ஆசிரியர்கள் மேலதிகம்!! சமப்படுத்துமாறு ஆளுநர் உத்தரவு!



றாணமடு ஆசிரியர் தினவிழாவில் கிழக்கு மாகாண கல்வி பணிப்பாளர் தகவல்.
காரைதீவு சகா-
கிழக்கு மாகாணத்தில் 397 கணித பாட ஆசிரியர்களுக்கு தட்டுப்பாடு நிலவுகிறது. அதேவேளை கிழக்கு மாகாணத்தில் அதிகூடிய 397ஆசிரியர்கள் கல்முனை வலயத்தில் இருக்கிறார்கள். எனவே இதனை சமப்படுத்துமாறு கௌரவ ஆளுநர் செயலாளரூடாக எனக்கு பணித்திருக்கின்றார்.

இவ்வாறு கிழக்கு மாகாண கல்விப் பணிப்பாளர் திருமதி நகுலேஸ்வரி புள்ளநாயகம் நேற்று றாணமடு இந்து மகா வித்தியாலய ஆசிரியர் தின விழாவில் பேசுகையில் குறிப்பிட்டார்.

றாணமடு இந்து மகாவித்தியாலய ஆசிரியர் தின விழா நேற்று முன் தினம்(25) செவ்வாய்க்கிழமை அதிபர் கே.கதிரைநாதன் தலைமையில் நடைபெற்றது.

விழாவில் பிரதம அதிதியாக கிழக்கு மாகாண கல்வி பணிப்பாளர் திருமதி நகுலேஸ்வரி புள்ளநாயகம், கௌரவ அதிதிகளாக சம்மாந்துறை வலய கல்விப் பணிப்பாளர் எஸ் எம் எம். அமீர், பிரதி கல்விப் பணிப்பாளர்களான திருமதி நிதர்ஷினி மகேந்திரகுமார் ,ஏஎல் .அப்துல் மஜீத் ,உதவி கல்வி பணிப்பாளர்களான வி.ரி.சகாதேவராஜா ,ஏ.முஸ்ரக்அலி ,ஆசிரிய ஆலோசகர் பி. குணரெத்ன, கோட்ட இணைப்பாளர் எஸ்.பிரகதீஸ்வரன் ஆகியோரும் கலந்து கொண்டார்கள்.

அங்கு மேலும் பணிப்பாளர் உரையாற்றுகையில்..

பாடசாலை என்பது ஒரு சமூக நிறுவனமாகும். சமூகத்தின் எதிர்பார்ப்புகளை அந்த நிறுவனம் நிறைவேற்றுவதாக இருந்தால் சமூகத்தை உள்வாங்க வேண்டும். அது இந்த பாடசாலையில் நடைபெறுவது பாராட்டுக்குரியது. அதிகஸ்ட பாடசாலையான இங்கு ஆண் ஆசிரியர்கள் அதிகமாகி இருப்பது வியப்புக்குரியதாகவும் மகிழ்ச்சியானதாகவும் இருக்கிறது.

இப் பாடசாலை பல விடயங்களிலும் சாதனை படைத்து வருவதும் பாராட்டுக்குரியது.

பொதுவாக கிழக்கு மாகாணத்தில் 397 கணித பாட ஆசிரியர்களுக்கு பற்றாக்குறை நிலவுகிறது .விஞ்ஞான மற்றும் தகவல் தொழில்நுட்ப பாடத்துக்கான ஆசிரியர்களுக்கு வலயம் சார்ந்த பற்றாக்குறை நிலவுகின்றது..
தேவையான தொழில் உலகத்தை நோக்கிய பயணம் எம்மிடையே குறைவு. இன்று உலகில் தொழில் நுட்ப ரீதியான மாற்றங்கள் படுவகமாக நடந்து கொண்டு வருகின்றன. ஒரு வகையில் இன்றைய பொருளாதார நெருக்கடிக்கு காரணமும் எம்மிடம் உள்ள குறைபாடு தான்.
எனவே எதிர்காலத்தில் உயர்தர கணித விஞ்ஞான பாடங்களில் மாணவர்கள் கற்பதற்கு ஊக்குவிக்க வேண்டும்.

அதிர்ஷ்டவசமாக சம்மாந்துறை வலயத்தில் ஆசிரியர்கள் பற்றாக்குறை இல்லை என்று சொல்லலாம்.
ஆனால் அண்மையில் இருக்கக்கூடிய கல்முனை வலயத்தில் கிழக்கு மாகாணத்தில் அதிக கூடிய மிகையான ஆசிரியர்கள் இருக்கின்றார்கள். 397 ஆசிரியர்கள் அதிகமாக இருக்கின்றார்கள். உலக வங்கி மற்றும் ஏனைய திட்டங்கள் மற்றும் கணக்காய்வு நிறுவனத்தின் அறிக்கைகளின் படி கல்முனை வலயத்திலே ஏகப்பட்ட பிரச்சனைகள் கேள்விகள் வருகின்றன. இதனை சீர்செய்யுமாறு கௌரவ கிழக்கு மாகாண ஆளுநர் எமது செயலாளரூடாக எனக்கு பணிப்புரை வழங்கி இருக்கின்றார். அதனை தொடங்க வேண்டும்.
கல்முனையில் இருந்து இங்கு வந்து கற்பிக்கின்ற ஆசிரியர்களை பாராட்ட வேண்டும். மாணவருக்கு உரிய சேவையை நாம் வழங்கும்போது காலத்தால் அழியாத புகழை பெறுவோம்.
என்னிடம் துறைநீலாவணையில் படித்த மாணவர்களான இளங்கோ, சர்வேஸ்வரன் ஆகியோர் இங்கு ஆசிரியர்களாக எனக்கு பாராட்டும் உரையும் நிகழ்த்தினார்கள். இது உண்மையிலேயே அவர்கள் வாழ்வில் மறக்க முடியாமல் இருக்கும்.
எமது நிபுணத்துவங்கள் மாணவர்களில் பிரதிபலிக்க வேண்டும். ஒருவேளை மாணவர்கள் பரீட்சைகளில் தவறுகின்ற பொழுது எமது நிபுணத்துவத்தை நாம் சந்தேகிக்க வேண்டி நைரிடுகிறது. அதாவது நாம் சுய விமர்சனம் சுய பரிசீலனை செய்ய வேண்டியிருக்கிறது. ஒரு பாடசாலையின் வளர்ச்சியில் தான் அந்த சமூகத்தின் வளர்ச்சி தங்கி இருக்கின்றது. ஆசிரியர், அதிபர் இன்று இருப்பார் நாளை போவார். ஆனால் பாடசாலை இருக்கும் .எனவே நாங்கள் பாடசாலையை நேசிக்கின்ற அளவுக்கு அந்த பாடசாலை வளரும் என்பதில் ஐயமில்லை. அனைவருக்கும் வாழ்த்துக்கள் என்றார்.

வாழ்நாள் சாதனையாளர் விருது பெற்ற மாகாண கல்வி பணிப்பாளர் திருமதி நகுலேஸ்வரி புள்ளநாயகம் பாடசாலையாலும் வலயத்தாலும் பொன்னாடை போர்த்தி கௌரவிக்கப்பட்டார்.

விழாவில், ஆசிரியர்கள் ஆளுருய மாலை சூட்டி மாணவர்களால் கௌரவிக்கப்பட்டார்கள். அனைவருக்கும் நினைவு சின்னங்கள் அதிதிகளால் வழங்கப்பட்டன.
அதே வேளை தேசிய ரீதியில் தெரிவான கபடி மற்றும் எல்லே வீராங்கனைகள் சிறப்பு பரிசுகள் நினைவு சின்னங்கள் வழங்கி கௌரவிக்கப்பட்டார்கள்.

விழாவில் வலய கல்வி பணிப்பாளர் எஸ் எம் அமீர், உதவிக் கல்விப் பணிப்பாளர் வி.ரி.சகாதேவராஜா ஆகியோர் சிறப்புரையாற்றினார்கள்.

பாடசாலை அபிவிருத்திச் சங்க செயலாளர் கே.குணரெத்தினம், பழைய மாணவர்கள் சங்க உறுப்பினர்களும் கலந்து கொண்டனர்.
ஆசிரியர் தினேஷ் நன்றியுரையாற்றினார்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :