இலங்கையின் முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவிற்கு வெளிநாடுகளில் புகலிடத்தை பெற்றுக் கொடுக்கும் வகையிலேயே, அவரது நெருங்கிய நண்பரான ஜனாதிபதி சட்டத்தரணி எம்.யு.அலி சப்ரி, வெளிவிவகார அமைச்சராக நியமிக்கப்பட்டுள்ளதாக தமிழ்த்தேசியக் கூட்டமைப்பின் பேச்சாளர் சட்டத்தரணி எம்.ஏ. சுமந்திரன் தெரிவித்துள்ளமை முட்டாள்த்தனமான கருத்தாகும் என்பதுடன் இவர்கள் கள்ளத்தனமாக கல்முனையை காவு கொள்ள ஒப்பந்தம் செய்தது தோல்வியுற்றதால் ஏற்பட்ட மன உளைச்சளுமாகும் என ஐக்கிய காங்கிரஸ் கட்சித்தலைவர் முபாறக் அப்துல் மஜீத் தெரிவித்துள்ளார்.
அவர் மேலும் தெரிவித்ததாவது, அமைச்சர் அலி சப்ரி அவர்கள் மிகத்திறமையான புத்திஜீவி என்பதை முழு நாடும் அறியும். அவர் நீதி அமைச்சராகவும் நிதி அமைச்சராகவும் இருந்துள்ளார். முன்னாள் ஜனாதிபதியால் திறமைசாலி என இனங்காணப்பட்டவர். அதே போல் இந்நாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க அவர்களும் அலி சப்ரியின் திறமையை கருத்திற்கொண்டே வெளிநாட்டு விவகாரங்களுக்கான அமைச்சராக நியமித்துள்ளார்.
அது மட்டுமன்றி வெளிவிவகார அமைச்சர் ஒருவரால் முன்னாள் ஜனாதிபதிக்கு புகலிடம் பெற்றுக்கொடுக்க முடியும் என சொல்வதன் மூலம் சுமந்திரனுக்கு சர்வதேச சட்டமும் தெரியாது என நினைக்க தோணுகிறது. அப்படி முடியும் என்றிருந்தால் முன்னாள் தமிழீழ போராளிகளின் புகலிடக்கோரிக்கைகளை நமது நாட்டின் முன்னாள் வெளிநாட்டமைச்சர்களால் தடுத்து நிறுத்தியிருக்க முடியுமே. பெற்றுக்கொடுக்க முடியும் என்றால் பெறுவதை தடுக்கவும் முடியுமே.
முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச பயங்கரவாதியல்ல, நாட்டை சரியாக ஆட்சி செய்யாத தவறை மட்டுமே செய்தார். நாட்டில் பல கொலைகளை செய்து நாட்டை விட்டு தப்பியோடிய பயங்கரவாதிகள் கூட வெளிநாடுகளில் புகலிடம் பெறும் போது நம் நாட்டின் முன்னாள் ஜனாதிபதி புகலிடம் பெற வெளிநாட்டமைச்சரின் உதவி தேவை என நினைப்பது சிறுபிள்ளைத்தனமாகும்.
இப்படியெல்லாம் சுமந்திரன் பேசக் காரணம் கல்முனையை முஸ்லிம் தமிழ் என பிரித்து இனமோதலை உருவாக்க இவர்கள் ஒப்பந்தம் செய்த ஜனாதிபதி வேட்பாளர் தோற்றுப்போய்விட்ட மன உளைச்சலின் விளைவாகும் என்று தெரிவித்துள்ளார்.
0 comments :
Post a Comment