விமானம் வழிமறிப்பு விவகாரம்: பெலாரஸ் மீது புதிய தடைகளை ஐரோப்பிய ஒன்றியம் விதிப்பு!



ஒலுவில் எம்.ஜே.எம் பாரிஸ்-
பெலாரஸ் நாட்டின் ஜனாதிபதி பதவியில் கடந்த 27 வருடமாக அலெக்சாண்டர் லுகாசெங்கோ இருந்து வருகிறார். கடந்த வருடம் August மாதம் நடந்த ஜனாதிபதி தேர்தலில் அவர் முறைகேடு செய்தே வெற்றி பெற்றதாக சர்ச்சை எழுந்தது.

அதைத்தொடர்ந்து, தன்னை விமர்சிப்பவர்களை அவர் ஒடுக்கி வருகிறார். இதனால், பெரும்பாலான அரசியல் எதிரிகள் கைது செய்யப்பட்டுள்ளனர், சிலர் வெளிநாட்டுக்கும் தப்பி விட்டனர். அதுபோல், பெலாரஸ் நாட்டை சேர்ந்த ரோமன் புரோட்டசெவிச் என்ற பத்திரிகையாளர் ஜனாதிபதியை விமர்சனம் செய்து வருகிறார்.

ஜனாதிபதியின் அத்துமீறல் அதிகரித்ததால், புரோட்டசெவிச், லிதுவேனியா நாட்டில் தஞ்சமடைந்துள்ளார். அங்கிருந்தபடி, ஜனாதிபதி தேர்தலில் உண்மையிலேயே வெற்றி பெற்றதாக கருதப்படும் எதிர்க்கட்சி தலைவருக்கு ஆதரவாக தனது கருத்தை எழுதியும் வருகிறார்.

இதற்கிடையே, கிரீஸ் நாட்டின் தலைநகர் ஏதென்ஸ் நகரில் எதிர்க்கட்சி தலைவருடன் இணைந்து நிகழ்ச்சியொன்றிலும் ரோமன் புரோட்டசெவிச் பங்கேற்றார். பின்னர், அவர் லிதுவேனியா தலைநகர் வில்னியசுக்கு திரும்புவதற்காக ரியான்ஏர் நிறுவன விமானத்தில் புறப்பட்டார். அந்த விமானத்தில் அவருடன் 171 பயணிகள் இருந்தனர்.

விமானம் பெலாரஸ் நாட்டு வான் வழியாக சென்று கொண்டிருந்தபோது, திடீரென பெலாரஸ் விமான கட்டுப்பாட்டு அறையிலிருந்து விமானிக்கு ஒரு அழைப்பு வந்தது. விமானத்தில் வெடிகுண்டு வைக்கப்பட்டிருப்பதாகவும், எனவே, பெலாரஸ் தலைநகர் மின்ஸ்க் விமான நிலையத்தில் அவசரமாக விமானத்தை தரை இறக்குமாறும் அதில் பேசிய அதிகாரி கூறினார்.

அதே சமயத்தில், பெலாரஸ் நாட்டு போர் விமானம் ஒன்று, அந்த பயணிகள் விமானத்தை வழிமறித்து அரவணைத்து கூட்டிச் சென்றது. இதனால், வேறு வழியின்றி மின்ஸ்க் விமான நிலையத்தில் விமானம் அவசரமாக தரை இறக்கப்பட்டது.

அதிலிருந்த பயணிகள் வெளியேற்றப்பட்டனர். பத்திரிகையாளர் ரோமன் புரோட்டசெவிச்சை பெலாரஸ் பொலிசார் கைதும் செய்தனர். அவருடன் வந்த பெண்ணும் கைது செய்யப்பட்டார். அப்போது, தனக்கு மரண தண்டனை விதித்து விடுவார்கள் என்று புரோட்டசெவிச் கூச்சலிட்டார். ஜனாதிபதி அலெக்சாண்டர் லுகாசெங்கோ நேரடி உத்தரவின்பேரில், இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டதாக பெலாரஸ் அரச ஊடகம் தெரிவித்தது.

இந்த செயலுக்கு உலக நாடுகள் கண்டனம் தெரிவித்துள்ளன. இது ஒரு அதிர்ச்சிகரமான நடவடிக்கை என்று அமெரிக்க வெளியுறவுத்துறை கூறியுள்ளது.

ஐரோப்பிய ஒன்றியத்தின் தலைவர் உர்சுலா வோன்டெர் லியன், இந்த சட்டவிரோத செயலுக்கு பெலாரஸ் பலத்த பின்விளைவுகளை சந்திக்கும் என கூறினார். இத்தாலி, ஸைப்ரஸ், லத்வியா ஆகிய நாடுகளும் கண்டனம் தெரிவித்துள்ளன.

இந்நிலையில், பத்திரிகையாளர் கைது செய்யப்பட்ட விவகாரம் பற்றி அவசரமாக ஐரோப்பிய ஒன்றியம் ஒன்று கூடி ஆலோசனை மேற்கொண்டது. இதில் ஐரோப்பிய ஒன்றிய நாடுகளின் பல்வேறு தலைவர்களும் பங்கேற்றனர்.

இதன் முடிவில், பத்திரிகையாளர் கைது விவகாரம் மற்றும் விமானம் வழிமறிக்கப்பட்டு, தரையிறக்க செய்தது ஆகியவற்றுக்கு கண்டனம் தெரிவிக்கப்பட்டது. இந்த விவகாரத்தில் பெலாரஸ் நாட்டின் மீது புதிய தடைகளை விதிக்க ஐரோப்பிய ஒன்றியம் அனுமதியளித்துள்ளது. இதேபோல் ஐரோப்பிய ஒன்றியம் வான்வழியே பெலாரஸ் நாட்டு விமானங்கள் பறப்பதற்கும் தடை விதித்துள்ளது.

லித்துவேனியா நாட்டின் வான் பரப்பில் பெலாரஸ் நாட்டின் விமானங்கள் வான்வழியே பறப்பதற்கான தடையையும் விதித்து விட்டது. UKயும் பெலாரசுக்கான விமான அனுமதிக்கு தற்காலிக தடை விதித்துள்ளது.

இதுதவிர, UK விமானங்கள் பெலாரஸ் வான்வழியே செல்வதை தவிர்க்கப்பட வேண்டும் என அறிவுறுத்தியுள்ளது.


இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :