கொரோனா விடுமுறையின் பின்னர் திங்கட்கிழமை( 29) பாடசாலைகள் மீள ஆரம்பிக்கப்படவுள்ளன. இந்நிலையில் பாடசாலைகள் கல்வி அமைச்சு மற்றும் சுகாதார அமைச்சின் ஆலோசனைக்கமைய ஒழுங்குகளை மேற்கொண்டுள்ளனவா என்பதைக் கண்டறிவதற்கு கிழக்கு மாகாணக் கல்விப் பணிப்பாளர் எம்.கே.எம்.மன்சூர் குழுக்களை அமைத்துள்ளார்.
மேலதிக மாகாணக் கல்விப் பணிப்பாளர், பிரதிக்கல்விப் பணிப்பாளர்கள், உதவிக்கல்விப் பணிப்பாளர்களைக் கொண்ட இக்குழு எதிர்வரும் திங்கள், செவ்வாய் ஆகிய தினங்களில் பாடசாலைகளுக்கு விஜயம் செய்யும்.
கல்வி அமைச்சின் அறிவுறுத்தலுக்கமைய எதிர்வரும் திங்கட்கிழமை பாடசாலைகள் மீள ஆரம்பிக்கப்படவுள்ளன. இதன்போது அதிபர் ஆசிரியர்கள் பாடசாலைக்கு சமுகமளித்து மாணவர்களை உள்வாங்குவதற்கான ஏற்பாடுகளை முன்னெடுப்பர். அதற்கடுத்த வாரம் முதற்கட்டமாக தரம் 13, தரம் 11 மற்றும் தரம் 5 மாணவர்களுக்கான வகுப்புகள் ஆரம்பமாகும். இதனைத் தொடர்ந்து கட்டங்கட்டமாக ஏனைய மாணவர்களுக்கான வகுப்புகள் ஆரம்பமாகும்.
