மலையக மக்களின் பிரச்சினைகளை தேசிய மயப்படுத்தி தீர்வினை பெற்றுக்கொடுக்க நடவடிக்கை.!

லையக மக்களின் பிரச்சினைகளை தேசிய மயப்படுத்தி, அவற்றை அரசாங்க பொறிமுறைக்குள் உள்வாங்கி உரிய வகையில் தீர்வுகளைப் பெற்றுக்கொடுக்க தமிழ் முற்போக்கு கூட்டணி நடவடிக்கை எடுத்திருந்தது. இப்பணியை தொடர்ந்தும் முன்னெடுக்க பொதுத்தேர்தலில் மக்கள் எமக்கு அமோக ஆதரவை வழங்குவார்கள்." - என்று ஜனநாயக மக்கள் முன்னணியின் பிரதித் தலைவரும், ஐக்கிய மக்கள் சக்தியின் கண்டி மாவட்ட பாராளுமன்ற வேட்பாளருமான வேலுகுமார் தெரிவித்தார்.

இது தொடர்பில் வேலுகுமார் இன்று (04.06.2020) விடுத்துள்ள அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளவை வருமாறு,

" 2015 இல் நடைபெற்ற ஜனாதிபதி தேர்தலின் பின்னரே ஐக்கிய தேசியக்கட்சி ஆட்சி உதயமானது. அதன்பின்னர் நடைபெற்ற பொதுத்தேர்தலிலும் மக்கள் எமக்கு ஆணை வழங்கினார்கள். ஐக்கிய தேசியக்கட்சியின் வெற்றிக்கு எமது மலையக மக்களும் முழுமையான பங்களிப்பை வழங்கினார்கள்.

எம்மக்களின் ஆணையை ஏற்று, அவர்களின் வாழ்க்கை மற்றும் சமூக நிலைமை மேம்படுத்துவதற்காக நான்கரை ஆண்டுகளில் பல்வேறு நடவடிக்கைகளை தமிழ் முற்போக்கு கூட்டணி முன்னெடுத்தது. கண்டி மாவட்டத்திலும் பல புரட்சிகரமான திட்டங்கள் முன்னெடுக்கப்பட்டன.
அதுமட்டுமல்ல எமது மக்களுக்காக வெளிநாடுகள் மற்றும் அமைப்புகளுடன் தமிழ் முற்போக்கு கூட்டணி சிறந்த உறவை பேணியது. இதன்பயனாகவே 10 ஆயிரம் வீடுகளை வழங்குவதற்கு பாரத பிரதமர் மோடி நடவடிக்கை எடுத்தார். புஸல்லாவை சரஸ்வதி கல்லூரியில் புதிதாக கட்டடமொன்றை நிர்மாணிப்பதற்கும் இந்திய அரசாங்கத்தால் உதவியளிக்கப்பட்டது.

அத்துடன், பெருந்தோட்டப்பகுதிகளிலுள்ள பாடசாலைகளை அபிவிருத்தி செய்வதற்காக 900 மில்லியன் ரூபாவை வழங்குவதற்கும் இந்தியா முன்வந்தது.

அதேவேளை, பெருந்தோட்டத் தொழிலாளர்களுக்கான சம்பள விடயத்தில் அரசாங்கத்தையும் மூன்றாம் தரப்பாக இணைப்பதற்கான நடவடிக்கையையும் கூட்டணி முன்னெடுத்திருந்தது. மலையகம் தேசிய நீரோட்டத்தில் இணைக்கப்பட்டுள்ளது. அரசாங்க பொறிமுறைக்குள் உள்வாங்கப்படாதிருந்த தோட்டப்பகுதிகள் உள்வாங்கப்பட்டுள்ளன.

குறிப்பாக 1987 ஆம் ஆண்டு 15 ஆம் இலக்க பிரதேச சபை சட்டத்தில் இருந்த சில சரத்துகள் - குறிப்பாக 33 ஆம் சரத்தானது தோட்டப்பகுதி அபிவிருத்திக்கு பெரும் தடையாக இருந்துவந்தது. இச்சட்டத்தின் பிரகாரம் தோட்டப்பகுதியானது தனியார் பகுதியாக – தனிப்பட்ட பகுதியாக கருதப்பட்டதால் அபிவிருத்திகளுக்கு அரசால் நிதி ஒதுக்கப்படவில்லை. இதனால், அரச நிறுவனங்களாலும் உரிய சேவைகளை வழங்கமுடியாத நிலை இருந்தது. இதனை மாற்றியமைத்ததும் நாம்தான்.

இவ்வாறு எமது சமூக விடுதலைக்காக தூரநோக்கு சிந்தனை அடிப்படையில் அபிவிருத்தி அரசியல், உரிமை அரசியல் ஆகிய விதைகள் தமிழ் முற்போக்கு கூட்டணியால் விதைக்கப்பட்டன. அவற்றை பராமரித்து அறுவடை செய்யவிருந்த நிலையிலேயே ஆட்சிமாற்றம் ஏற்பட்டது. அதன்பின்னர் வந்தவர்கள் உரிய வகையில் பராமரிக்கவில்லை.
எனவே, பொதுத்தேர்தலில் நிச்சயம் நாம் வெற்றிபெறுவோம். எமது ஆட்சியின்கீழ் மலையகத்துக்கான மறுமலர்ச்சி திட்டங்கள் தொடர்ந்தும் முன்னெடுக்கப்படும்.

அதேவேளை, பொதுத்தேர்தலை சந்திப்பதற்கு நாம் தயார். பாதுகாப்பான சூழலில் தேர்தல் நடத்தப்படவேண்டும், மக்கள் பாதுகாக்கப்படவேண்டும் என்பதற்காகவே ஒத்திவைக்குமாறு கோரியிருந்தோம். ஆகவே, சுகாதார நடைமுறைகளைப் பின்பற்றி சுதந்திரமாக தேர்தலை நடத்துவதற்கான நடவடிக்கையை தேர்தல் ஆணைக்குழு முன்னெடுக்கவேண்டும்." - என்றார்.

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -