46-வது ஆண்டில் கால்பதிக்கும் புதிய அலை கலை வட்டத்தின் கலாமித்ரா விருது விழா 30.01.2026 அன்று கொழும்பு–11 செட்டியார் தெருவிலுள்ள கல்யாண முருகன் மண்டபத்தில் கோலாகலமாக நடைபெற்றது. இவ்விழா, வட்டத்தின் ஸ்தாபகரும் சிரேஷ்ட ஊடகவியலாளரும் கலைஞருமான ராதா மேத்தா அவர்களின் தலைமையில் இடம்பெற்றது.
இந்த விழாவில் புதிய அலை கலை வட்டத்தில் பயிற்சி பெற்ற மாணவ, மாணவிகளின் கலை மற்றும் இலக்கியப் போட்டி நிகழ்ச்சிகள் மேடையேற்றப்பட்டதுடன், வட்டத்தினால் நடத்தப்பட்ட பல்வேறு போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு விருதுகள் மற்றும் சான்றிதழ்கள் வழங்கி கௌரவிக்கப்பட்டனர். மேலும் கலை, இலக்கியத்தின் பத்து துறைகளில் பிரசித்திபெற்ற படைப்பாளிகளுக்கு “கலாமித்ரா” விருதுகள் வழங்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
இந்நிகழ்வின் பிரதம அதிதிகளாக ஹாசிம் உமர் பவுண்டேஷனின் ஸ்தாபகர் புரவலர் ஹாசீம் உமர் மற்றும் திருமதி மரியம் ஹாசீம் உமர் ஆகியோர் கலந்து கொண்டு விழாவை சிறப்பித்தனர். கலைஞர்களின் வளர்ச்சிக்காக தொடர்ந்து ஆதரவளித்து வரும் இவர்களின் பங்களிப்பு விழாவில் பெரிதும் பாராட்டப்பட்டது. குறிப்பாக, அண்மையில் புதிய அலை கலை வட்டத்தின் மகளிர் அணியினருக்கு நேரடியாக அழைத்து உதவியமை கலைஞர்களிடையே நெகிழ்ச்சியை ஏற்படுத்தியது.
இந்தியாவிலிருந்து வருகை தந்த கலாநிதி பி. ஆறுமுகபாண்டியன், சென்னை பாலபாகு குருப் தலைவர், பி.கே. சரவணன் (இயக்குனர் – திருநெல்வேலி மெடிக்கல் ஹாஸ்பிட்டல்) உள்ளிட்ட பல்வேறு துறைகளைச் சேர்ந்த பிரமுகர்களும் விழாவில் கலந்து கொண்டு கலை வட்டத்துக்கு தமது வாழ்த்துக்களை தெரிவித்தனர்.
விழாவில் உரையாற்றிய ராதா மேத்தா, கடந்த 45 ஆண்டுகளாக எந்தவிதமான நிலையான வசதிகளும் இல்லாத சூழலில் கலை, இலக்கிய பணிகளை முன்னெடுத்து வருவதாகவும், கொழும்பில் ஒத்திகை நடத்துவதற்கே இடமின்றி பல சவால்களை எதிர்கொண்டு வருவதாகவும் தெரிவித்தார். இத்தகைய கடினமான சூழலிலும் ஹாசிம் உமர் போன்ற புரவலர்கள் கலைஞர்களுக்கு கைகொடுத்து வருவது தங்களுக்கு பெரும் ஊக்கமாக இருப்பதாகவும் அவர் குறிப்பிட்டார்.
மேலும், விழாவில் உரையாற்றிய சென்னை கலாநிதி ஆறுமுகபாண்டியன் மற்றும் தலைவர் பாலபாகு குருப் ஆகியோர், புதிய அலை கலை வட்டத்தை இந்தியாவிற்கு அழைத்து கலை நிகழ்ச்சிகளுக்கு மேடை அமைத்து தருவதாகவும், கொழும்பில் கலை வட்டத்திற்கென நிரந்தர கட்டிடம் அமைப்பதற்கான திட்ட வரைபடத்தை தயாரித்து உதவ தயாராக இருப்பதாகவும் உறுதியளித்தனர்.
இவ்விழாவில் கலை வட்டத்தின் குறுந்திரைப்படம், பரதநாட்டியம், நடனம் உள்ளிட்ட கலை நிகழ்ச்சிகள் சிறப்பாக மேடையேற்றப்பட்டதுடன், புதிய அலை கலை வட்டத்தின் வருடாந்த இதழும் வெளியிடப்பட்டமை விழாவிற்கு மேலும் சிறப்பு சேர்த்தது.
மொத்தத்தில், கலைஞர்களின் வாழ்விலும் கலை இலக்கிய உலகிலும் நம்பிக்கையின் ஒளியாக ஹாசிம் உமர் பவுண்டேஷன் தொடர்ந்து பயணித்து வருவது இந்த கலாமித்ரா விருது விழாவில் மீண்டும் உறுதிப்படுத்தப்பட்டதாக அமைந்தது.


















0 comments :
Post a Comment