நேற்றைய உச்ச நீதிமன்ற வழக்கு தள்ளுபடியும்; முஸ்லிம் சமூகம் எதிர்கொள்ளும் ஆபத்துக்களும்.- முன்னாள் மாகாணசபை உறுப்பினர் ஏ.எல்.தவம் -


ச்ச நீதிமன்றம் தேர்தல் ஒத்திவைப்பு அடிப்படை உரிமை மனுக்களை தள்ளுபடி செய்து - தனது நிலைப்பாட்டை தெளிவாக சொல்லிவிட்டது.
அதாவது;
01) நாட்டில் நீதித்துறைக்கும் நிறைவேற்றுத்துறைக்கும் (ஜனாதிபதிக்கும்) இடையில் ஒரு பிணக்கை ஏற்படுத்த தாம் தயாரில்லை.
02) அரசியல் சாசன முரண்பாட்டிற்கான தீர்ப்பாக தாம் எதனைக் கூறினாலும் - அது எதிர்காலத்தில் பிழையான முன்மாதிரியாக அமையும்.
போன்ற காரணங்கள் அந்த தீர்ப்பில் அடங்கியுள்ளதாக அவதானிகள் கருத்து தெரிவிக்கின்றனர்.
முதலாவது காரணத்தை பொறுத்த வரை - அன்மைக் காலமாக மிகவும் கவன ஈர்ப்பை பெற்ற விடயம்தான். ஜனாதிபதியை பொறுத்த வரை - மீண்டும் பாராளுமன்றத்தை கூட்டுவதற்கான எந்த உத்தரவுகளையும் - தான் ஏற்றுக்கொள்வதற்கில்லை என்பதனை தெளிவாகவே கூறி விட்டார். பாராளுமன்ற வளாகத்தை இராணுவத்தின் கட்டுப்பாட்டின் கீழும் கொண்டு வந்துவிட்டார்.
அதனால், பாராளுமன்றத்தை மீண்டும் கூட்டுவதற்கான தீர்ப்பு கூறப்பட்டிருக்குமாயின் - அது நீதித்துறைக்கும் ஜனாதிபதிக்குமிடையில் பாரிய முரண்பாட்டை ஏற்படுத்தி இருக்கும். அதனால், இலங்கை பெரும் அதிகார இழுபறிக்குள்ளும் - ஸ்தீரமற்ற நிலைக்குள்ளும் மாட்டிக்கொண்டிருக்கும். அப்படியான நிலைமை - ஏலவே கொரோனாவால் பாதிக்கப்பட்டு நிலைகுலைந்திருக்கும் - இலங்கையின் சமூக, பொருளாதார அம்சங்கள் இன்னும் சிக்கலான கட்டத்தை அடைந்திருக்கும். அதனால் நாடு அதலபாதாளத்தை நோக்கி நகர்ந்திருக்கும். அதனால், நீதிமன்றம் வழக்குகளை தள்ளுபடியாக்கி இருக்கலாம்.
இரண்டாவது காரணத்தை பொறுத்த வரை - ஒரு தேசிய சுகாதார அச்சுறுத்தல் காரணமாக ஒத்திவைக்கப்பட்ட தேர்தல் தொடர்பில் ஏற்பட்டிருக்கும் - அரசியல் சாசன முரண்பாட்டிற்கான தீர்வாக வழங்கப்படும் எந்த தீர்ப்பும்;
I. சட்டங்களுக்கு விதிவிலக்கு இருக்கிறது என்ற அடிப்படையையும்
II. பிற்காலத்தில் இதே தீர்ப்பு தவறாக பயன்படுத்தப்படுவதையும்
கருத்தில்கொண்டு நீதிமன்றம் வழக்குகளை தள்ளுபடியாக்கி இருக்கலாம்
ஆனால், தற்போது நாட்டில் ஒரு அரசியல் சாசன முரண்பாடு நடைமுறையில் இருப்பதை (பாராளுமன்றத்திற்கு அரசியல் சாசன ரீதியில் வழங்கப்பட்டுள்ள அதிகாரங்களையும் ஜனாதிபதி பயன்படுத்துவது) - நீதிமன்றம் மொத்தத்தில் கவனத்தில் கொள்ளாமல் விட்டது - உறுத்தலான விடயமாகவே பார்க்கப்படுகிறது.
இவை எவ்வாறிருந்த போதிலும்;
நீதிமன்றத்தின் இந்த நிலைப்பாடு - முஸ்லிம்களை பொறுத்தவரை - நமது எதிர்காலம் பற்றிய அபாய மணியாக பார்க்கப்பட வேண்டும். ஏன்எனில், இலங்கையில் தற்போது ஏற்பட்டிருக்கும் முஸ்லிம் விரோத அரசியல் நிலைப்பாடுகள் - புதிய சட்டவரைவுகளாக முன்வைக்கப்படுகின்ற போது - அவற்றை எதிர்த்து நீதிமன்றத்தை நாடி - நீதி பெற்றுக்கொள்ள முடியுமா? என்ற கேள்வி பலமாக எழுந்து நிற்கிறது. குறிப்பாக;

முஸ்லிம் விவாக விவாகரத்து சட்ட திருத்தம் அல்லது நீக்கம்
மத்ரசா கல்வியை - மத்திய கல்வி அமைச்சின் கீழ் கொண்டுவருவதற்கான பிரேரணை
பாராளுமன்ற வெட்டுப்புள்ளியை 12.5 வீதமாக உயர்த்தல்
மாகாண சபை தேர்தல் திருத்தச் சட்ட மாற்றமும் எல்லை நிர்ணயமும்
உள்ளூராட்சி மன்ற தேர்தல் சட்ட திருத்தம்
பாராளுமன்ற தேர்தல் முறை மாற்றமும் எல்லை நிர்ணயமும்
போன்ற விடயங்களில் - முஸ்லிம்களுக்கு பாதகமான சூழ்நிலைகள் தோன்றலாம்.
அவ்வாறான சூழ்நிலைகளில் - அரசியல் மட்டத்தில் தீர்வுகளை பெற்றுக்கொள்ள முடியாத சந்தர்ப்பங்களில் - இருக்கின்ற ஒரேயொரு மாற்று வழி நீதிமன்றத்தை நாடுவதுதான். ஆனால், இத்தேர்தல் ஒத்திவைப்பு அடிப்படை உரிமை மனுக்கள் தள்ளுபடி செய்யப்பட்ட விதத்தினை கவனிக்கும் போது - இன்றைய நிலையில் நீதிமன்றத்திலும் முஸ்லிம்களுக்கு நீதி கிடைக்கும் என்பது சந்தேகமே.
எனவே, முஸ்லிம்கள் எதிர்காலத்தை மிகக்கவனமாகவும் அவதானத்தோடும் கடந்துசெல்ல வேண்டிய தேவை இருக்கிறது. குறிப்பாக எதிர்கொண்டிருக்கும் பாராளுமன்றத் தேர்தலில்;
முஸ்லிம் பிரதிநிதிகளை அதிகரித்தல்
சமூகத்திற்காக அர்ப்பணிப்போடு செயற்படக்கூடியவர்களை தெரிவு செய்தல்
முஸ்லிம் விவகாரங்கள் தொடர்பில் தெளிவுள்ளவர்களை தெரிவு செய்தல்
எந்த விடயங்கள் நிகழ்ந்தாலும், அவற்றில் முஸ்லிம்களின் நலன்கள் பற்றிய விழிப்புள்ளவர்களை தெரிவு செய்தல்
துணிவுள்ளவர்களை தெரிவு செய்தல்
கருத்தியல் சார்ந்தவர்களை தெரிவு செய்தல்
அரசினால் சமூகத்திற்கு எதிராக கையாள முடியாதவர்களாகப் பார்த்து தெரிவு செய்தல்
போன்றவற்றில் கவனமெடுக்க வேண்டும். அதற்காக வாக்களிக்க வேண்டும்.
இல்லாதுவிட்டால் - முஸ்லிம் சமூகம் எதிர்காலத்தை முகங்கொடுப்பது மிகக்கடினமாகவே அமையும்.
அல்லாஹ் நமது சமூகத்தை பாதுகாப்பானாக!
எல்லாவற்றிற்கும் அல்லாஹ் போதுமானவன்
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -