-சாய்ந்தமருதில் அமைச்சர் ஹக்கீம்-
றியாத் ஏ. மஜீத்-சாய்ந்தமருது உள்ளுராட்சி மன்ற விடயத்தை இழுத்தடிப்பதானது சாய்ந்தமருதுக்கு செய்யும் துரோகமல்ல, முஸ்லிம் காங்கிரஸ் கட்சிக்கு செய்தும் துரோகமாகும். இவ்விவகாரம் இன்று சாய்ந்தமருதில் கட்சியை அச்சுறுத்தலுக்கு உட்படுத்தும் விடயமாகவும் மாறியுள்ளது என ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் தலைவர் அமைச்சர் ரவூப் ஹக்கீம் தெரிவித்தார்.
புதிய ஜனநாயக முன்னணியின் ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாசாவை ஆதரித்து தேர்தல் பிரச்சாரக் கூட்டம் முன்னாள் கிழக்கு மாகாண சபை உறுப்பினர் கலாநிதி ஏ.எம்.ஜெமீல் தலைமையில் நேற்று (01) சாய்ந்தமருது கடற்கரை பூங்காவில் இடம்பெற்றது. இதில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
கடந்த உள்ளுராட்சி மன்றத் தேர்தலின் போது சாய்ந்தமருது மக்கள் தங்களது உள்ளுராட்சி மன்றத் தேவையை உணர்த்தி கட்சிக்கு எதிராக வாக்களித்து தங்களது கோரிக்கையை ஏகமனதாக தெரியப்படுத்தியுள்ளனர். இதனை கட்சித் தலைமை உதாசீனம் செய்யாது மிகப் பொறுப்புடன் சபையை வழங்கும் விடயத்தில் தீவிரமாக செயற்பட்டு வருகின்றது. இதற்காக பல சுற்றுப் பேச்சுவார்த்தைகளை செய்துள்ளோம்.
சாய்ந்தமருதுக்கு நகர சபையினை பெற்றுக்கொடுக்கு வரை கல்முனை மாநகர சபை முதல்வர் பதவியினை எதுவித நிபந்தனையுமின்றி பொறுப்பெடுக்குமாறு நாம் கோரிக்கை விடுத்தோம். அதனை சிறிதளவும் யோசிக்காமல் நிராகரித்தனர். இறுதியில் முஸ்லிம் காங்கிரஸிற்கு கல்முனை முதல்வர் பதவி சென்றுவிடக்கூடாது என்ற முழு வீச்சில் சாய்ந்தமருது தோடம்பழ அணியினர் செயற்பட்டனர். இச்செயற்பாட்டினை அறிந்து நாம் கவலையடைந்தோம்.
சாய்ந்தமருதுக்கான உள்ளுராட்சி சபை விடயம் தலைவர் வழங்கிய வாக்குறுதி அது மிக விரைவில் நிறைவேற்றப்படும். இவ்விடயத்தில் யாரையும் குறைகூற வேண்டியதில்லை. இதன் முழுப்பொறுப்பையும் தலைமை பொறுப்பெடுக்கின்றது.
சாய்ந்தமருது உள்ளுராட்சி மன்ற விடயத்தை இழுத்தடிப்பதானது சாய்ந்தமருதுக்கு செய்யும் துரோகமல்ல, முஸ்லிம் காங்கிரஸ் கட்சிக்கு செய்தும் துரோகமாகும். இவ்விவகாரம் இன்று சாய்ந்தமருதில் கட்சியை அச்சுறுத்தலுக்கு உட்படுத்தும் விடயமாகவும் மாறியுள்ளது.
கல்முனை, சாய்ந்தமருது மக்களுக்கு பாதகமில்லாத வகையில் இருசாராரும் ஏற்றுக்கொள்ளக் கூடிய வகையில் இப்பிரச்சினைக்கு தீர்வு காண்பதற்கு முஸ்லிம் காங்கிரஸ் தலைமை தீவிரமாக செயற்படுகின்றது.
கடந்த உள்ளுராட்சித் தேர்தலில் சாய்ந்தமருது பள்ளிவாசல் சுயேற்சை அணியான தோடம் பழத்திற்கு கிடைத்த 12 ஆயிரம் வாக்குகள் இந்த நாட்டின் ஜனாதிபதியை தீர்மானிக்க போவதில்லை. ஆனால் முஸ்லிம் காங்கிரஸ் கொண்டு வந்த ஜனாதிபதி வேட்பாளரை தோற்கடிப்பதற்கு சாய்ந்தமருது தோடம்பழ அணியினர் முயற்சிகளை செய்கின்றனர். இதனால் சாய்ந்தருது மக்களுக்கு என்ன நன்மையுள்ளது என்பதை சிந்திக்க வேண்டும்.
முஸ்லிம் காங்கிரஸ் சஜித் பிரேமதாசாவை ஆதரிப்பது என்பதற்காக மஹிந்த ராஜபக்ஷவை முழுமையாக எதிர்க்கின்றது என்பது பொருளல்ல. முஸ்லிம் காங்கிரஸ் சஜித் பிரேமதாசவினதோ, மஹிந்த ராஜபக்ஷவினதோ சொத்தல்ல. இது மக்களின் சொத்து, ஜனநாயகத்தை விரும்பும் கட்சியாகும் எனவும் தெரிவித்தார்.