அண்மையில் சாய்ந்தமருதில் நடைபெற்ற தேர்தல் பிரச்சார கூட்டத்திற்காக சாய்ந்தமருக்கு அமைச்சர் ரவூப் ஹக்கீம் வந்ததை அடுத்து, பாதுகாப்பு கடமையில் இராணுவம் மற்றும் கல்முனை பொலிசார் இருந்த நிலையில் அவர்களுக்கு முன்னிலையில் வீதியில் நின்ற சிறுவர்கள் மற்றும் பொது மக்களுக்கு கட்சி ஆதரவாளர்கள் பலர் கடந்த வெள்ளிக்கிழமை 01-11-2019 தாக்கினர்.
இது சம்மந்தமாக பொலிஸில் முறைப்பாடு செய்திருந்தும் இது வரையும் பொலிஸ் எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை என்றும் அவர்களை கைது செய்யவும் இல்லை. இதனை கண்டித்து அவர்களின் கைதை வலியுறுத்தியும் சாய்தமருது பொது மக்கள், இளைஞர்களால் இன்று (03) கண்டன ஆர்ப்பாட்டம் ஒன்று சாய்ந்தமருதில் நடாத்தப்பட்டது.
இங்கு குழுமியிருந்த ஆர்ப்பாட்டக்காரர்கள் பல்வேறு சுலோகங்களை ஏந்தி ஆர்ப்பாட்டதில் ஈடுபட்டனர்.
அதில் "பொலிசாரே குண்டர்களிடமிருந்து பொது மக்களை காப்பாற்று, பொலிஸ் மா அதிபரே சட்டம் பொலிசாரின் கையிலா குண்டர்களிடமா? போன்ற பல்வேறு சுலோகங்களை ஏந்திய வண்ணம் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இதன் காரணமாக வீதிப் போக்குவரத்தும் சிறிது நேரம் ஸ்தம்பிதமடைந்திருந்தமை குறிப்பிடத்தக்கது.