முஸ்லிம் சமூகத்தின் உணர்வுகளுக்கு எதிரான அரசியல் செயற்பாடுகளை தொடர்ந்தும் முன்னெடுக்க முடியாது.


முன்னாள் கிழக்கு மாகாண அமைச்சர் உதுமாலெப்பை
எம்.ஜே.எம்.சஜீத்-
முஸ்லிம் சமூகத்தின் உணர்வுகளுக்கு எதிரான அரசியல் செயற்பாடுகளை தொடர்ந்தும் முன்னெடுக்க முடியாது என முன்னாள் கிழக்கு மாகாண சபை உறுப்பினர் ஏ.எல். தவம் தலைமையில் அக்கரைப்பற்றில் நடைபெற்ற ஜனாதிபதி வேட்பாளர் சஜீத் பிரமதாசவை ஆதரித்து நடைபெற்ற பொது கூட்டத்தில் உரையாற்றிய கிழக்கு மாகாண முன்னாள் அமைச்சர் எம்.எஸ். உதுமாலெப்பை தெரிவித்தார்.
பிரதம அதிதியாக முஸ்லிம் காங்கிரஸின் தேசிய தலைவரும், நீர்வழங்கள், நகர திட்டமிடல், உயர்கல்வி அமைச்சருமான றஊப் ஹக்கீம் கலந்து கொண்ட இக்கூட்டத்தில் தொடர்ந்தும் உரையாற்றுகையில்......
2015 இல் நடைபெற்ற ஜனாதிபதி தேர்தலில் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவை சிறுபான்மை மக்கள் எதிர்த்து நின்றபோதும் நன்றிக்கடனுக்காக மஹிந்த ராஜபக்சவுக்கு ஆதரவு வழங்கினோம். இன்னும் ஒரு தடவை ஜனாதிபதியாக மஹிந்த ராஜபக்ச ஜனாதிபதி தேர்தலில் போட்டியிட்டால் அவருக்கு ஆதரவு வழங்குவது தொடர்பாக மறுபரிசீலனை செய்யலாம். ஆனால் தொடர்ந்தும் முஸ்லிம் சமூகத்தின் உணர்வுகளுக்கு மதிப்பளிக்காமல் அரசியல் தீர்மாணங்களை மேற்கொண்டு சமூகத்திற்கு எதிரான செயற்பாடுகளை முன்னெடுக்க முடியாத நிலமை தோன்றியுள்ளது. சிறுபான்மை மக்களின் உணர்வுகளையும் நாடித்துடிப்புகளையும் உணரமுடியாதவர்களுக்கு ஜனாதிபதி தேர்தலில் வாக்களிக்க நமது சமூகத்தை கோர முடியாத நிலைமை ஏற்பட்டுள்ளது. இந்த யதார்த்தமான நிலைமைகளை புரியாத சில முஸ்லிம் தலைவர்களின் செயற்பாடுகள் குறித்து நாம் கவலைப்பட வேண்டியுள்ளது.
ஏப்ரல் 21 ஆம் திகதியன்று நடைபெற்ற சஹ்ரானின் கொடூர பயங்கரவாத நிகழ்வுக்குப் பின் முழு முஸ்லிம் சமூகமும் பயங்கரவாதத்திற்கு ஒத்துழைப்பு வழங்கியது போன்ற ஒரு தோற்றத்தை நமது நாட்டில் உள்ள இனவாத குழுக்கள் ஏற்படுத்தியது.
முஸ்லிம் அமைச்சர்கள் 9 பேரும் இணைந்து தங்களின் அமைச்சுப் பதவியினை ராஜினாமா செய்ததன் நிமித்தம் தான் நமது நாட்டில் வாழும் முஸ்லிம்கள் அச்சமற்று வாழும் நிலைமை ஏற்பட்டது. இந்த தீர்மானத்தை மேற்கொள்வதற்கு முஸ்லிம் காங்கிரஸ் கட்சியின் தலைமைத்துவத்தின் பங்களிப்பும் மிகவும் முக்கியமானதாக அமைந்தன. முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் ரவூப் ஹக்கீம் இந்த விடயத்தில் மறைந்த தலைவர் மர்{ஹம் எம்.எச்.எம்.அஷ்ரப் அவர்களின் பாணியில் தீர்க்கதரிசனமாக செயற்பட்டார். இதனால் நமது நாட்டில் வாழும் முஸ்லிம் சமூகத்தின் மீது முன்வைக்கப்பட்ட இனவாத செயற்பாடுகள் உடனடியாக கட்டுபாட்டுக்குல் கொண்டுவரப்பட்டதுடன் இலங்கையில் வாழும் அனைத்து இனவாத குழுக்களின் முஸ்லிம் சமூகத்திற்கு எதிரான செயற்பாடுகள் நிறுத்தப்பட்டன.

இத்தீர்மாணத்தால் இனவாதிகளும் ஏனையவர்களும் அதிர்ச்சி அடைந்ததுடன், நமது நாட்டில் வாழும் முஸ்லிம்களுக்கு எதிராக மேற்கொள்ளப்பட்ட இனவாத செயற்பாடுகள் சர்வதேசம் வரை சென்றன. தமிழ் தேசிய கூட்டமைப்பினர் போன்று முஸ்லிம் அரசியல் கட்சிகளின் தலைவர்கள் ஒன்றிணைந்து செயல்படுவதற்கான முயற்சிகள் முன்னெடுக்கப்பட்ட போதிலும் அந்த நடவடிக்கைகள் வெற்றி அளிக்கவில்லை. எனவேதான் தேசிய காங்கிரஸில் இருந்து ராஜினாமா செய்துவிட்டு ஒரு வருட காலமாக மௌனமாக இருந்து செயல்பட்ட பொத்துவில், அட்டாளைச்சேனை, அக்கரைப்பற்று இறக்காமம் மற்றும் திருமலை மாவட்டத்தைச் சேர்ந்தவர்கள் இணைந்து சமூக நலனை முன்னிட்டு முஸ்லிம் காங்கிரஸில் இணைந்து அக்கட்சியின் செயற்பாடுகளையும், தலைமையும் பலப்படுத்துவதற்கான முடிவினை எடுத்தோம்.
தேசிய காங்கிரஸின் ஸ்தாபகர்களில் ஒருவராக செயற்பட்ட நான் அந்தக் கட்சிக்கும், தலைவருக்கும், எனக்கும் வாக்களித்த மக்களுக்கும் உச்ச விசுவாசமாக செயல்பட்டேன். கடந்த 2015 இல் நடைபெற்ற ஜனாதிபதி தேர்தலில் மஹிந்த ராஜபக்ஷ தோல்வியடைந்தனால் தேசிய காங்கிரஸ் பாரிய வீழ்ச்சி அடைந்தது. அந்த கட்சியை மீண்டும் கட்டியெழுப்புவதற்கு பதவிகள் இல்லாத நிலையிலும் உச்சமாக செயற்பட்டு கடந்த உள்ளுராட்சி சபை தேர்தலில் கட்சியின் வளர்ச்சிக்கும், உயர்வுக்கும் பஙங்களிப்பு செய்தோம். கட்சியின் தலைமைக்கு புதிய ஊடகப்பிரிவினர் தவறான கருத்துக்களை தெரிவித்தனர். இதனால் கட்சியின் தேசிய கொள்கை பரப்புச் செயலாளர் சட்டத்தரணி பஹீஜ் பற்றிய வீனான தகவல்களை பரப்பி அக்கரைப்பற்று சமூகத்தின் துரோகி என்ற பட்டத்தை வழங்குவதற்கு முயற்சிகள் நடைபெற்றன.
நான் தலைவரிடம் இந்த விடயத்தினை தெளிவுபடுத்தினேன் அன்று முன்னாள் கிழக்கு மாகாண சபை உறுப்பினர் தவத்தினை கட்சியிலிருந்து வெளியேற்றுவதற்கான முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன. கட்சியின் முக்கியஸ்தர்கள் என்னை வந்து சந்தித்து தலைவர் தவத்தினை கட்சியில் இருந்து வெளியேற்றுவதற்கு முயற்சிக்கின்றார். தலைவரை சுற்றி உள்ளவர்கள் இந்த விடயத்தினை தலைவரிடம் தெரிவிப்பதற்கு விடுகிறார்கள் இல்லை எனவே, நீங்கள் மாத்திரம் சொன்னால் தான் தலைவர் கேட்பார் தலைவரை தனிமையில் சந்தித்து நிலைமையை விளக்கப்படுத்துமாறு கேட்டனர். தேர்தல் நடவடிக்கைகளில் தீவிரமாக ஈடுபட்டிருந்த நான் உடனடியாக தலைவரிடம் வந்து தங்களிடம் தனிமையில் பேசவேண்டும் என்று 45 நிமிடங்கள் இருபேரும் சகோதரர் தவம் தொடர்பான விடயமாக பேசினோம். தேசிய காங்கிரசின் இதயமான அக்கரைப்பற்றில் இருந்து சகோதரர் தவத்தினை இழந்து விட வேண்டாம் என கூறினேன். தவம் தொடர்பாக நான் முடிவெடுப்பேன் ஏனைய பிரதேச தேர்தல் விடயங்களில் நீங்கள் ஈடுபடுங்கள் என்று தலைவர் கூறினார்.
இதேபோன்றுதான் கட்சியின் தேசிய கொள்கை பரப்புச் செயலாளர் சகோதரர் சட்டத்தரணி பஹீஜ் விடயத்தினையும் தலைவரிடம் விளங்கப் படுத்தினேன். அக்கரைப்பற்றில் மீண்டும் ஒரு இடைவெளியை ஏற்படுத்த வேண்டாம் என்று கேட்டுக்கொண்டேன். தலைவர் அதனையும் கேட்க வில்லை இந்த நிலைமையில் நாம் கட்சியில் இருந்து விலகினோம். கட்சியில் இருந்து ராஜினாமா செய்து ஒரு வருட காலம் பொறுமையாக இருந்து தலைவர் அதாவுல்லா அண்மையில் வசந்தம் தொலைகாட்சி 'அதிர்வு' நிகழ்ச்சியில் கலந்துகொள்ளும் வரை பொறுமையாக இருந்து விட்டு விசேட குழு ஒன்றினை தெரிவு செய்து எங்களின் எதிர்கால அரசியல் நடவடிக்கை தொடர்பாக கலந்துரையாடி சமூக நலனை முன்னிட்டு முஸ்லிம் காங்கிரசும் அதன் தலைமையும் பலப்படுத்துவதற்கான முஸ்லிம் காங்கிரசில் இணைந்து செயற்பட்டு எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் வேட்பாளர் சஜித் பிரேமதாஸவின் வெற்றிக்காக பூரண ஆதரவினை வழங்கி செயற்பட உள்ளதாக தெரிவித்தார்
இந்நிகழ்வில் சிறி லங்கா முஸ்லிம் காங்கிரஸின் தலைவரும், அமைச்சருமான றஊப் ஹக்கீம், சுகாதார பிரதி அமைச்சர் பைசல் ஹாசிம், முன்னாள் பிரதி அமைச்சர் ஹரீஸ், பாராளுமன்ற உறுப்பினர் ஏ.எல்.எம் நஸீர் மற்றும் உயர் அதிகாரிகளும் கலந்து கொண்டனர்.

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -