ஜனாதிபதித் தேர்தலில் ஐம்பது வீதத்தை முஸ்லிம் வேட்பாளர் பெற்றுக் கொடுப்பாரா?


எம்.எம்.எம்.நூறுல்ஹக்
சாய்ந்தமருது – 05

நாம் எதிர்கொண்டிருக்கும் எட்டாவது ஜனாதிபதி தேர்தலைப் பொறுத்தவரை இரண்டு விடயங்களில் கவனம் செலுத்த வேண்டியுள்ளது. ஒன்று ஜனாதிபதியாக வெற்றி பெறுகின்ற ஒரு வேட்பாளர் ஐம்பது வீதத்திலும் கூடுதலான வாக்குகளைப் பெற்றே ஆக வேண்டுமா? அவ்வாறு பெறாவிடின் குறித்த தேர்தல் வலிதற்று விடுமா என்கின்ற சட்டப் பிரச்சினை குறித்தும் முஸ்லிம் ஒருவர் ஜனாதிபதி வேட்பாளராகப் போட்டியிட்டு அவர் பெறுகின்ற வாக்குகளில் இரண்டாம் விருப்புத் தெரிவாக ஆட்சி அதிகாரத்திற்கு வரக்கூடியவர் என ஊகிக்கும் ஒருவருக்கு செலுத்துவதன் ஊடாக முஸ்லிம்களுடைய பேரம் பேசுதலை முன்னெடுக்க முடியுமா? என்பது பற்றியும் அலசி ஆராய்வதே இக்கட்டுரையின் அடிப்படை நோக்கமாகும்.

இலங்கையில் நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி முறைமையை 1978ஆம் இரண்டாம் குடியரசு யாப்பு அறிமுகம் செய்து வைக்கின்றது. இத்தேர்தலில் வெற்றிபெறும் வேட்பாளரை எவ்வாறு பிரகடனப்படுத்த வேண்டும் என்பதையும் அதற்காக ஒரு வாக்காளன் தமது வாக்கை எவ்வாறு பிரயோகிக்க வேண்டும் என்பதையும் அதில் குறிப்பிடப்பட்டிருக்கின்றது. அந்த வகையில் முதலில் அது குறித்து நமது அரசியல் அமைப்பு என்ன கூறுகின்றது என்று பார்ப்போம்.
”94.(1) சனாதிபதித் தேர்தலில் ஒவ்வொரு வாக்காளரும், தமது வாக்கினை எவரேனும் வேட்பாளருக்கு அளிக்கின்றபோது -
(அ) அத்தேர்தலில் மூன்று வேட்பாளர்கள் இருக்கின்றவிடத்து, இரண்டாவது ஆளாக யாரை விரும்புகின்றார் என்பதையும் தெரிவிக்கலாம்: அத்துடன்
(ஆ) அத்தேர்தலில் மூன்றுக்கு மேற்பட்ட வேட்பாளர்கள் இருக்கின்றவிடத்து, இரண்டாவது ஆளாகவும், மூன்றாவது ஆளாகவும் யார் யாரை விரும்புகின்றார் என்பதையும் தெரிவிக்கலாம்”.
மேற்படி கூற்றினை அவதானிக்கின்றபோது ஜனாதிபதி தேர்தலில் வாக்களிப்பது பாராளுமன்றம், மாகாண சபை ஆகிய தேர்தல்களில் இருந்து சற்று வித்தியாசப்படுகின்றது. ஏனெனில், இவ்விரு தேர்தலிலும் முதலில் கட்சிக்கு வாக்களித்து அதன் பிற்பாடு தமது விருப்பு வாக்குகளை அக்கட்சி சார்ந்தோருக்கே அளித்தல் வேண்டும் என்பதை காண்கின்றோம்.
ஜனாதிபதித் தேர்தலைப் பொறுத்தவரை இரண்டு வேட்பாளர்கள் மட்டும் போட்டியிடுகின்றபோது தாம் விரும்புகின்ற ஒரு வேட்பாளருக்கு மாத்திரம் தமது ஒரு விருப்பை வெளிப்படுத்த முடியும். மூன்று வேட்பாளர்கள் மாத்திரம் போட்டியாளர்களாக நிறுத்தப்படும் தேர்தலானால் தமது இரண்டாம் விருப்பு நிலையை வெளிப்படுத்தலாம். அதேநேரம் மூன்று வேட்பாளர்களுக்கு மேல் போட்டியிடும் சந்தர்ப்பத்தில் தமது மூன்றாம் விருப்பினை வெளிப்படுத் முடியும் என்பதை மேற்படி அரசியல் அமைப்பின் 94.(1)ஆம் பிரிவும் அதன் (அ),(ஆ) பந்திகளிலும் குறித்துக் காட்டுகின்றது.
இது குறித்து தமது விருப்புத் தெரிவை வெளிப்படுத்துவதற்கு 1,2,3 ஆகிய எண்களினூடாக அடையாளமிட வேண்டும் என்பதை 1981ஆம் ஆண்டின் 15ஆம் இலக்க ஜனாதிபதித் தேர்தல் சட்டம் தெரிவிக்கின்றது. இங்கு கவனிக்க வேண்டிய விடயம் என்னவென்றால் நமது நாட்டில் நிறைவேற்று ஜனாதிபதி முறைமையை அறிமுகப்படுத்தப்பட்ட காலம் தொட்டு இன்றுவரை ஏழு ஜனாதிபதித் தேர்தல்கள் நடைபெற்றிருக்கின்றன.
இதில் போட்டியாளர்களாகப் போட்டியிட்ட வேட்பாளர்கள் மக்களிடம் தமக்கு வாக்களிக்க வலியுறுத்துகின்றபோது ஒரு விருப்பு வாக்கை மாத்திரம் தமக்கு அளிக்கும்படி வேண்டியிருப்பதைப் பார்க்கின்றோம். அதேநேரம், தமது விருப்பை வாக்காளன் வெளிப்படுத்துவதற்கு புள்ளடி அல்லது ஒன்று இலக்கம் இடுகின்ற முறையைக் கடைப்பிடித்து வந்திருக்கின்றனர். ஆதலால் பெரும்பாலான நமது மக்களும் புள்ளடி இடுவதனூடாகவே தமது விருப்புத்தெரிவை பதிவு செய்து வந்திருக்கின்றனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.
தேர்தலில் போட்டியிடுகின்ற வேட்பாளர் எவராயினும் வெளிப்படையாக தோல்வி அடையப்போகிறோம் எனக் காட்டும் வகையில் தனக்கு ஒரு வாக்கை அளித்து, பிறிதொரு வேட்பாளருக்கு அவரது இரண்டாம் தெரிவை வழங்குமாறு சொல்லுகின்ற நிலைமையை கடந்த ஏழு ஜனாதிபதித் தேர்தல்களிலும் அவதானிக்க முடியவில்லை. மாறாக, வாக்களிக்கும் தினத்திற்கு முன்னர் சிலர் போட்டியிலிருந்து விலகுவதாகவும் தமது ஆதரவாளர்கள் பிறிதொரு குறித்த வேட்பாளருக்கு வாக்களியுங்கள் என்கின்ற வேண்டுகோள் விடுப்பதையுமே காண முடிந்திருக்கின்றது.

தனது இண்டாம் மூன்றாம் விருப்பைத் தெரிவிக்க விரும்புகின்ற ஒரு வாக்காளன் கண்டிப்பாக 1,2,3 ஆகிய இலக்கங்களினூடாகவே வாக்களித்தாக வேண்டும். மாறாக மூன்று பேர்களுக்கு எதிரே புள்ளடி இடுவதோ அல்லது ஒருவருக்கோ இருவருக்கோ புள்ளடி இட்டுவிட்டு மற்றவருக்கு இலக்கம் இடுவதோ அல்லது இருவருக்கு இலக்கம் இட்டுவிட்டு மற்ற ஒருவருக்கு புள்ளடி இடுவதோ வாக்கை செல்லுபடியற்றதாக்கும் அபாயமும் இதில் இருக்கின்றது.
பாராளுமன்றம் மற்றும் மாகாண சபைத் தேர்தல்களில் ஒரு கட்சிக்கு மாத்திரமே வாக்களிக்கின்ற முறைமையில் இருந்து விலகி ஜனபாதிபதித் தேர்தலில் ஒன்றுக்கு மேற்பட்ட தமது விருப்பை ஒரு வாக்காளன் வெளிப்படுத்துகின்றபோது வெவ்வேறு வேட்பாளர்களை தெரிவு செய்கின்ற ஒரு முறைமை என்பது இதில் இருக்கின்றது. இதேபோன்று மேற்படி இரு தேர்தல்களில் வாக்கெண்ணி வெற்றியாளரை வெளிப்படுத்தும் முறைமையில் இருந்தும் ஜனாதிபதித் தேர்தல் வேறுபடுகின்றது.

”94.(2) அளிக்கப்பட்ட செல்லுபடியான வாக்குகளில் அரைவாசிக்கு மேற்பட்ட வாக்குகளைப் பெறுகின்ற வேட்பாளர், அப்படிப் பெறுகின்ற ஒருவர் இருந்தால், சனாதிபதியாகத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார் என வெளிப்படுத்தப்படல் வேண்டும்”.
”94.(3) இவ்வுறுப்புரையின் (2)ஆம் பந்தியின் கீழ் வேட்பாளர் எவரும் தேர்ந்தெடுக்ப்படவில்லை என வெளிப்படுத்தப்படுகின்றவிடத்து, ஆகக் கூடுதலான வாக்குகளைப் பெற்ற வேட்பாளரும் அதற்கடுத்தபடியாகக் கூடுதலான வாக்குகளைப் பெற்ற வேட்பாளரும்; தவிர்ந்த ஏனைய வேட்பாளர் அல்லது வேட்பாளர்கள் போட்டியிலிருந்து நீக்கிவிடப்படுதல் வேண்டும் என்பதோடு:
(அ) போட்டியிலிருந்து நீக்கிவிடப்பட்ட ஒரு வேட்பாளருக்குத் தமது வாக்கை அளித்துள்ள ஒவ்வொரு வாக்காளரதும் இரண்டாவது விருப்பத்தெரிவானது எஞ்சியுள்ள இரண்டு வேட்பாளர்களுள் யாதேனுமொருவர்க்கானதாக இருப்பின், அது அந்த வேட்பாளருக்கு அளிக்கப்பட்ட ஒரு வாக்காக எண்ணப்படுதலும் வேண்டும். அத்துடன் (2) ஆம் பந்தியின் கீழ் எண்ணப்பட்ட அவருக்குரிய வாக்குகளுடன் அது சேர்க்கப்படுதலும் வேண்டும்: அத்துடன்

(ஆ) உட்பந்தி (அ)இல் குறிப்பீடு செய்யப்பட்ட ஒரு வாக்காளரின் இரண்டாம் விருப்புத் தெரிவானது அந்த உட்பந்தியின் கீழ் எண்ணப்படாவிட்டால், அவரது மூன்றாவது விருப்புத் தெரிவானது எஞ்சியுள்ள இரண்டு வேட்பாளர்களுள் யாரேனுமொருவருக்கானதாக இருப்பின் அந்த விருப்புத் தெரிவு அந்த வேட்பாளருக்கு அளிக்கப்பட்ட ஒரு வாக்காக எண்ணப்படுதலும் வேண்டும்: அத்துடன் (2)ஆம் பந்தியின் கீழும் (அ) எனும் உட்பந்தியின் கீழும் எண்ணப்பட்ட அவருக்குரிய வாக்குகளுடன் சேர்க்கப்படுதலும் வேண்டும்:

இவ்வாறெண்ணப்பட்ட வாக்குகளில் மிகக் கூடுதலான வாக்குகளைப் பெறும் வேட்பாளர் சனாதிபதியாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளரென வெளிப்படுத்தப்படல் வேண்டும்”.
அளிக்கப்பட்ட செல்லுபடியான வாக்குகளில் அரைவாசிக்கு மேற்பட்ட வாக்குகளை பெறுகின்ற வேட்பாளர் ஒருவர் முதல் சுற்றிலேயே ஜனாதிபதியாக தேர்ந்தெடுக்கப்பட்டவராகின்றார். இதில் கூறப்படுகின்ற அரைவாசிக்கு மேல் என்ற சொல்லாடலுக்குத்தான் ஐம்பது வீதத்திற்கு மேல் என்ற பிறிதொரு வார்த்தைப் பிரயோகமாக இது குறித்துப் பேசுகின்றனர். நேரடியாக அரசியலமைப்பில் வீத அடிப்படையை குறித்துரைக்காமையினால் ஐம்பது வீதம் எனக் குறிப்பிடுவது முறையற்ற கையாள்தல் எனச் சிலர் கூறுகின்றனர். எது எவ்வாறிருப்பினும் அரைவாசிக்கு மேல் என்பதற்கு பதிலீடான சொல்லாகவே இந்த ஐம்பது வீதச் (50%+1) சொல் கையாளப்படுகின்றது எனக் கொண்டால், இதில் ஆட்சேபிப்பதற்கோ மறுப்பதற்கோ சிக்கல்கள் தோன்றுவதற்கோ எந்த வழியுமில்லை.

இதனை வேறு வார்த்தைகளில் சொல்வதாயின், முதல் சுற்றில் அளிக்கப்பட்ட செல்லுபடியான மொத்த வாக்குகளில் அரைவாசிக்கு மேற்பட்ட வாக்குகளைப் பெற்ற ஒருவர் இருப்பாரேயானால் வாக்கெண்ணும் முறையில் காணப்படுகின்ற இரண்டாம் மூன்றாம் கட்ட நிலைக்குச் செல்ல வேண்டி ஏற்படாது. இதுகாலவரை நடைபெற்ற ஏழு ஜனாதிபதித் தேர்தல்களைப் பொறுத்தவரை முதல் சுற்றின் ஊடாகவே ஜனாதிபதி யாரென்பது வெளிப்பட்டிருப்பதைக் காணலாம். இதற்கு முக்கிய காரணம் ஐம்பது வீதத்திற்கு மேல் கடந்த தேர்தல்களில் வெற்றியாளர்கள் தமது வாக்குப் பலமாகக் கொண்டிருந்ததேயாகும்.
ஐம்பது வீதமான வாக்குகளை நடைபெறவிருக்கின்ற எட்டாவது ஜனாதிபதித் தேர்தலில் முதல் சுற்றில் பெற மாட்டார்கள் என்கின்ற ஒரு வாதம் முன்வைக்கப்படுவதனால்தான் ஐம்பது வீதம் என்பது வலுப்பெற்ற கதையாடலாக பரப்புரை செய்யப்படுகின்றது. இதற்கு முதல் நடைபெற்ற ஜனாதிபதித் தேர்தல்களிலும் எழுப்பப்படாத சந்தேகமொன்று இம்முறை எழுப்பப்படுவதற்கு அடிப்படையாக அமைவது மக்கள் விடுதலை முன்னணி ஜனாதிபதி தேர்தலில் குதிப்பதாக சொல்லி தமது வேட்பாளரையும் அறிவித்திருப்பதுமாகும். இதற்கு முன்னரும் இக்கட்சியின் சார்பில் 1982இல் ரோஹன விஜயவீரவும், 1999இல் நந்தண குணதிலகவும்; போட்டியிட்டிருக்கின்றனர்.
அப்போது கண்டுகொள்ளப்படாத மக்கள் விடுதலை முன்னணி நடைபெறப்போகும் எட்டாவது ஜனாதிபதித் தேர்தலில் மட்டும் எவ்வாறு முக்கியத்துவம் பெறுகின்றது என்று பார்த்தால், கடந்த 2015ஆம் ஆண்டு நடைபெற்ற ஜனாதிபதித் தேர்தல் மற்றும் நாடாளுமன்றத் தேர்தல்களில் இதற்கு முன்னர் தொடர்ச்சியாக இருந்துவந்த மஹிந்த சார்பான ஆட்சி மீது சிங்கள, தமிழ், முஸ்லிம் சமூகங்களிடையே ஏற்பட்டிருந்த அதிருப்தி (இதற்கு ஒவ்வொரு சமூகங்களிடமும் வெவ்வேறான அடிப்படை) காரணங்களாக அமைந்தன.
இதே போன்றதொரு நிலை 2015களின் பின்னர் இன்று நடைமுறையில் இருக்கின்ற நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனபதிபதி மைத்திரி மற்றும் அவர் தரப்பு மீதும் அரசாங்கமாக இருக்கின்ற ரணிலும் அவர் சார்ந்த அணியினர் மீதும் நாட்டின் பிரதான சமூகங்களான சிங்கள, தமிழ், முஸ்லிம் மக்களிடையே வெவ்வேறு காரணங்களினால் காணப்படும் அதிருப்தி நிலையானது இவர்களின் வாக்கு மக்கள் விடுதலை முன்னணியை நோக்கி திரும்பக் கூடும் என்று நம்பியே இம்முறை ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடுகின்ற யாருமே முதல் சுற்றில் பெறப்பட வேண்டிய ஐம்பது வீதத்தினை பெற மாட்டார்கள் என்ற கருத்தாடல் ஒரு உறுதியான நிலைப்பாடு போன்று பேசு பொருளாக்கப்பட்டிருக்கின்றது.

இந்த எதிர்பார்ப்பின் நிமிர்த்தம் ஆளும் அதிகாரம் உடைய நிலைக்கு மக்கள் விடுதலை முன்னணி வருமா? என்று நோக்குமிடத்து, இக்கட்சி கடந்தகாலங்களில் வைத்திருக்கின்ற நிரந்தர வாக்கு வங்கியானது ஆறு சதவீதத்திற்கு மேலாகாது இருக்கின்றது. இந்நிலையில் அக்கட்சி ஐம்பது வீத நிலையில்லாத இரண்டாம் கட்ட வாக்கெண்ணுதல் நிலைக்கு முன்னணியாக வரக்கூடிய இரண்டு வேட்பாளர்களுக்கு சவாலாக வருவதாக இருந்தால் ஆகக் குறைந்தது 40 வீத வாக்குகளையாவது தன்வசம் ஆக்கிக் கொள்ள வேண்டும்.

ஏலவே, முன்னணி வேட்பாளர்களாக வரக்கூடியதாக கருதக்கூடிய ஐக்கிய தேசியக் கட்சியிடம் 25 வீதமும் மஹிந்த அணியிடம் 35 வீதமும் நிரந்தர வாக்காளர்கள் இருப்பது மறைவன்று. இந்நிலையினை உடைந்தெறிந்து முன்னணி நிலைக்கு மக்கள் விடுதலை முன்னணி வருவதாக இருந்தால் தன்னிடமுள்ள 6 வீதத்திற்குப் புறம்பாக புதிதாக ஏறத்தாழ 34 வீதமான வாக்குகளை தன்வசம் ஆக்க வேண்டிய நிலை இருக்கின்றது. இது சாத்தியமா என்பது பலத்த கேள்விக்குரிய ஒரு விடயமாகும். நமது நாட்டில் பதிவாகி இருக்கும் மொத்த வாக்குகளில் சுமார் 23 வீதமானது அளிக்கப்படுவதில்லை. இதனை கவனத்தில் கொண்டு இப்பந்தியில் குறிப்பிடப்படும் வீதங்களை விளங்கிக் கொள்ளுதல் அவசியமாகின்றது.
எது எவ்வாறிருந்தாலும் ஜனாதிபதித் தேர்தலில் முதல் சுற்றில் குறித்த ஐம்பது வீதத்தை எவரும் பெறாதவிடத்து இரண்டாம் மூன்றாம் கட்ட வாக்கெண்ணுதல் முறைமைக்குள் செல்ல வேண்டி வரும். அங்கு அரைவாசிக்கு மேல் என்ற சொல்லாடல் தவிர்க்கப்பட்டு அல்லது இல்லாமல் செய்யப்பட்டு வாக்குகளில் அதாவது முன்னணியாக வந்த இரண்டு வேட்பாளர்களில் ”மிகக் கூடுதலான வாக்கைப் பெறும் வேட்பாளர் ஜனாதிபதியாக தேர்ந்தெடுக்கப்படுவார்” என்றே அரசியலமைப்பு வலியுறுத்துகின்றது.
இதன் அர்த்தம் என்னவெனில், முதல் ஐம்பது வீதத்தை அடையாத நிலை காணப்படின் போட்டியாளர்களில் முதலாம் இரண்டாம் நிலையைப் பெற்றவர்கள் தவிர்ந்த ஏனையவர்களை போட்டியிலிருந்து நீக்கி விடுவதாகும். அவ்வாறு நீக்கப்பட்டவர்களின் வாக்குகளில் இரண்டாம் விருப்பு வாக்காக முன்னிலையில் இருக்கும் இருவர்களில் யாருக்கு வழங்கப்பட்டிருப்பினும் அவை அவர்களின் வாக்குகளுடன் சேர்க்கப்படும். அவ்வாறு முன்னிலை பெற்றவர்களுக்கு வழங்கப்படாது வேறு ஒருவருக்கு இரண்டாம் விருப்புத்தெரிவு வழங்கப்பட்டிருப்பின் அந்த வாக்குகள் மீதமாக இருக்கும்.
அதன் பின்னர் மூன்றாம் விருப்பாக முன்னிலையில் இருக்கின்ற இரண்டு பேர்களில் யாருக்காவது அளிக்கப்பட்டிருக்கின்றதா என்று பார்க்கப்பட்டு, அளிக்கப்பட்டிருப்பின் அவையும் முதலாம் இரண்டாம் இடங்களில் முன்னிலையில் இருப்பவர்களின் வாக்குகளுடன் சேர்க்கப்படும். இதன் பிற்பாடு முதலில் முன்னிலை பெற்றிருந்த ஒருவர் இரண்டாம் நிலைக்கோ அல்லது இரண்டாம் நிலையிலிருந்தவர் முதலாம் நிலைக்கோ செல்ல முடியும். அவ்வாறு செல்லாதும் முதலில் காணப்பட்ட முதலாம் இரண்டாம் நிலை தொடரவும் கூடும். இங்கு அரைவாசிக்கு மேல் என்ற சொல் தவிர்க்கப்பட்டு, அவர்களுள் ”மிகக் கூடுதலான வாக்குகளைப் பெறுகின்ற வேட்பாளர்” என்ற அடிப்படையில் ஜனாதிபதி தெரிவாகுவார்.
அளிக்கப்படும் செல்லுபடியான மொத்த வாக்குகளில் ஐம்பது வீதத்தை முதல் சுற்றில் பெறாத நிலையில் முன்னணியில் காணப்படுகின்ற இரண்டு வேட்பாளர்களுக்கும் இரண்டாம் மூன்றாம் வாக்குத் தெரிவுகள் அளிக்கப்படாத நிலையும் காணப்படுமாயின் இதன்போது வெற்றி வேட்பாளரை எவ்வாறு தெரிவு செய்வது என்பதில் சட்டத்தில் நேரடியாக குறிப்பிடப்படவில்லை. ஆனால், 1979ம் ஆண்டுக்கு பின்னர் நடைபெற்ற சகல ஜனாதிபதித் தேர்தல்களின்போதும் ஐம்பது வீதத்திற்கு அதிகமான வாக்குகளைப் பெற்று முதல் சுற்றிலேயே ஜனாதிபதிகள் தெரிவு செய்யப்பட்டு வந்திருக்கின்றனர் என்பது கவனிக்கத்தக்கது.
ஐம்பது வீதத்திற்கு அதிகமான வாக்குகளைப் பெறவில்லை என்ற காரணத்தை வைத்து மீண்டும் தேர்தல் நடாத்தப்பட வேண்டும் என்று சட்டத்தில் நேரடியாக கூறப்படவில்லை. இது முன்னிலையில் வந்த இருவர்களில் யாருக்கேனும் குறைந்த அளவிலேனும் விருப்பு வாக்கு செலுத்தப்பட்டிருந்தால் பிரச்சினை இல்லை. அவ்வாறு முன்னிலை வந்த இருவர்களில் ஒருவருக்கேனும் இரண்டாம் மூன்றாம் விருப்பு வாக்கு என்று ஒன்றாவது சேர்க்கப்படாவிட்டால்தான் சிலவேளை சட்டப் பிரச்சினை தோன்றுவதற்கு வாய்ப்புண்டு என்று சிலர் கருத்துரைக்கின்றனர்
எது எவ்வாறிருப்பினும் , ஒரு வேட்பாளரை தெரிவு செய்வதற்கு அப்பால் மூன்று விருப்புக்களின் அடிப்படையில் விரல் விட்டு எண்ணக்கூடிய வாக்குகளேனும் அளிக்கப்படும் என்கின்ற ஊகத்தின் அடிப்படையில்தான் விருப்பு வாக்கு அளிக்கப்படாது விட்டால் என்பது குறித்து சட்டம் எதனையும் முன்வைக்கவில்லை எனலாம்.
எடுத்துக்காட்டாக , வாக்களித்த எவருமே தமது இரண்டாம், மூன்றாம் விருப்பு வாக்குகளை அளிக்காத ஒரு நிலை காணப்பட்டாலும் நடந்து முடிந்திருக்கும் ஜனாதிபதி தேர்தலில் எந்த மாற்றத்தையும் கொண்டுவராது. அதாவது, நடைபெற்ற தேர்தலுக்கு பதிலாக மறு தேர்தல் ஒன்று நடத்தப்படுகின்ற முறைமை நமது ஜனாதிபதி தேர்தலில் இல்லை. இதற்கு வசதியாகத்தான் முன்னணிக்கு வரும் இரண்டு வேட்பாளர்களுல் மிக அதிகூடிய வாக்கு பெறுபவர் ஜனாதிபதியாக தேர்ந்தெடுக்கப்படுவார் என்கின்ற வாசகம் தெளிவுபடுத்தி வைக்கின்றது.
ஆனால், இரண்டு முன்னிலை வேட்பாளர்களுக்குள் இரண்டாம் மூன்றாம் வாக்குகளைச் சேர்த்த பின்னர் மிகக் கூடிய வாக்கைப் பெற்றவர் ஜனாதிபதியாக தெரிவாகுவதோ அல்லது தெரிவு வாக்குகள் எதுவும் அளிக்கப்படாத நிலையிலோ அதிகூடிய வாக்குகளைப் பெற்றவர் ஜனாதிபதியாவார் என்பதும் கூட இன்னொரு வகையில் அரைவாசிக்கு மேல் அல்லது ஐம்பது வீதத்திற்கு மேல் என்பதை குறித்து நிற்கின்றது. அதேநேரம் மேற்படி இரு சந்தர்ப்பங்களின்போதும், இரு வேட்பாளர்கள் சமனான வாக்குகளைப் பெற்றிருப்பின் திருவுளச் சீட்டு முறையில் ஜனாதிபதி தேர்ந்தெடுக்கப்படுவார் என்பதை அரசியலமைப்பில் 94.(4),அ,ஆ ஆகியன தெளிவாக குறிப்பிடுகின்றது.
இது ஒரு புறம் இருக்க, நடைபெறப் போகும் எட்டாவது ஜனாதிபதித் தேர்தலில் முஸ்லிம் வேட்பாளர் ஒருவர் நிறுத்தப்பட்டு அவருக்கு அளிக்கின்ற வாக்குகளில் இரண்டாம் விருப்பை முன்னிலைக்கு வரக்கூடிய ஒருவருக்கு அளிப்பதன் ஊடாக முஸ்லிம் சமூகத்தின் அவலங்களை தீர்த்துக்கொள்ள முடியும் என்பது குறித்து ஒரு கதையாடல் அண்மையில் தொடங்கப்பட்டிருக்கின்றது.
இதன் சூத்திரதாரிகளாக முன்னாள் கிழக்கு மாகாண முதல்வர் ஹாபிஸ் நஸீர் மற்றும் முன்னாள் கிழக்கு மாகாண ஆளுநர் ஹிஸ்புல்லாஹ் ஆகியோர்கள் சமகாலத்தில் இந்தக் கருத்தை வெளியிட்டிருந்தபோதிலும் இதனை மிகுந்த பரபரப்போடும் அக்கறைக்குரிய விடயமாகவும் மாற்றுவதில் ஹிஸ்புல்லாஹ் முனைப்புடன் செயற்பட்டு வருகின்றார். இவ்வாறான கருத்தாடல் மேற்கிளம்பியிருப்பினும் இக்கட்டுரை எழுதும் வரை முஸ்லிம் ஒருவர் இம்முறையே ஜனாதிபதி தேர்தலில் போட்டியிட இருப்பதாக தேர்தல் ஆணைக்குழுவிற்கு அறிவிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த எத்தனம் முஸ்லிம் சமூகத்திற்கு ஆரோக்கியமான விளைவுகளை விதைக்குமா என்பதற்கு விவேகத்துடன் அணுகி விடை கண்டறியப்பட வேண்டிய கட்டாயத்தை நமது முஸ்லிம் சமூகத்தின் மீது ஹிஸ்புல்லாஹ் சுமத்தியிருக்கின்றார். அதன் அடிப்படையில் இது குறித்து அலசுவதும் இன்று தவிர்க்க முடியாத ஒன்றாகி இருக்கின்றது.
இந்த எண்ணக்கரு நல்லதொரு விடயமென நம் மத்தியில் இருக்கக்கூடிய சில அரசியல்வாதிகள் வரவேற்றுக்கொண்ட போதிலும் பகிரங்கமாக நமது சமூகத்தின் புத்திஜீவிகள் கருத்துக்களைப் பதிவு செய்வதில் ஆர்வம் காட்டவில்லை. அதே நேரத்தில் முஸ்லிம் கட்சிகள் என்ற வகையில் அதிகரித்த வாக்குப் பலத்தை பின்புலமாகக் கொண்டிருக்கின்ற ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ், அகில இலங்கை மக்கள் காங்கிரஸ், ஓரளவு வாக்குப் பலத்துடன் இருக்கக் கூடிய தேசிய காங்கிரஸ், ஐக்கிய சமாதானக் கூட்டமைப்பு ஆகிய கட்சிகளின் தலைமைத்துவங்கள் இந்த எண்ணக்கருவை உத்தியோகபூர்வமாக வரவேற்று கருத்துரைக்கவில்லை.
ஜனாதிபதித் தேர்தல் நெருங்கிவரும் இச்சூழலிலும் கூட நமது புத்திஜீவிகள் மட்டத்திலோ ஏதோ ஒரு வகையிலான மக்கள் செல்வாக்கை பின்புலமாகக் கொண்ட அரசியல் கட்சிகளோ ஜனாதிபதித் தேர்தலில் முஸ்லிம் வேட்பாளர் எனும் எண்ணக்கருவை இதுவரை மறுத்துரைக்காமல் இருப்பது ஹிஸ்புல்லாஹ்வின் எண்ணக்கருவை மறைமுகமாக ஏற்பதாக அர்த்தம் கொள்ளவும் முடியாது. ஏனெனில், இதில் நமது அரசியல் கட்சிகளைப் பொறுத்தவiரை ஐக்கிய சமாதானக் கூட்டமைப்பைத்தவிர ஏனைய கட்சிகள் பிரதான தேசியக் கட்சிகளின் பங்காளிகளாக மாறுவதில் கவனத்தை செலுத்தி வரும் நிலைப்பாடு எமக்கு இதனை கட்டியம் கூறுகின்றது.
உண்மையில் எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் முஸ்லிம்கள் தமது ஆதரவை யாருக்கு வழங்குவது என்பதில் தீர்க்கமான முடிவிற்கு முதலில் வர வேண்டும். இதில் குறிப்பிட்டுச் சொல்வதாக இருந்தால் வெற்றி வேட்பாளரை ஆதரித்து நமது சமூகத்திற்கு தேவையானவற்றை அடைந்து கொள்வது அல்லது ஒரு கொள்கையின் அடிப்படையில் அதற்கு நெருக்கமான ஒருவரை தேர்ந்தெடுத்துக் கொள்வதற்கு நமது வாக்கைப் பயன்படுத்திக் கொள்வது என்கின்ற இரண்டு நிலைகளுக்கு அப்பால் இதில் மூன்றாவது நிலைப்பாடு வருவதற்கு வாய்ப்பு மிக அரிதாகும்.
பொதுவாக ஜனாதிபதித் தேர்தலில் எத்தனை வேட்பாளர்கள் போட்டியிட்ட போதிலும் இரண்டு அணிகளுக்கிடையில்தான் பலத்த போட்டிநிலை ஏற்படுவதுதான் வழமையான வரலாறு. இது எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலிலும் மாறுபாட்டைப் பெறாது. இந்த வகையில் வைத்து பார்க்கின்றபோது மஹிந்த அணியில் நிறுத்துகின்ற வேட்பாளருக்கும் பிரதமர் ரணிலின் அங்கீகாரத்தோடு கூடிய ஐக்கிய தேசியக் கட்சி நிறுத்துகின்ற வேட்பாளருக்குமிடையில்தான் பலத்த போட்டி இருப்பதற்கான வாய்ப்பு காணப்படுகின்றது. இதன் அடிப்படையில் நமது மக்களின் தெரிவு என்பது இதனைச் சுற்றித்தான் சூழ்ந்தும் காணப்படுகின்றன.
கடந்த தேர்தல்களில் கட்சிகள் பெற்ற வாக்குகளின் பின்புலத்தில் இருந்து நோக்குவோமேயானால் மஹிந்த அணியினரின் வேட்பாளர் வெற்றிபெறக் கூடிய சாத்தியம் வெளிப்படையாக தெரியக் கூடிய ஒன்று. ஆயின், வெற்றி வேட்பாளரை ஆதரித்து நமது சமூகத்தின் தேவைகளை, இருப்பை தக்க வைத்துக் கொள்ள வேண்டுமென்றால், முஸ்லிம் வேட்பாளர் ஒருவரை நிறுத்தி இரண்டாம் விருப்பு வாக்கை அளித்து வெல்ல வைப்பதற்கான முயற்சி தேவையற்ற ஒன்றாகும்.
குறிப்பாக முஸ்லிம் வாக்குகளினால் தேர்ந்தெடுக்கப்பட்ட ஜனாதிபதி இவர் என்பதை அடையாளம் காட்டுவதற்கு இந்த தனியான வேட்பாளரை நிறுத்துகின்ற அவசியம் இல்லை. ஏனெனில், இதுகாலவரை அளிக்கப்பட்ட கூட்டு மொத்தமான வாக்குகளில் இருந்தே எவ்வளவு முஸ்லிம் வாக்காளர்கள் வாக்களித்தார்கள் என்றும் யார் யாருக்கு எவ்வளவு வாக்குகளை அளித்தோம் என்றும் சுமாரான கணிப்பீட்டின் பிரகாரம் எண்ணிக்கைகளை அடையாளப்படுத்துவதோடு நமது வாக்கின் பலத்தினால் வெற்றியடைந்தாரா இல்லையா என்பதும் கணிப்பின் அடிப்படையில் குறித்துரைக்கப்படுகின்றது.
இரண்டாம் நிலைக்கு வரக்கூடிய ஒருவரை நமது தனித்துவ வேட்பாளரனின் இரண்டாம் விருப்பு வாக்கின் அடிப்படையில் முன்னகர்த்தி அதில் பங்கெடுப்பதென்றால் ரணிலின் அணியையே பலப்படுத்த வேண்டும். ஏற்கனவே அந்த அணியிடம்தான் முழு முஸ்லிம் சமூகமும் அளிக்கின்ற கூட்டு மொத்தமான வாக்குகளின் சுமார் 80 வீதமானவை இருந்து வருவது வெட்ட வெளிச்சமானது. ஆகவே, இரண்டாம் விருப்பு வாக்கின் ஊடாக வெல்ல வைப்பதற்காக வேண்டி ஜனாதிபதித் தேர்தலில் முஸ்லிம் வேட்பாளர் ஒருவரை நிறுத்துவது என்பது அர்த்தமற்ற ஒன்றாகும்.
மஹிந்த அணியினருடைய தேர்தல் கோஷத்தில் முன்னிலைப்படுத்தப்பட்டிருக்கின்ற ஒரே நாடு ஒரே சட்டம் என்பதில் “ஒரே சட்டம்” என்ற கருத்தாடல் நேரடியாக முஸ்லிம் மக்களுடைய கட்டாயத் தேவைக் கட்டமைப்புக்களில் நேரடியாக தலையீடு செய்யக் கூடியதாகும். உதாரணமாக முஸ்லிம் தனியார் சட்டம் என்ற அடிப்படையில் வழங்கப்படுகின்ற சலுகைகள் அனைத்தும் ரத்துச் செய்வதை இது குறிக்கும். இதனால் முஸ்லிம் விவகாரம் என்று எதனையுமே அடையாளப்படுத்த முடியாத ஒரு இக்கட்டான நிலையைத் தோற்றுவிக்கும்.
அதேநேரம் ரணிலின் அணியை எடுத்துக் கொண்டால் இப்படி முற்றாக பாதகமான நிலையன்றி சிறு சிறு திருத்தங்கள் வரவே வாய்ப்புண்டு. உதாரணமாக, முஸ்லிம் பெண்களின் திருமண வயது பதினெட்டு என்ற கட்டுப்பாடு வருமேயன்றி முஸ்லிம் தனியார் சட்டம் முற்றாக இல்லாமல் போகின்ற சூழல் தோற்றுவிக்கப்படாது. இப்படியான அடிப்படையில் ஒப்புநோக்கிப் பார்த்து முஸ்லிம்களுக்கு பாதகம் செய்வதில் எல்லாத் தரப்பினரும் ஒன்றுதான் அதில் குறைந்த தரப்பினர் யார் என்று பார்த்து ஒரு கொள்கையின் அடிப்படையில் ஆதரித்துக் கொள்வது.

ஜனாதிபதித் தேர்தலில் முஸ்லிம் வேட்பாளர் நிறுத்த வேண்டும் என்று சிந்தனையுடையவர்கள் இன்னொரு விடயத்தையும் ஆழந்து நோக்க வேண்டும். வடக்கு கிழக்கு மாகாணங்களில் அமைந்துள்ள ஐந்து தேர்தல் மாவட்டங்களோடு கொழும்பு கண்டியைச் சேர்த்து ஏழு மாவட்டங்களில் வாழக்கூடிய முஸ்லிம்கள் அளிக்கின்ற வாக்குகளில் 75 வீதமானவை ஐக்கிய தேசியக் கட்சி அணியை நோக்கிச் செல்லக்கூடும் என்பது உறுதியாகத் தெரிந்தாலும் இருபத்திரெண்டு தேர்தல் மாவட்டங்களில் இது தவிர்ந்த ஏனைய பதினைந்து மாவட்டங்களில் வாழக்கூடிய முஸ்லிம் மக்கள் அளிக்கும் வாக்குகளில் சுமார் 30 வீதத்திற்கு உட்பட்டவையை மஹிந்த அணிக்கு அளிக்கப்படக்கூடிய நிலை இல்லாமலுமில்லை. இதுகூட ஜனாதிபதி வேட்பாளராக முஸ்லிம் ஒருவரை இறக்குவதென்பது, இலகுவாக முன்னிலை வேட்பாளராக வரக்கூடியவரென நம்பப்படுகின்ற மஹிந்த அணிக்கு சிலவேளை பாதகத்தையும் ஏற்படுத்தலாம்.
தேர்தல்களை முன்னிறுத்தி சமூக நலன் குறித்து எழுதப்படுகின்ற உடன்படிக்கைகள் வலுப்பெறுவதும் வலிதற்றுப் போவதும் இந்த ஜனாதிபதித் தெரிவின் வாக்கில் பெரிதாக ஆதிக்கம் செலுத்தப் போவதில்லை. மாறாக ஆட்சித் தலைவராக வரக்கூடியவரின் மனோநிலையும் அவரை அண்டி அமையக்கூடிய அரசாங்கத்தின் நாடாளுமன்ற உறுப்புரிமையின் எண்ணிக்கையிலும் அந்த உறுப்பினர்களின் சிந்தனைப் போக்கிலும் தங்கியிருக்கின்ற ஒன்றேயன்றி வேறில்லை என்பதைத்தான் இதுகாலவரை தேர்தல் காலகட்டங்களில் எழுதப்பட்ட ஒப்பந்தங்கள் நிரூபித்து நிற்கின்றன.

சமூக நலன் குறித்து எழுதப்பட்ட உடன்படிக்கைகளோ, வரலாற்று ரீதியாகப் பேசப்படுகின்ற பண்டா – செல்வா, டட்லி – செல்வா, இலங்கை - இந்தியா என இதுபோன்று எழுதப்பட்ட ஒப்பந்தங்கள் யாவும் முழுமையாக நிறைவேற்றப்படாமலும் செயலிழந்தும் காணப்படுகின்றன. இதற்கு முக்கிய காரணம் கடும்போக்குச் சிந்தனைகள் மிகவும் மேலோங்கியிருப்பதாகும். இத்தகைய சூழலுக்கு மத்தியில்தான் முஸ்லிம் ஒருவரை ஜனாதிபதி வேட்பாளராக நிறுத்துவதும் இவருக்கு அளிக்கப்படும் இரண்டாம் விருப்பு வாக்கின் அடிப்படையில் ஜனாதிபதியைத் தேர்ந்தெடுப்பதும் இதன் நிமிர்த்தம் உடன்பாட்டுக்கு வருவதும் எந்தளவுக்குச் சாத்தியமானது என்பதை ஒரு விரிவான கேள்வித் தளத்திற்கே தள்ளி விடுகின்றது.

பொதுவாக நம்மை நோக்கி வரும் ஜனாதிபதி தேர்தலில் நன்கு சிந்தித்து ஒரு வேட்பாளரை தெரிவு செய்ய வேண்டிய பொறுப்பிருக்கின்றது. அது வெறுமனே அச்சத்தின் அடிப்படையில் எடுக்கப்பட்ட தீர்வாக அமைந்துவிடக் கூடாது என்பதிலும் நமக்கு மிகுந்த கவனக்குவிப்பு தேவையாகின்றது. நமது வாழ்வு நம்மை படைத்தவனின் கையில் – விதியின் கையில் இருப்பதாகும். அந்த நம்பிக்கையையும் தைரியத்தையும் இழந்து விடாது முடிவுகள் எடுக்கப்பட வேண்டும்.
ஆகையால், ஒன்று வெற்றி வேட்பாளரின் பின்னால் நமது தெரிவு நோக்கி நகர்வது அல்லது கொள்கையின் அடிப்படையில் பௌத்த – பேரினவாத ஆதிக்க சக்திகளில் ஒப்பீட்டளவில் குறைந்த பாதகத்தை நமக்கு தரக்கூடிய ஒருவர் என்ற வகையில் நமது தேர்வு திரும்ப வேண்டுமேயன்றி, தனித்து முஸ்லிம் ஒருவர் ஜனாதிபதி தேர்தலில் களமிறங்கி அவர் பெறுகின்ற வாக்கிலுள்ள இரண்டாம் தெரிவின் ஊடாக ஜனாதிபதியை தெரிவு செய்துகொள்வது என்ற நிலையானது பொருத்தப்பாடுடைய இலக்காக அமைவதில் இருக்கின்ற சிரமத்திற்கு முன் நேரடியாக ஆரம்பத்திலேயே தீர்மானம் எடுத்து ஒரு வேட்பாளரை ஆதரித்துக்கொள்வதே அதிகரித்த சாதக நிலையாகும்.

இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -