காரைதீவு நிருபர் சகா-காரைதீவிலிருந்து ஆழ்கடலுக்குச்சென்று காணாமல்போன சாய்ந்தமருது மற்றும் காரைதீவைச்சேர்ந்த மூன்று மீனவர்களில் காரைதீவு மீனவர் மரணமடைந்துள்ளார்.
காரைதீவைச்சேர்ந்த சண்முகம் சிறிகிருஸ்ணன்(வயது47) என்பவரே ஆழ்கடலில் வைத்து மரணமானதாக கூறப்பட்டுள்ளது.
இவர் பிள்ளைகளான சாதனா(வயது22) உயர்தரம் தோற்றி 2சி1எஸ் பெற்றவர். ஜீவிதா(வயது19) இம்முறை உயர்தரம் தோற்றியவர். காயத்ரீ(வயது17) தற்போது உயர்தரம் கணிதப்பிரிவில் பயின்றுகொண்டிருக்கிறார். கடைக்குட்டி துஷாந்த்(வயது07) இரண்டாம்வகுப்பு கற்கிறார்.இந்த நால்வரையும் மனைவி சோமசுந்தரம் ஆனந்தமலர்(வயது45) ஆகியோரை விட்டுச்சென்றிருக்கிறார்.
இவர் கடலுக்கு சென்று 10வது நாளில் அதாவது 28ஆம் திகதி மரணித்துள்ளதாக சகமீனவர்களான சாய்ந்தமருதைச்சேர்ந்த சீனிமுகம்மது ஜூனைதீன்(வயது36) இஸ்மாலெவ்வை ஹரீஸ்(வயது37) கூறியுள்ளனர்.
அந்த இருமீனவர்களும் சிகிச்சைக்காக திருகோணமலை ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். பொலிசாரின் விசாரணையும் தொடர்கிறது.
குறித்த மீனவர்கள் சென்ற இயந்திரப்படகு சர்வதேசகடற்பரப்பில் 21 நாட்களின் பின்னர் கடந்த செவ்வாயன்று(8) மாலை கண்டுபிடிக்கப்பட்டிருந்தது தெரிந்ததே.
கடந்த 18ஆம் திகதி காரைதீவு மாளிகைக்காட்டுத்துறையிலிருந்து ஆழ்கடலுக் இயந்திரப்படகில் சென்ற சாய்ந்தமருதைச்சேர்ந்த சீனிமுகம்மது ஜூனைதீன்(வயது36) இஸ்மாலெவ்வை ஹரீஸ்(வயது37) காரைதீவைச்சேர்ந்த சண்முகம் சிறிகிருஸ்ணன்(வயது47) ஆகிய மூவரே இவ்விதம் கடலில் மாயமானவர்களாவர்.
இந்தநிலையில் சர்வதேசகடற்பரப்பில் செயலிழந்து 0222 என்ற இலக்கமுடைய இயந்திரப்படகு ஒன்று மீனவர்களுடன் தத்தளிப்பதாக தென்பகுதி மீனவர்கள் சிலர் மாத்தறை கடற்படைதலைமையகத்திற்கு தகவல்கொடுத்ததன்பேரில் கடற்படை முயற்சியில் இறங்கியது.
அதேவேளை தென்பகுதி மீனவர்களின் படகு குறித்த நிர்க்கதியாகவிருந்த படகினை இழுத்துகொண்டுவந்து நேற்றுமுன்தினம்(9) புதன்மாலை திருமலைக்கடற்கரையில் சேர்த்தனர்.
இதனையடுத்து படகுஉரிமையாளரிடம் காரைதீவு பிரதேசசபைத்தவிசாளர் கே.ஜெயசிறில் தொடர்புகொண்டு விசாரித்தார்.
காரைதீவு மீனவர் ஆழ்கடலில்வைத்து 10நாட்களில் மரணித்துள்ளதாகவும் அவரை இருநாட்களில் கடலுக்குள் போட்டதாகவும் கூறப்பட்டது. அவருக்கு ஏலவே மூச்சுநோய் இருந்ததையும் குறிப்பிட்டுள்ளார்.
அங்கு படகில் கொண்டுவரப்பட்ட இருமீனவர்களையும் திருமலை வைத்தியசாலைக்கு கொண்டுசென்று அனுமதித்துள்ளனர். ஒருவருக்கு சலக்கடுப்பு மற்றவருக்கு வயிற்றுவலியும் இருந்ததாக தெரிகிறது.
அவர்களது செல்லிடத்தொலைபேசி உள்ளிட்ட பொருட்கள் பொலிசார் விசாரணையின்பொருட்டு தம்வசம் வைத்திருப்பதாகக்கூறப்படுகிறது.
அநேகமாக குறித்தமீனவர்கள் இருவரையும் இன்று அவர்களது சொந்த ஊரான சாய்ந்தமருதுக்குக்கொண்டுவரப்படலாமெனக்கூறப்படுகிறது.
குறித்தமீனவர் மரணமாகியசெய்தியை தவிசாளர் மீனவரின் வீட்டுக்குச்சென்று கூறியதும் வீடு ரணகளமாகியது. படகு கண்டுபிடிக்கப்பட்ட செய்தி கேள்விப்பட்டு மகிழ்ச்சியுடனிருந்து அப்பாவும் வருவார் என்று எதிர்பார்த்துகாத்துக்கொண்டிருந்த பிள்ளைகளுக்கு இச்செய்தி பேரிடியாக மாறியுள்ளதுடன் தாழாத சோகத்தில் தேம்பிதேம்பி அழுகின்றனர்.