உணவு வகைகளை உற்பத்தி செய்பவர்கள் நேர்மையாக நடந்த கொள்வதுடன், அந்த உணவில் ஆரோக்கியம் இருப்பதற்கும் உற்பத்தி துறையை சிறப்பாக பயன்படுத்த வேண்டும் என இலங்கை தென்கிழக்கு பல்கலைக்கழக தொழில்நுட்பவியல் பீடத்தின் பீடாதிபதி கலாநிதி எம்.ஜே.முகம்மட் தாரீக் தெரிவித்தார்.
பல்கலைக்கழக உயிர்முறைமையியல் தொழில்நுட்பவியல் பிரிவின் ஏற்பாட்டில் அம்பாறை மாவட்ட கரையோர பிரதேசத்திலுள்ள உள்ளூர் உணவு உற்பத்தியாளர்களுக்கான “நற்சுகாதார முறையிலான உணவு உற்பத்தி செயற்பாடுகள்” தொடர்பான செயலமர்வு 04 ஆந் திகதி உயிர்முறைமையியல் தொழில்நுட்பவியல் பிரிவின் தலைவர் கலாநிதி யூ.எல்.அப்துல் மஜீட் தலைமையில் நடைபெற்றது . இங்கு பிரதம அதிதியாக கலந்து கொண்டு உரையாற்றும் போதே பீடாதிபதி மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
பீடத்தின் கேட்போர் கூடத்தில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில் தொடர்ந்து அவர் உரையாற்றுகையில், உணவு உற்பத்தி தொழில் என்பது மிகவும் புனிதமானது. உணவில் கலப்படம் இல்லாமல் சுத்தமானதாக உற்பத்தி செய்ய வேண்டும். நமது உற்பத்தியை மக்கள் நம்பிக்கையுடன் உணவை உண்ண வேண்டும்.
உணவு உற்பத்தியாளர்களுக்கான சிறு பாட நெறிகளை எதிர்காலத்தில் நடாத்துவதற்கு திட்டமிட்டுள்ளோம். எனவே, இங்கு வந்துள்ள உற்பத்தியாளர்கள் இவ்வாறான சந்தர்ப்பத்தை நன்கு பிரயோசனமுள்ளதாக பயன்படுத்திக்கொள்ள கொள்ள வேண்டும் என மேலும் தெரிவித்தார்.
இந்த செயலமர்வில அட்டாளைச்சேனை பிரதேச சுகாதார வைத்திய அதிகாரி எம்.ஐ.எம். இஸ்மாயில் , பிரிவுத் தலைவர் எஸ்.எல்.அப்துல் ஹலீம் மற்றும் விரிவுரையாளர்கள் உட்பட அக்கரைப்பற்று, அட்டாளைச்சேனை, ஒலுவில்,பாலமுனை,கரைதீவு,சம்மாந்துறை,திருக்கோவில், தம்பிலுவில் போன்ற பிரதேசங்களைச் சேர்ந்த உற்பத்தியாளர்கள் கலந்து கொண்டனர்.