மாற்றுத்திறன்கொண்ட மூவின பாடசாலை மாணவர்களுக்கென ஒழுங்கு செய்யப்பட்ட கலை கலாசார விசேட விழா மட்டக்களப்பு- காத்தான்குடி ஸாஹிறா விசேட பாடசாலை வளாகத்தில் நடைபெற்றது.
இவ்விழாவில் மட்டக்களப்பு- ஊறணி சரஸ்வதி வித்தியாலயம், காத்தான்குடி- தாருஸ்ஸலாம் வித்தியாலயம், மொனாஸ் ஆங்கில பாடசாலை, ஹனா லிட்டில் லேனர்ஸ், சிறுவர் அபிவிருத்தி நிலையம், ஸாஹிறா விசேட பாடசாலை மற்றும் அம்பாறை உகன சரன வித்தியாயலயம் ஆகிய ஏழு பாடசாலைகளைச் சேர்ந்த மாணவர்கள் பங்கேற்றனர்.
மட்டக்களப்பு மத்தி வலயக்கல்விப்பணிப்பாளர் டாக்டர் எஸ்எம் எம்எஸ். உமர்மௌலானா விழாவின் பிரதம அதிதியாகக்கலந்துகொண்டார்.
விசேட தேவையுடைய மாணவர்கள் மற்றும் சாதாரண மாணவர்களுக்கிடையே விளையாட்டின் மூலமாக சமத்துவம் , சமாதானம் மற்றும் சமூக நல்லிணக்கத்தை ஏற்படுத்துவது இவ்விசேட வேலைத்திட்டத்தின் நோக்கமாகும்.
ஸாஹிறா விசேட பாடசாலை அதிபர் அன்வர் சாதிக் தலைமையில் நடைபெற்ற இவ்விழாவில் பிரதேசக் கல்விப்பணிப்பாளர் ஏஜிஎம் ஹக்கீம் சமாதானக்கல்வி மற்றும் சமூக நல்லிணக்க பணிப்பாளர் எம்ஜிஏ நாஸர், ஹியுமனிட்டி அன்ட் இன்குளுஷன் நிறுவனத்தின் திட்ட முகாமையாளர் கிறிஸ்டி சந்திரகாந் , கெமிட் நிறுவனத்தின் திட்ட உத்தியோகத்தர் எம் பிரஷாந்தினி ஆகியோர் உட்பட பலர் பிரசன்னமாயிருந்தனர்.
பாடசாலைகளினது கலை கலாசார நிகழச்சிகள் இங்கு அரங்கேற்றப்பட்டதுடன் ஸாஹிறா பாடசாலை மாணவர்களுக்கு விளையாட்டு உபகரணங்களும் கையளிக்கப்பட்டன.
விசேட தேவையுடையவர்கள்மீது அன்பு காட்டுங்கள் அனுதாபப் படவேண்டாம் என இங்கு உரைநிகழ்த்திய வலயக்கல்விப்பணிப்பாளர் உமர்மௌலானா குறிப்பிட்டார்.
