முஸ்லிம் சமூகத்தின் பாதுகாப்பைக் கருத்திற்கொண்டே ஜனாதிபதித்தேர்தல் தொடர்பில் தீர்மானம் மேற்கொள்ளப்படும்



 – கல்குடாத்தொகுதி அமைப்பாளர் எச்.எம்.எம்.றியாழ்-
எம்.என்.எம். யஸீர் அறபாத்- ஓட்டமாவடி-

முஸ்லிம் சமூகத்தின் பாதுகாப்பைக்கருத்திற்கொண்டே ஜனாதிபதித்தேர்தல் தொடர்பாக தீர்மானம் மேற்கொள்ளப்படுமென ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் உயர்பீட உறுப்பினரும், கல்குடாத்தொகுதி அமைப்பாளருமான கணக்கறிஞர் எச்.எம்.எம்.றியாழ் தெரிவித்துள்ளார்.

அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது, தற்போது நாட்டில் நாளுக்கு நாள் முஸ்லிம் விரோதப்போக்கு முன்னெடுக்கப்பட்டு வருகின்றது. இவை நாட்டின் அபிவிருத்தி, முன்னேற்றத்திற்கு உகந்ததல்ல என்பதுடன் நாட்டின் வளர்ச்சியை வெகுவாகப் பாதிக்கும் காரணியாகவுள்ளது.

இவ்வாறான சூழ்நிலையில், முஸ்லிம் விரோதப்போக்கைக் கட்டுப்படுத்துவதில் அரசு அசமந்தமாகவே செயற்படுகிறது. இதனைக்கருத்திற்கொண்ட முஸ்லிம் அரசியல் தலைமைகள் அரசாங்கத்திற்கு அழுத்தம் கொடுத்து முஸ்லிம்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்தும் நோக்கில் தங்களின் அமைச்சுப்பதவிகளை இராஜனாமாச் செய்திருந்தார்கள்.
அமைச்சர்கள், இராஜாங்க அமைச்சர்கள், பிரதியமைச்சர் உட்பட அனைவரும் இராஜனாமாச்செய்து அரசாங்கத்திற்கு ஒரு மாத காலம் அவகாசம் வழங்கியும், அவ்வாறு வழங்கப்பட்ட கால அவகாசம் முடிந்த நிலையிலும், எவ்வித உத்தரவாதங்களும் நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டதாகத் தெரியவில்லை.
இவ்வாறு நிலைமை சென்று கொண்டிருந்தால், முஸ்லிம்களின் பாதுகாப்பு கேள்விக்குறியாக்கப்பட்டால் தொடர்ந்தும் இந்த அரசாங்கத்திற்கு ஆதரவு வழங்குவதில் எவ்வித நியாயங்களுமில்லை. எனவே, முஸ்லிம் தலைமைகள் மாற்றுவழி தொடர்பாக சிந்திக்க வேண்டியிருக்கிறது.

தற்போதைய பிரச்சனைகளுக்குப் பின்னால் ஜனாதிபதித்தேர்தலை இலக்கு வைத்து எதிர்த்தரப்பு அரசியல் விளையாட்டு ஆரம்பித்திருக்கிறது. என்றாலும், அவைகளைக் கட்டுப்படுத்துவதற்கு அரசாங்கம் எவ்வித நடவடிக்கைகளும் முன்னெடுக்காதிருப்பது வேடிக்கையாக இருக்கிறது.
தற்போதைய முஸ்லிம் விரோதப்போக்கை எதிரணி முன்னெடுப்பதால், முஸ்லிம் சமூகம் தங்களின் ஒட்டு மொத்த ஆதரவையும் மீண்டும் ஐக்கிய தேசியக்கட்சி தலைமையிலான வேட்பாளருக்கு வழங்குவார்கள். அவர்களுக்கு வேறு வழியில்லை என நினைத்து சிலர் பேசிக்கொள்வதை அவதானிக்க முடிகிறது.
அவ்வாறில்லை. முஸ்லிம் சமூகம் அன்று மேற்கொண்ட தீர்மானம் தலைமைத்துவங்களின் முடிவு வரும் முன் சமூகமாக ஒரு முடிவுக்கு வந்திருந்தது.
அதன் விளைவுகளை இன்று நாம் அனுபவித்துக் கொண்டிருக்கிறோம். இன்று சமூகத்தின் பாதுகாப்பைக் கருத்திற்கொண்டு பதவிகளைத் தூக்கியெறிந்து, நமக்காக ஒற்றுமைப்பட்டு பாடுபட்டுக்கொண்டிருக்கும் தலைமைகளுக்கு மதிப்பளித்து, அவர்கள் மேற்கொள்ளும் தீர்மானத்திற்கேற்ப சமூகமும் உடன்பட்டு செயற்பட முன் வர வேண்டும்.
ஜனாதிபதித்தேர்தல் நடைபெறுமென எதிர்பார்க்கப்படும் இச்சந்தர்ப்பத்தில், முஸ்லிம் அரசியல் தலைமைகள் ஒன்றுபட்டு முஸ்லிம் சமூகத்தின் பாதுகாப்பைக்கருத்திற்கொண்டு பிரதான கட்சிகளின் ஜனாதிபதி வேட்பாளர்களின் கொள்கைகளை ஆராய்ந்து, அவர்களுடன் சமூகத்தின் பாதுகாப்பை முன்னிலைப்படுத்தி பேச்சுவார்த்தைகளை மேற்கொள்வதும், அதன் பிரகாரம் எந்த வேட்பாளரின் கொள்கை முஸ்லிம் சமூகத்தின் பாதுகாப்பை உறுதிப்படுத்துகிறதோ, அவ்வேட்பாளரை ஆதரிப்பதற்கு முஸ்லிம் தலைமைகள் இன்று போல் ஒற்றுமையாக சமூகத்தை வழிநடாத்த முன் வர வேண்டுமென எதிர்பார்க்கிறோம் என மேலும் தெரிவித்துள்ளார்.

இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -