வெளிவாரி பட்டதாரிகளுக்கும் நியமனங்களை வழங்கக்கோரிய கவனயீர்ப்பு போராட்டம் கிண்ணியாவில் இடம் பெற்றது
திருகோணமலை மாவட்ட வேலையில்லா பட்டதாரிகள் சங்கத்தினால் இன்று (29) திங்கட் கிழமை கிண்ணியா திருகோணமலை மட்டக்களப்பு பிரதான வீதியின் கிண்ணியா பீச்சுக்கு முன்னால் இடம் பெற்ற இக் கவனயீர்ப்புப் போராட்டத்தில் பல நூற்றுக்கும் அதிகமான வெளிவாரி பட்டதாரிகள் கலந்து கொண்டு தங்களுக்கும் நியமனங்களை வழங்குமாறும் கோசங்களை எழுப்பியிருந்தார்கள்.
அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் நியமனம் வழங்குதலில் அரசாங்கம் வெளிவாரி பட்டதாரிகளை புறக்கணித்தால் எதிர்வரும் தேர்தல்களை நாங்கள் புறக்கணிப்போம், அரச நியமனங்களின் போது எங்களையும் உள்வாங்கு, பட்டதாரிகள் நாட்டின் சொத்து, பத்து இலட்சம் வேலை வாய்ப்பு எங்கே போன்ற பல பதாகைகளுடனான கோசங்களை எழுப்பியிருந்தார்கள்.
கிழக்கில் அறுநூறுக்கும் மேற்பட்ட வெளிவாரி பட்டதாரிகள் உள்ளார்கள் எங்களை அரச நியமனத்தில் உள்வாங்கப்பட வேண்டும் இல்லாவிட்டால் எங்களது குடும்ப வாக்குகளை பெறுவதற்காக அரசியல் வாதிகள் எங்களுக்கு பின்னால் தேர்தல் காலங்களில் வரவேண்டி ஏற்படும் இதனைக் கொண்டு தனிப்பெரும் சக்தியாக மாறுவோம் வெளிவாரி பட்டங்கள் என்பதும் நாட்டின் சொத்தாக விளங்குகிறது எனவே தற்போதைய அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் நியமனம் வழங்களில் எங்களுக்கும் இந்த அரசாங்கம் நியமனங்களை வழங்க வேண்டும் எனவும் கவனயீர்ப்பில் ஈடுபட்டோர்கள் ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்தார்கள்.
கிண்ணியா பீச் கடற்கரை பூங்காவில் இருந்து கிண்ணியா பிரதேச செயலகம் வரை நடைபவணியாக சென்ற வேலையில்லா வெளிவாரி பட்டதாரிகள் மகஜர் ஒன்றையும் இதன் போது கையளித்தார்கள்.