கடந்த உயிர்த்த ஞாயிறு தாக்குதலின் பின்னர் எமது சமூகம் பல இன்னல்களையும் அதிகமான நெருக்குவாரங்களையும் எதிர்கொண்டது. இதனை மிகவும் தந்திரோபாயமாக எதிர்கொண்ட எமது தேசியத் தலைவர் கௌரவ ரவூப் ஹக்கீம் அவர்களை முழு நாட்டு முஸ்லிம்களும் ஏகோபித்து ஏற்றுக்கொண்டுள்ளதை அறிய முடிகிறது.
இனவாத வெறிபிடித்த ஒரு சிலரின் நடவடிக்கையினால் முழு நாடும் சவாலை எதிர்கொண்டது. அதேபோன்று நமது சமூகமும் பாதுகாப்பு அச்சுறுத்தலை சந்தித்தது. இந்த சந்தர்ப்பத்தில்தான் நாட்டின் நலன் கருதியும் சமூகத்தின் இருப்பு பாதுகாப்பு குறித்தும் அவசர முடிவுக்கு வந்து அமைச்சர் பதவிகளை துறந்து நிலமையை பூரண கட்டுப்பாட்டில் கொண்டு வந்தார் எமது தலைவர். இலங்கையின் முழு முஸ்லிம் பாராளுமன்ற உறுப்பினர்களுக்கும் தலைமை தாங்கினார்.
தற்போது பல விடயங்கள் இந்த நாட்டின் ஜனாதிபதி, பிரதமர் மற்றும் முக்கிய அமைச்சர்களோடு காதோடு காதாக பேசி முடிவுக்கு கொண்டு வரப்பட்டுள்ளது. நியாயமற்ற பலரின் கைதுக்கு விடுதலை கிடைத்துள்ளது. பொது வெளியில் பிரஸ்தாபிக்க முடியாத பல விடயங்களுக்கு தீர்வு காணப்பட்டுள்ளது. இவையனைத்தையும் ஊடகங்களில் கொக்கரித்துக்கொள்ள முடியாது.
ஆனால் தற்போது சிலர் முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் ரவூப் ஹக்கீம் உட்பட அனைத்து பாராளுமன்ற உறுப்பினர்களையும் பிரதமரிடம் எதிரியாக காட்டி குழப்பம் உருவாக்க முயற்சிக்கின்றனர். இதனை ஒருபோதும் ஏற்றுக் கொள்ள முடியாது.
வீணான பிளவுகளை உருவாக்கி கட்சியையும் சமூகத்தையும் இக்கட்டான நிலைக்கு கொண்டு சென்று அரசியல் பிழைப்பு நடத்தும் சிலரின் முயற்சிகள் ஒருபோதும் பலிக்காது.
எனவே மீளவும் அமைச்சர் பதவிகளை பொறுப்பெடுத்து சமூகத்திற்கு சாதிக்க வேண்டிய பல விடயங்களை வெற்றிகொள்வதில் எந்தவித தயக்கமும் காட்டவேண்டியதில்லை என்றும் ஏ.சி யஹ்யாகான் தெரிவித்துள்ளார்.