சாமான்ய சிங்கள மக்களுக்கும் சாமான்ய முஸ்லிம் மக்களுக்குமிடையில் நிரந்தரப் பிரிகோடு வரையப்படுகிறது. சிங்கள அரசியலும், பௌத்த மற்றும் இஸ்லாமியத் தீவிரவாதங்களும் இம்முயற்சியில் இறங்கியிருப்பது கண்கூடு என்று முன்னாள் அமைச்சர் பஷீர் சேகு தாவூத் தெரிவித்துள்ளார்.
முஸ்லிம் அரசியல் கள நிலவரம் தொடர்பாக இன்று (09) ஊடகங்களுக்கு கருத்து வெளியிட்ட அவர் மேலும் குறிப்பிட்டுள்ளவை வருமாறு,
இங்கு குறிப்பிடப்படும் தீவிரவாதம் என்பது கருத்துத் தீவிரவாதமாகும்.
இவ்விடத்தில் முஸ்லிம் அரசியல் திகைத்துப்போய் அசைவற்று நிற்க; முஸ்லிம் அரசியல்வாதிகள் சிலரும் அவர்களது ஆதரவாளர்களும் சாதாரண முஸ்லிம் மக்களை உசுப்பேற்றி வாக்கு வசூலிக்கும் உத்தியை இவ்வளவும் நடந்தபின்னும் நிறுத்தவில்லை. சமூகம் எவ்வித ஆபத்தை எதிர்கொண்டாலும் இவர்களுக்கு கவலையில்லை, தமது எதிர்காலம் சிறந்த சித்தி பெற்றால் சரி என்று நினைக்கிறார்கள்.இம்முஸ்லிம் அரசியல்வாதிகள் சிங்கள அரசியலின் பின்னாலும் சிங்கள பௌத்த அரசியல் தலைவர்களின் தோழில் சவாரி செய்தும் உயர்பதவிகளைப் பெறுகிறவர்களேயாகும். இவர்கள் கொழும்பில் இருக்கும் போது சிறகுகள் நனைந்த பறக்கமுடியாத கொசுவாட்டம் கால்களைப் பின்னிப் பின்னி நடக்கிறார்கள், தமது ஊர்களுக்கு வந்துவிட்டால் வாய்ச்சொல் வீரர்களாகி விளாசுகிறார்கள்.
சிங்கள அரசியல்வாதிகள் பலர், நாடு ஆபத்தான நிலையில் இருக்கிறது என்று தெரிந்துகொண்டும் சூழ்நிலையை தங்களது தேர்தல் வெற்றிக்கு சாதகமாக்கும் வேலைத்திட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.இவர்கள் நாடு எக்கேடுகெட்டாலும் பரவாயில்லை; தாங்கள் உருப்பட்டால் போதும் என்று எண்ணுகின்றனர். இத்தனைக்கும் இவர்கள் மார்புச் சட்டையில் பித்தளைத் தேசியக்கொடியைக் குத்திக்கொண்டு தேசபக்தர்களாக வேடம் தரித்தவர்களாக இருக்கிறார்கள். முஸ்லிம் வாக்குகளும் தமக்குத் தேவை என்பதை உணரும் சிங்கள அரசியல்வாதிகள் சிலர் ஊமையர்களாயும் செவிடர்களாயும் இருந்து தப்பிக்கப்பார்த்தாலும், இவர்களின் அமைதி இரண்டு இனங்களுக்கிடையிலும் விழுகிற பிரிவை மேலும் ஆழமாக்குகிறது.
தேசிய அளவில் சிந்தித்து ஊரளவில் பேசும் அரசியல்வாதிகளாக மாற்றம்காண இவர்களுக்கு பாடம் கற்பிக்க மக்களைத்தவிர வேறு எவரால்தான் முடியும் ? மக்களில் அநேகர் இந்த அரசியல்வாதிகளின் வார்த்தை ஜாலங்களில் கட்டுண்டு இரசிகர் கூட்டமாக பொய்மைத் திரையில் நிலைகுத்தி நிற்கையில் உறைக்கும்படி எழுதுவதைத் தவிர வேறு என்னதான் வழியுண்டு? எழுத்து கருத்துக்களைப் பற்றிய மக்கள் திரளை உருவாக்கிய வரலாற்றை நம்புவோம்!
முஸ்லிம் சிறுபான்மை அரசியலில் Main stream உக்கும் Sub stream உக்கும் இடையில் பதவி தவிர்ந்த உறுதியான உறவு நூலிழையையாவது கட்டிவிடவேண்டும். இப்போது போவது போல் அங்கொன்றும் இங்கொன்றும் பேசியும் செய்தும் வந்தால் ஒரு சிறைக்குள் இருந்து இன்னொரு சிறைக்கு மாறுவது சுதந்திரம் என்று முஸ்லிம் மக்களை இத்துணை காலமும் நாம் நம்பவைத்த அரசியலை தொடர்வதாகவே இருக்கும். இந்தக் கூத்தை 4/21 ஞாயிறுக்குப் பிறகும் தொடர்ந்து செய்துவந்தால் மிகக் குறுகிய காலத்துக்குள் இலங்கையில் முஸ்லிம் மக்களின் நிம்மதியான வாழ்வு கசக்கி எறியப்பட்டுவிடும்.
ஊரில் "மற்றவர்களைப் போல் நாமில்லை" என்று பேசியும், கொழும்பில் சிங்களத் தலைவர்களுடன் "நாங்கள் உங்களோடுதான்" என்று உத்தரவாதம் கொடுத்தும் செய்கிற பச்சோந்தி அரசியலைக் கைவிடுவோம்.ஒரே குரலில், ஒரே வகையில் இரு இடங்களிலும் பேசுவோம் இரு இடங்களிலும் செயல்படுவோம் நன்மதிப்பை மீளப்பெறுவோம்.சிங்களப் பகுதிகளில் சிதறி - ஐதாகி வாழுகிற முஸ்லிம் மக்களின் பாதுகாப்பை பேணுவதனடிப்படையில் பேசுவதும் செயல்படுவதுமே இன்றைய அதி முக்கிய அரசியல் சமூப் பணியாகும் என்றும் குறிப்பிட்டார்.