கிழக்குமாகாண தொண்ராசிரியர்களுக்கு இரண்டாம்கட்ட நியமனமும் வழங்கப்படும் என பாராளுமன்ற உறுப்பினர் இம்ரான் தெரிவித்தார். தொண்டராசிரியர் நியமனத்தை பெற்றுக்கொடுக்க பாராளுமன்ற உறுப்பினர் இம்ரான் மேற்கொண்ட முயற்சிகளை பாராட்டுமுகமாக கிழக்குமாகாண தொண்டராசிரியர் சங்கத்தால் வெள்ளிக்கிழமை மாலை ஏற்பாடு செய்த கூட்டத்தில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே இவ்வாறு தெரிவித்தார்.
அங்கு தொடர்ந்தும் உரையாற்றிய அவர்,
கடந்த ஆட்சியில் நியமனம் வழங்காமல் ஏமாற்றப்பட்ட தொண்டராசிரியர்களுக்கு எமது ஐக்கிய தேசிய கட்சி அரசாங்கத்தால் நியமனம் வழங்க அமைச்சரவைபத்திரம் தாக்கல் செய்யப்பட்டது. எனினும் அண்மையில் ஏற்பட்ட 52 நாள் அரசியல் குழப்பத்தால் அப்போதிருந்த கல்வி அமைச்சர் விஜயதாச ராஜபக்சவால் அந்த அமைச்சர்வைபத்திரம் இரத்துச்செய்யப்பட்டது.
அதன்பின் மீண்டும் பிரதமராக ரணில் விக்ரமசிங்க பதவி ஏற்றபின் நான் கல்வி அமைச்சர் அகிலவிராஜ் காரியவசத்திடம் விடுத்த வேண்டுகோளுக்கமைய 811 தொண்டராசிரியர்களை ஆசிரியர் சேவையில் இணைத்துகொள்வதற்கான அமைச்சரவை அனுமதி பெறப்பட்டு இப்போது அதற்கான நேர்முகத்தேர்வும் நிறைவடைந்துள்ளது.
இந்நியமனத்தில் இன, மத, பிரதேச, அரசியல் வேறுபாடுகள் இன்றி பொருத்தமான தகுதியுடைய அனைவருக்கும் நியமனம் வழங்கப்படும். இந்நியமனத்தின் பின் மீதமுள்ள தொண்டராசிரியர்களை ஆசிரியர் சேவையில் இணைத்துக்கொள்ள இரண்டாம் கட்ட நியமனம் வழங்கவும் எதிர்பார்த்துள்ளோம். அதற்காக இதுவரை தொண்டராசிரியர்களாக பதிவு செய்யாதவர்களை பதிவு செய்வதற்கானநேர்முகத்தேர்வும் அண்மையில் கிழக்குமாகாண சபையில் இடம்பெற்றது.
இந்நியமனத்தை வழங்க நடவடிக்கை மேற்கொண்ட பிரதமர் ரணில் விக்ரமசிங்க கல்வி அமைச்சர் அகிலவிராஜ் காரியவசம் ஆகியோருக்கு எனது நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன் என தெரிவித்தார்.