மேலும் பேராசிரியர் ஜீ.எல்.பீரிஸ் அவர்கள் தனது கருத்துரையில் CTA சட்டமாக அங்கீகரிக்கப்படுமிடத்து நாம் கடந்த பல நூற்றாண்டுகளாக குறிப்பாக கடந்த 70 வருடங்களுக்கு மேலாக அனுபவித்து வரும் அடிப்படை ஜனநாயக உரிமைகளை இழக்க நேரிடும் என்றும் சுருக்கமாக சொல்வதானால் CTA அமுலுக்கு வரும் பட்சத்தில் இலங்கை ஒரு " பொலிஸ் இராஜ்ஜியமாக" ( Police State) மாறிவிடும். மேலும் இந்த சட்டம் ஒரு குறித்த சாராரை மாத்திரம் பாதிக்க கூடியதல்ல, மாறாக நாட்டின் அனைத்து பிரஜைகளினதும் சுதந்திரத்தையும் அடிப்படை உரிமைகளையும் பறிக்கும் மோசமான ஒரு சட்டமாகும். எனவே சாதாரண பெரும்பான்மையில் நிறைவேற்றக்கூடிய இந்த சட்டமூலம் பாராளுமன்றத்தில் வாக்கெடுப்புக்கு விடப்படும் சந்தர்ப்பத்தில் கட்சி பேதங்களை மறந்து இந்த சட்ட மூலத்தை தோற்கடிப்பதற்கு ஒன்றினைய வேண்டியதன் அவசியம் குறித்தும் பேராசிரியர் ஜீ எல் பீரிஸ் வலியுறுத்தினார்.
நிகழ்வுக்கு தலைமை தாங்கிய NFGG யின் தேசிய அமைப்பாளர் நஜா மொஹமத் கருத்து தெரிவிக்கும் போது, நாம் 2015 ஆம் ஆண்டு இந்த அரசாங்கத்தை கொண்டு வந்ததன் பிரதான நோக்கம் மக்களின் சுதந்திரம், மற்றும் அடிப்படை உரிமைகளை உத்தரவாதப் படுத்தக் கூடியதான ஜனநாயக சூழலை உருவாக்கவே. 18வது திருத்தத்தை இல்லாமல் செய்து 19வது திருத்தத்தை கொண்டுவந்ததே மக்களின் சுதந்திரம் மற்றும் அடிப்படை ஜனநாயக உரிமைகளை பாதுகாக்கவே. ஆனால் இவ்வனைத்து முயற்சிகளையும் அர்த்தமற்றதாக்கிவிடும் சட்டமூலமே இந்த பயங்கரவாத எதிர்ப்பு சட்டம். எனவே 2015 இல் இந்த அரசாங்கத்தை பதவிக்கு கொண்டுவர உழைத்த அனைத்து சக்திகளும் CTA சட்ட மூலத்தை தோற்கடிப்பதற்கு முன்வரவேண்டுமென கேட்டுக் கொண்டார்.
மேலும் நாட்டின் பல்வேறு மட்டத்திலும் இந்த சட்டமூலம் தொடர்பான விழிப்புணர்வை மக்களிடையே கொண்டு செல்வதுடன் பாராளுமன்ற உறுப்பினர்களுக்கும் இந்த சட்டமூலம் தொடர்பாக தெளிவூட்டுவதற்கும் முயற்சிகள் மேற்கொள்ளப்பட வேண்டும் எனவும் கலந்துரையாடப்பட்டது.
இந்த நிகழ்வில் NFGG யின் தவிசாளர் ஸிராஜ் மஷூர், பிரதி தவிசாளர் பொறியியலாளர்.அப்துல் ரஹ்மான், மற்றும் தலைமைத்துவ சபை உறுப்பினர்கள், உள்ளுராட்சி மன்ற உறுப்பினர்கள், சிவில் சமூக அமைப்புகளின் பிரதிநிதிகள், சமூக அரசியல் செயற்பாட்டாளர்கள், சட்டதரணிகள் என பலரும் கலந்து கொண்டனர்.