பல்கலைக்கழகங்களுக்கு தெரிவாகின்ற தமிழ் மாணவர்களின் தொகை குறைந்து செல்கிறது

பேராசிரியர் எஸ். சுதர்சன் கவலை
எஸ்.அஷ்ரப்கான்-
ல்கலைக்கழகங்களுக்கு தெரிவாகின்ற தமிழ் மாணவர்களின் எண்ணிக்கை குறைந்து கொண்டே செல்கின்றது என்று கிழக்கு பல்கலைக்கழக பேராசிரியர் எஸ். சுதர்சன் கவலை தெரிவித்தார்.

பல்கலைக்கழக மாணவர்கள் சமூக சேவை ஒன்றியம் - காரைதீவின் வெள்ளி விழா கடந்த ஞாயிற்றுக்கிழமை மாலை காரைதீவு கலாசார மண்டபத்தில் கோலாகலமாக இடம்பெற்றது.
ஒன்றிய தலைவர் என். நிராஜ் தலைமையில் இதன் உறுப்பினர்கள் மற்றும் கடந்த கால தலைவர்கள் ஆகியோரின் பங்கேற்புடன் இடம்பெற்ற விழாவில் பிரதம விருந்தினராக கிழக்கு பல்கலைக்கழக உப வேந்தர் பேராசிரியர் ரி. ஜெயசிங்கம், சிறப்பு விருந்தினர்களாக தென்கிழக்கு பல்கலைக்கழக முகாமைத்துவ மற்றும் வர்த்தக பீடாதிபதி கலாநிதி எஸ். குணபாலன், கிழக்கு பல்கலைக்கழக பேராசிரியர் எஸ். சுதர்சன், கிழக்கு பல்கலைக்கழக உதவி பதிவாளர் ஏ. பகிரதன் போன்றோர் கலந்து கொண்டனர்.
விழாவின் விசேட அம்சங்களாக ஒன்றிய மாணவர்களின் கலை நிகழ்வுகள், பல்கலைக்கழகங்களுக்கு புதிதாக தெரிவான மாணவர்கள் மற்றும் தரம் 05 புலமை பரிசில் பரீட்சையில் சித்தி அடைந்த் மாணவர்கள் ஆகியோருக்கான கௌரவிப்புகள், அதிதிகளுக்கான கௌரவிப்புகள், வெள்ளி விழா மலர் வெளியீடு, ஒன்றியத்தின் ரி சேர்ட் அறிமுகம் ஆகியன இடம்பெற்றன.

பேராசிரியர் சுதர்சன் இங்கு முக்கியமாக தெரிவித்தவை வருமாறு:-
பல்கலைக்கழகங்களுக்கு தெரிவாகின்ற தமிழ் மாணவர்களின் எண்ணிக்கை குறைந்து கொண்டே செல்கின்றது. எல்லோராலும் வைத்திய கலாநிதிகளாக, பொறியியலாளர்களாக வர முடியாது. ஆகவே வர்த்தக, கலை துறைகளுக்கு தெரிவாகின்ற தமிழ் மாணவர்களின் எண்ணிக்கையும் அதிகரிக்கப்பட வேண்டும். தமிழ் மாணவர்கள் அதிக அளவில் கூடுதல் சிறப்பு புள்ளிகள் மற்றும் அடைவுகளை பெறவும் ஊக்குவிக்கப்பட வேண்டும்.
அதே நேரத்தில் வெளிநாட்டு புலமை பரிசில்களுக்கு தமிழ் மாணவர்கள் பொதுவாக விண்ணப்பிப்பதில்லை. இவற்றுக்கு விண்ணப்பிக்குமாறும் இவர்களை ஊக்குவிக்க வேண்டி உள்ளது. வெகுவிரைவில் இந்திய புலமை பரிசிலுக்கு விண்ணப்பங்கள் கோரப்பட உள்ளன.
பல்கலைக்கழக உயர் கல்வி மூலமாக சமுதாயம் மாத்திரம் அன்றி இம்மாணவர்களின் தனிப்பட்ட வாழ்க்கைகளும் சிறப்பு பெறுகின்றன. இங்கு பல்கலைக்கழகங்களுக்கு தெரிவான மாணவர்கள் பரிசில்கள் வழங்கி கௌரவிக்கப்படுவது பெருமகிழ்ச்சி தருகின்றது, பல்கலைக்கழக மாணவர்கள் சமூக சேவை ஒன்றியம் - காரைதீவு கடந்த 25 வருடங்களாக கல்வி துறைக்கு ஆற்றி வருகின்ற சேவைகள் மகத்தானவை. இதுவும், இது போன்ற அமைப்புகளும் எமது மாணவர்கள் பல்கலைக்கழங்களுக்கு அதிக அளவில் தெரிவாவதை காத்திரமான வகைகளில் ஊக்குவிக்க வேண்டும்.

நான் இந்த இடத்தில் ஒரு பகிரங்க கோரிக்கையை விடுக்கின்றேன். தரம் 05 மாணவர்களை வாழ விடுங்கள். அவர்களை புலமை பரிசில் பரீட்சையின் பெயரால் கொன்று விடாதீர்கள். தரம் 05 புலமை பரிசில் பரீட்சை பெற்றோர்களின் கௌரவத்தை நிலை நாட்டுகின்ற போட்டியாக மாறி உள்ளது.

பிரதம விருந்தினரின் உரை
பிரதம விருந்தினர் பேராசிரியர் ரி. ஜெயசிங்கம் பேசியபோது பிள்ளைகளுக்கு நாம் வழங்குகின்ற கல்வி அறிவுக்கு இணையாக எதுவும் இருக்க முடியாது, பல்கலைக்கழகங்களுக்கு செல்கின்ற எமது மாணவர்களின் எண்ணிக்கை குறைந்து செல்வதாக இங்கு கவலை தெரிவிக்கப்பட்டது, கஷ்டத்தை கருத்தில் கொள்ளாது கற்றலையும், கற்பித்தலையும் நாம் தொடர்ந்து முன்னெடுத்து செல்ல வேண்டும், இங்கு பரிசில்கள் பெற்ற மாணவர்களும் சரி, அடுத்து வருகின்ற மாணவர்களும் சரி அவர்கள் முன்னேறுவதற்கான வழி வகைகளை தேடி கொள்ள வேண்டும், யுத்த காலத்தில் 1993 ஆம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்ட இந்த ஒன்றியம் 25 வருடங்களை நிறைவு செய்துள்ளது என்பது இலகுவான காரியம் அல்ல, ஏனென்றால் சில மன்றங்களும், சங்கங்களும் ஆரம்பிக்கப்பட்டு ஓரிரு வருடங்களிலேயே நின்று போய் இருக்கின்றன, பல்கலைக்கழக மாணவர்களுடன் சம்பந்தப்பட்டு, சுவாமி விபுலானந்தர் பிறந்த மண்ணில் மகத்தான கல்வி பணிகளை ஆற்றி வருகின்ற இந்த ஒன்றியம் மென்மேலும் முன்னேறி சென்று பொன் விழா, நூற்றாண்டு விழா காண வேண்டும் என்று வாழ்த்துகின்றேன் என்றார்.








எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -