தேசிய காங்கிரஸின் தலைவர் - ஐக்கிய தேசியக்கட்சியின் தலைவருக்கு எழுதியுள்ள கடிதம்!!!


கௌரவ ரணில் விக்ரமசிங்க அவர்கள், பா.உ
(முன்னைநாள் பிரதம அமைச்சர்)
தலைவர் - ஐக்கிய தேசியக்கட்சி
ஸ்ரீகொத்த, பிட்டகோட்டே.

அன்புள்ள ரணில் விக்ரமசிங்க அவர்களுக்கு,
ஐக்கிய தேசியக் கட்சியும் சேர்ந்து சில கட்சிகளும் – உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனுக்களை - மீளப்பெற வேண்டும்.
தாய் நாட்டின் இன்றைய அசாதாரண சூழ்நிலையை சீர்செய்வோம்'
முன்னாள் ஜனாதிபதி, ஜேஆர் ஜயவர்த்தன அவர்களினால் கொண்டுவரப்பட்ட நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி முறைமையும் அதற்கேற்றவாறு உருவாக்கப்பட்ட அரசியல் அமைப்பு சாசனமும்; ஜனாதிபதிக்கே கூடுலான அதிகாரங்களைக் கொடுத்திருந்தன. மக்களே ஜனாதிபதியை நேரடியாகத் தெரிவு செய்வதனால், அவ்வதிகாரங்களும் அதற்கேற்றாற்போல் நியாயமாகவும் அமைந்திருந்தன.

இதன் மூலம், திரு. ஜேஆர் ஜயவர்த்தன முதல் ஐக்கிய தேசியக் கட்சியில் திரு. ஆர். பிரேமதாச வரை இந்நிறைவேற்று அதிகாரங்களை பிரயோகிப்பதில் எவ்வித இடர்பாடுகளும் இருந்திருக்கவில்லை. மேலும் திரு. டீ.பி. விஜயதுங்க அவர்களும் சில காலம் ஜனாதிபதியாக இருந்தார்.

இதன் தொடராக – ஜனாதிபதிப் பதவி தங்களுக்கும் கிட்டுமென்று நீங்கள் எதிர்பார்த்திருக்கையில், அப்பதவி, மாறாக - ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் பக்கமே தொடர்ச்சியாகச் சாய்ந்து - முன்னைநாள் ஜனாதிபதிகளான திருமதி. சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்க அவர்களினதும் திரு. மஹிந்த ராஜபக்ஷ அவர்களினதும் கைளுக்கு மாறியது, உங்களுக்கு பொறுக்கமுடியாத ஒரு வேதனையாக இருந்திருக்கலாம்.
மேலும், 'தான் ஒருநாளும் ஜனாதிபதியாக வர முடியாது' என்று நீங்கள் நினைத்தமையினால், நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதியின் அதிகாரங்களைக் குறைத்து பாராளுமன்றத்தினூடாக பிரதம அமைச்சரின் அதிகாரங்களைக் கூட்டுவதற்கு முயற்சிகளில் இறங்கியதான கதைகளை வரலாறு மீட்டிக் கொண்டிருக்கிறது. அன்றியும், இல்லையேல் - ஆகக்குறைந்தது – 'இரண்டு அதிகாரங்களுக்குமிடையில் வேறு பொறிமுறைகளை' உருவாக்கும் முயற்சிகளும் தொடராக எடுக்கப்பட்டிருந்தன. இதன் அடிப்படையில், பாராளுமன்றத்தில் திருத்தங்கள் கொண்டுவரப்பட்டபோதெல்லாம் அது – அன்றைய நமது அரசியல் அமைப்பு சாசனத்தை சிதைப்பது போன்றவாறு அமைந்திருந்தது. நல்லவேளை இவை ஒன்றிலும் அன்று வெற்றிகள் கிட்டியிருக்கவில்லை. அவ்வெத்தணங்கள் - ஒவ்வொன்றின் - பின்னாலும் மேற்கத்தைய நாடுகள் தொடர்ச்சியாக இருந்து வந்தமை, அவர்கள் - நமது தாய் நாட்டுக்குள் நினைத்தவாறு புகுந்து மேய்வதற்காக இருக்கலாம்.
எது எவ்வாறு இருப்பினும் - 'ஒரு கட்சியின் தலைமை என்ற வகையிலும் எனது அரசியல் அனுபவத்தின் அடிப்படையிலும் அல்லது இந்நாட்டை நேசிக்கின்ற பிரஜைகளில் ஒருவன் என்ற வகையிலாவது' - நம் நாட்டில் பல்லின மக்களும் ஒன்று சேர்ந்து வாழ்வதற்காக முறையான யாப்பொன்று உருவாக்கப்பட வேண்டுமென சிந்திக்கின்றவர்களில் நானும் ஒருவராக இருந்திருக்கிறேன். அது - எக்காலத்திலும் - குறிப்பாக - இக்காலத்தில், நமது மக்களின் அடிமனங்களில்; இருந்து வருகின்ற சந்தேகங்களை கழைந்தவாறு அமைவதற்கு – அவர்களின் இயற்கையான உணர்வுகளைப் புரிந்து கொண்ட – 'நம் மக்களாலேயே அச்சாசனம் உருவாக்கப்பட வேண்டுமென்று திடமாகவும் எண்ணியிருந்தேன்'. அத்தோடு - அது – எந்தவகையிலும் 'அந்நிய நாட்டவர்களின் நப்பாசைகளின் அடிப்படையில் அமைந்துவிடக் கூடாது' என்பதுவும் எனது நிலைப்பாடாகவிருந்தது. இவ்வாறான அடிப்படையில் - நமது மக்களின் மனங்களை வென்றவாறு தயாரிக்கப்படுகின்ற, 'அவ்வரசியல் சாசனம்' - வெள்ளோட்டத்திற்கு விடப்படமுன் -இப்பொழுதிருக்கின்ற நிறைவேற்று அதிகார ஜனாதிபதி முறையைக் கொண்டியங்கும் - நமது அரசியல் சாசனம் - சிதைக்கப்படாமல் - பாதுகாக்கப்படவேண்டுமென கருத்தும் கொண்டிருந்தேன்.
ஏனெனில், நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி முறையினை அடிப்படையாகக் கொண்டியங்கும் நமது அரசியல் அமைப்பானது - கண்டநிண்டவாறு கையடிக்கப்படுகின்றபோது – சிலவேளை - அதன் முக்கிய உறுப்புரிமைகளுக்கிடையிலுள்ள தொடர்புகள் அறுந்து விடலாம் அல்லது திரிந்தும் போகலாம். இதனால் - நமது நாட்டின் நிறைவேற்றதிகாரத்திற்கும் சட்டவாக்கத்திற்குமிடையில் ஒவ்வாமையேற்பட்டு -'தடியெடுத்தவரெல்லாம் சண்டியர்களாகி' - இன்றைய நாட்களைப்போல் - நம் நாடு என்றுமில்லாதவாறு வரலாற்றுத் துயரொன்றினை அனுபவித்துவிடக்;கூடாது என்பதற்காகவே. ஆனால் - அதனை அப்படியே செய்வதுபோல் - நமது அரசியலமைப்பு சாசனத்தில்; அன்று திருத்தங்கள் கொண்டுவரப்பட்ட பொழுதெல்லாம் - மேற்சொன்னவாறு நாட்டுப்பற்றாளர்களோடு சேர்ந்து நானும் அவதானமாக இருக்க வேண்டியேற்பட்டது.
இருப்பினும், மேதகு ஜனாதிபதி மைத்திரிபால ஸ்ரீசேன அவர்களின் ஆதரவின் ஊடாக சுமார் 44 ஆசனங்களை மாத்திரமே கையில் வைத்திருந்த நீங்கள், தந்திரோபாயமாக பிரதமர் பதவியை கைப்பற்றிக் கொண்டீர்கள். அந்நிலையில் உங்களை நாங்களும் வாழ்த்தியிருந்தோம். இருப்பினும், மூன்றில் ஒரு பங்கிற்கும் குறைவான பாராளுமன்ற உறுப்பினர்களை மாத்திரமே தன்வசம் வைத்துக் கொண்டிருந்த நிலையில் - தாங்கள் - பிரதமர் பதவியை வகித்ததானது - தங்களதும் தங்களைச் சார்ந்த குழுக்களினதும் தேவைகளில் சிலவற்றைப் பூர்த்தி செய்வதற்கு அது முடியுமாக இருந்திருந்தாலும், இந்நடைமுறையானது - நினையாப்புரத்தே - 'குறைந்த எண்ணிக்கையினரை வைத்திருப்பவரும் பிரதமராகலாம் என்கின்ற சம்பிரதாயத்தை - இன்று - நம் பாராளுமன்றத்துள் தோற்றுவித்திருக்கிறது' - இத்தருணத்தில் இதனைக் குறிப்பிடுவது - சாலப் பொருத்தமென நினைக்கிறேன்.
மேற்சொன்னவாறு, நீங்கள் பிரதமராக பதவியேற்றதைத் தொடர்ந்து, மேதகு ஜனாதிபதி அவர்களுடைய அனுசரணையோடு, ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் (ருPகுயு) அன்றைய, பாராளுமன்ற உறுப்பினர்களுடைய ஆதரவினையும் பெற்று - அரசியல் சாசனத்தில் 19ஆவது திருத்தச் சட்டத்தினை பாராளுமன்றத்தில் சமர்ப்பித்திருந்தீர்;கள். எதிர்காலத்தில் - தங்களின் - ஜனாதிபதிப் பதவிக்கு போட்டியாளர்களாக இருப்பார்களென நீங்கள் கருதிய - திரு மஹிந்த ராஜபக்ஷ, திரு. கோட்டாபே ராஜபக்ஷ போன்றோருக்கு - ஆப்பு வைப்பதுவே அதன் உள்நோக்கமாகவிருந்ததே தவிரவும் - ஜனாதிபதியினுடைய அதிகாரங்களைக் குறைத்து பாராளுமன்ற அதிகாரங்களைக் கூட்டுவதாக - நீங்கள் மக்களுக்குக் கொடுத்த வாக்குறுதியின் அடிப்படையிலல்ல. என, அன்று கருத்துக்கள் பரிமாறப்பட்டிருந்தன.
அதனடிப்படையில், உங்களுக்கு - அன்று கிடைத்த அச்சந்தர்ப்பமானது - நீண்ட காலமாக நீங்கள் அமரக் காத்துக் கொண்டிருந்த ஜனாதிபதிக் கதிரையை எட்டிப் பிடிப்பதற்கு, ஓர் 'ஏணி கிடைத்த சந்தர்ப்பம்' போன்றதென உங்களால் எண்ணத்தோன்றியிருக்கும். மேலும், – தங்களுக்குக் கிடைத்த அரியதோர் வாய்ப்பாகவும்; நீ;ங்கள் கருதியிருந்திருப்பீர்கள். அதனால்தான், மக்களுக்குக் கொடுத்த வாக்குறுதிகளை விடவும், ஜனாதிபதிப் பதவியினுடைய அதிகாரங்கள் குறைந்து விடக்கூடாது என்றவாறு, அரசியல் அமைப்பின் - 19ஆவது திருத்தத்தின் போது 'நீங்கள் நடித்த நாடகம்' பற்றியும் அன்றே பரவலாகப் பேசிக் கொள்ளப்பட்டது.
ஜனாதிபதி ஒருவருக்கு – 'பாராளுமன்றத்தைக் கூட்டுதல், கூட்டத்தொடரை இடை நிறுத்துதல், கலைத்தல்' தொடர்பான அதிகாரம், நமது அன்றைய அரசியல் யாப்பு 70(1)இல் விதந்துரைக்கப்பட்டிருந்ததோடு, அதன் (ய) உப பிரிவானது – பொதுத் தேர்தலொன்று நடந்து முடிந்து, ஒரு வருடத்தின் பின்னர், ஜனாதிபதியானவருக்கு பாராளுமன்றத்தைக் கலைக்கக்கூடிய தத்துவத்தை வழங்கியிருந்தது - நிறைவேற்றதிகாரம் கொண்ட ஜனாதிபதியொருவருக்கும் பாராளுமன்றத்திற்குமிடையில் - ஒவ்வாமை ஏற்படாமல் சமனிலை பேணும் நோக்கில் - இதுபோன்று உருவாக்கப்பட்டிருந்த - உப பிரிவுகள் - (ன) வரையும் இருந்தன.

இருந்தாலும், அந்த - 70(1) இல் மேற்சொல்லப்பட்ட (ய) தொடக்கம் (ன) வரையிலான மேற்சொன்ன உபபிரிவுகள் - அரசியலமைப்பின் 19 ஆவது திருத்தத்தின்போது இல்லாதொழிக்கப்பட்டு, பதிலாக - 'பாராளுமன்றம் தொடங்கியதிலிருந்து நான்கரை வருடத்துள் அதன் மூன்றில் இரண்டு பெரும்பாண்மை உறுப்பினர்களின் தீர்மானத்தின் மூலமே அன்றி, ஜனாதிபதியானவரால் பாராளுமன்றைக் கலைக்கமுடியாது' என்றும் அப்பிரிவு 70(1)இல் சேர்க்கப்பட்டது. இதனால், சரத்து 70(1)இன் நோக்கங்கள் திரிவுபடுத்தப்பட்டன.
இருப்பினும், அதே அரசியலமைப்பின் - பிரிவு 70(3)இற்கமைய பாராளுமன்றத்தை ஒத்திவைக்கும் நிலையில் - ஜனாதிபதியானவர் அதனைக் கலைப்பதற்கான அதிகாரம், அதன்-ஐஇஐஐ பிரிவுகளில், தெளிவாக வழங்கப்பட்டிருந்தன. 19 ஆவது திருத்தத்தின் போது - இப்பிரிவுகள் திருத்தப்படாமல் - அப்படியே இருக்கவிடப்பட்டதனால் - ஜனாதிபதியானவர் - பாராளுமன்றத்தைக் கலைப்பதற்கு - இந்த - 70(3) பிரிவும், அதன் உப பிரிவுகளும் மாத்திரமே போதுமானதென்பது, நீங்கள் அறியாததொன்றல்ல.

இந்நிலையில், ஜனாதிபதியின் அதிகாரங்களைக் குறைத்து - பாராளுமன்றத்தின் அதிகாரங்களைக் கூட்டுவதாக, - நீங்கள், மக்களுக்கு அளித்திருந்த வாக்குறுதியினை நிறைவேற்றுவது போல் காட்டுவதற்காகவே - 19ஆவது திருத்தத்தின் போது - சரத்து 70(1) இல், உங்களால் பொடி ஒன்று மாத்திரமே வைக்கப்பட்டது; ஏனெனில் இவ்வாறான அதிகாரங்கள் நீக்கப்படுவதற்கு சர்வஜன வாக்கெடுப்பொன்றிற்கு செல்ல வேண்டிவரும் என்பதனால்.
இது இவ்வாறிருக்க, 19ஆவது திருத்தச் சட்டத்திற்கு முன்னரும், அரசியல் அமைப்பின் 33ஆவது சரத்தானது பின்வருமாறு அமைந்திருந்தது. அதாவது - 'அரசியல் அமைப்பினாலும் அரசியல் அமைப்பு ஆரம்பிப்பதற்கு முன்னரோ பின்னரோ, எழுத்தினாலான சட்டங்களினாலும் அல்லது வெளிப்படையாக தமக்கு அளிக்கப்பட்ட அல்லது குறித்தொதுக்கப்பட்ட தத்துவங்களுக்கும் கடமைகளுக்கும் பணிகளுக்கும்; - மேலதிகமாக ஜனாதிபதியானவருக்கு வழங்கப்பட்ட தத்துவங்கள்'
இவ்வாறான விஷேட தத்துவங்களைக் கொண்டிருந்த, அச்சரத்து 33இன் கீழ், ஜனாதிபதியொருவருக்கு பாராளுமன்றத்தைக்; கலைக்கக்கூடியவாறான - உப பிரிவொன்று - அன்றைய அரசியல் அமைப்புச் சாசனத்தில் இருந்திருக்கவில்லை. இருந்தாலும், 19ஆவது திருத்தத்தின் போது, மேற்சொன்ன – சரத்து 33 இன் - இவ்விஷேட தத்துவங்களானவை சரத்து - 33(2) இற்குள் உள்வாங்கப்பட்டு திருத்தியமைக்கப்பட்டது. மேலும் - அவ்வாறு உருவாக்கப்பட்ட அப்புதிய சரத்து 33(2) இன் கீழ் வருகின்ற, உபபிரிவு (உ) ஆனது, ஜனாதிபதியானவருக்கு – 'பாராளுமன்றத்தைக் கூட்டுதல், கூட்டத்தொடரை இடை நிறுத்துதல், அதனைக் கலைத்தல்' எனும் அதிகாரங்களை மிகத் தெளிவாகவும் திட்டவட்டமாகவும் வழங்கியிருக்கிறது. நான் மேற்சொன்னவாறு சர்வஜன வாக்கெடுப்பின்றி 70(1) இன் பிரிவு திருத்தப்பட்டதால் இந்த 33(உ) பிரிவு கட்டாயம் உருவாக வேண்டியதாயிற்று.

மேலும், இவ்வரமானது, நீங்கள் அன்று பிரதமராய் இருந்திருக்கையில், உங்களது 100 நாள் வேலைத்திட்டத்தின்போது, பாராளுமன்றத்தில் கொண்டுவரப்பட்ட 19 ஆவது திருத்தத்தச் சட்டத்தினூடாகவே வழங்கப்பட்டது என்பதனையும், அதற்கு ஆதரவாக நீங்களும்;, உங்களுடைய பாராளுமன்ற உறுப்பினர்களும் குறிப்பாக, ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் சுமார் 150 பாராளுமன்ற உறுப்பினர்களுமாக ஒன்று சேர்ந்து, 223 அங்கத்தினர்கள் சம்மதித்து வாக்களித்து, அன்றைய கௌரவ சபாநாயகர் அவர்கள் கையெழுத்திட்ட பின்னரே, நிறைவேறிய ஒரு சட்டமாகும். இதற்கிணங்க, ஜனாதிபதி ஒருவர், அவசியமெனக் கருதும் வேளையில் பாராளுமன்றத்தைக் கலைக்கக் கூடியவாறாக, அவ்வதிகாரம் வழங்கப்பட்டு, வலுவும் சேர்க்கப்பட்டிருக்கிறது. இதனை நீங்கள்; நிராகரிக்க முடியாது.

நான் ஏலவே சொன்னதைப் போன்று - மேதகு ஜனாதிபதி மைத்திரிபால ஸ்ரீசேன அவர்களோடு கூட்டுச் சேர்ந்து கிடைத்த அச்சந்தர்ப்பத்தின் மூலம் – 'தாங்கள் - அடுத்த ஜனாதிபதியாக வருவது உறுதியென – தீர்மானித்திருந்திருப்பீர்கள்' – அதனால்தான் - 19ஆவது திருத்தத்தின்போது இவ்வதிகாரம் உள்வாங்கப்பட்டவேளை, நீங்கள் மக்களுக்குக் கொடுத்த வாக்குறுதிகளுக்கு மாறாக, அச்சட்டத்திற்கு நீங்களும் வாக்களித்து, உங்களுடைய பாராளுமன்ற உறுப்பினர்களும் வாக்களிக்கப்பட்டனர் என்பது தெளிவாகின்றது.
பாராளுமன்றம் தொடர்பாக, ஜனாதிபதிக்கு குறித்தொதுக்கப்பட்டிருந்த அவ்வதிகாரங்கள், குறைவில்லாமலும், முன்னரை விடவும் வலுவாகவும் இருந்தமையை உறுதிப்படுத்தியதன் பின்னரே, ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் பலரோடு நானும் அத்திருத்தத்திற்கு ஆதரவாக வாக்களித்திருந்தவேளை, உங்களது முகம், என்றுமில்லாதவாறு மகிழ்ந்து மலர்ந்து கிடந்ததானது, அதனை, மேலும் உறுதி செய்திருக்கிறது.

ஆயினும், இன்றைய பாராளுமன்றம், 4½ வருடத்திற்குள்ளேயே இவ்வாறான பிரச்சினைகளுக்கு முகங்கொடுக்க வேண்டிவரும் என்றோ, அல்லது - 19ஆவது திருத்தச் சட்டம் இவ்வாறு, மிகவிரைவில் கேள்விக்குறியாக்கப்படும் என்றோ, நீங்கள் கனவில் கூட நினைத்திருக்கமாட்டீர்கள். மாறாக - ஒருவேளை உங்களது ஜனாதிபதிக் கனவு நிதர்சனமாகி - அவ்வதிகாரங்களை, நீங்கள் பிரயோகிக்க முனைகின்ற பொழுது, அவ்வதிகாரங்கள் தொடர்பாக, - இங்கு குறிப்பிடப்பட்டுள்ளவைகளை விடவும், மேலும் பல விளக்கங்களையும் விதந்துரைகளையும் வழங்குவதற்கு எண்ணியிருந்திருப்பீர்கள். எது எப்படியிருந்த பொழுதிலும் - அரசியலமைப்பின் 19ஆவது திருத்தச் சட்டம்;, உங்களது உள்ளரங்கமான ஜனாதிபதிக் கனவினை வெளிப்படுத்தியிருக்கிறது.

இது இவ்வாறிருக்க, நான் ஏலவே சொன்னதைப் போன்று - ஜனாதிபதியானவருக்கு பொதுத்தேர்தலொன்று முடிந்து - ஒரு வருடத்தின் பின்னர் - பாராளுமன்றத்தைக் கலைக்கக்கூடியவாறாய் அமைந்திருந்த சரத்து 70(1) இன், (ய) உப பிரிவானது - 19ஆவது திருத்தத்தின்போது இல்லாதொழிக்கப்பட்டிருந்தாலும், அத்திருத்தச் சட்டத்தின் பின்னரும், நான் மேற்சொன்னவைகளைப் போன்று, ஜனாதிபதியானவருக்கு சரத்து 70(3) இலும் சரத்து 33.2(உ) இலும் வழங்கப்பட்டிருக்கின்ற தத்துவங்களுக்கமைவாக, பாராளுமன்றத்தைக் கலைக்கின்ற அதிகாரம், மேலும் உறுதி செய்யப்பட்டு வலுவும் சேர்க்கப்பட்டுள்ளது.
ஜனாதிபதி ஒருவருக்கு, இவ்வதிகாரங்கள் கிடைப்பதற்கு பிரதான கர்த்தாவாகவிருந்த, உங்களுடைய கட்சியினரே - இக்காலம் - நிறைவேற்று அதிகார ஜனாதிபதியின், அவ்வதிகாரங்களுக்கெதிராக நீதிமன்றம் சென்றுள்ளனர். உங்களைப் போன்றே - அன்று இத்திருத்தச் சட்டத்திற்கு ஆதரவாக, பாராளுமன்றத்தில் முண்டியடித்து வாக்களித்த இன்னும் சில அரசியற் கட்சிகளும், கூடவே சேர்ந்திருப்பது வேடிக்கை தருகிறது. மேலும் - அவர்களின் உள்நோக்கங்களை மறைத்து வேறுபக்கம் திசைதிருப்புவதற்கு - 'அடிப்படை மனித உரிமைச் சட்டப் பிரிவுகள்' மூலதனமாக்கப்பட்டிருப்பது, ஆச்சரியத்தையும் தருகின்றது. மக்கள் இறைமையின், அடிப்படையாம் வாக்குரிமையை - அம்மக்களிடமே மீளக் கொடுப்பது - எந்தவகையில் அவர்களுடைய உரிமையினை மீறிநிற்கும்?

மேலும், தனது கட்சிக்காரர்களாலும் இடைக்கிடை குண்டர்களாலும் - நீதிமன்ற வளாகம் நிறைக்கப்பட்டு - நமது கௌரவ நீதித்துறைக்கு, அசௌகரியங்கள் தோற்றுவிக்கப்பட்டது. அத்தோடு - உலகமே பார்க்கக்கூடியவாறு - 'நமது பாராளுமன்றம் வேடிக்கைக் களமாகவும் கொலைக்களமாகவும் காட்சிப்படுத்தப்பட்டது'. இதற்கு – தனது கட்சியின் முக்கியஸ்தரான, இன்றைய சபாநாயகர் கரு ஜெயசூரிய அவர்களை, நீங்கள் ஊதுகுழலாகவும் உபயோகித்துக் கொண்டீர்களென மக்களால் பரவலாக பேசப்படுகின்றது.
உங்களுடைய தொடர்ச்சியான இச் செயற்பாடுகளினால்தான் - இன்று - நம் தாய் நாடு - அரசியல், பொருளாதார ஸ்திரத்தன்மையை இழந்து, சீர்குலைந்து போயிருக்கிறது என்பதுவும் இன்று மக்கள் மனங்களில் பரவலாக விதைந்து போய் விட்டது.
இந்நிலையில் - தங்களது கட்சியினாலும் - உங்களோடு ஒத்துப்போன சில கட்சிகளாலும் - கௌரவ மீயுயர் நீதிமன்றத்தில், தாக்கல் செய்யப்பட்டிருக்கின்ற மனுக்களை - நமது தாய் நாட்டின் நலனுக்காக - மீளப்பெற்றுக் கொள்ளுமாறு, சம்பந்தப்பட்டவர்களிடம் தயவாய் வேண்டிக் கொள்கிறேன். இல்லையேல் - நம் தாய் நாட்டின் இன்றைய அசாதாரண சூழ்நிலைக்கு – திரு. ரணில் விக்ரமசிங்க அவர்களும் சபாநாயகர் திரு. கரு ஜெயசூரிய அவர்களுமே சூத்திரதாரிகளென – 'வரலாறு எழுதிச் சென்றுவிடும்'. 
மேலும் - 19ஆவது திருத்தச் சட்டம் அன்று பாராளுமன்றத்தில் கொண்டுவரப்பட்டபோது - அத்திருத்திற்கு ஆதரவாக வாக்களித்த 223 பாராளுமன்ற உறுப்பினர்களினதும் - அவர்களைச் சார்ந்திருந்த ஒட்டுமொத்த மக்களினதும் அடிப்படை உரிமைகள் மீறப்பட்டமைக்கு – 'மனுதாரர்களாகிய தாங்கள் காரணமாக இருந்திருக்கவில்லை' - என்பது பற்றி நாட்டு மக்களுக்கு ஒப்புவிக்கவேண்டிவரும். இது தொடர்பில், அந்த 7 ஆவது பாராளுமன்றத்தின் உறுப்பினர் நாங்கள்; பலர் சேர்ந்து கலந்துரையாடி வருகிறோம் - உங்களின் விரைவான கவனத்திற்காக இவைகளை ஒப்புவிக்கின்றேன்.

ஏ.எல்.எம். அதாஉல்லா
தலைவர் - தேசிய காங்கிரஸ்
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -