மக்களை ஏமாற்றி, கொலை செய்து தியாகி பட்டம் எடுப்பதைவிட மக்களுக்காகப் பணியாற்றி துரோகி பட்டம் சூடிக்கொள்வதை மேலானதாக நினைப்பதாக கிழக்கு மாகாண அபிவிருத்தி பிரதியமைச்சரும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான சதாசிவம் வியாழேந்திரன் 24.11.2018 தெரிவித்துள்ளார்.
கடந்த மூன்று வருடகாலம் எதிர்க்கட்சியிலிருந்துகொண்டு ஆளும் ஐக்கியதேசியக் கட்சிக்கு ஆதரவளித்தனால் தமிழ் மக்களுக்காக எதனையும் பெற்றுக்கொள்ளாது ஏமாற்றப்பட்டதாகவும் அவர் கூறினார்.
மட்டக்களப்பு- இலுப்படிச்சேனை பிரதேசத்தில் புதிதாக விளையாட்டு மைதானம் அமைப்பதற்கான பணிகளின் அங்குரார்ப்பண நிகழ்வில் பிரதம அதிதியாகக் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே அவர் இதனைக் கூறினார்.
இத்திட்டத்திற்கென முதற்கட்டமாக நாற்பது இலட்சம் ரூபா நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
இலுப்படிச்சேனைப் பிரதேசத்தில் பல பொது இடங்கள் இருந்தபோதிலும் விளையாட்டு மைதானம் இல்லாதிருந்த பாரிய குறை தற்போது நிவர்த்திக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
இங்கு பிரதியமைச்சர் மேலும் பேசுகையில்-- மஹிந்த ராஜபக்ஷ அரசாங்கத்திலே புனர்வாழ்வு என்ற அடிப்படையில் 11 ஆயிரத்து 900 முன்னாள் போராளிகள் விடுதலை செய்யப்பட்டார்கள். ஆனால் ஐக்கிய தேசியக் கட்சி அரசாங்கத்திலே 217 அரசியல் கைதிகளில் நூறு மாத்த்pரமே விடுதலை செய்யப்பட்டனர். எஞ்சிய 117 பேரையும் விடுதலை செய்வதற்காக எத்தனை ஆர்ப்பாட்டம் உண்ணாவிரதம் நடாத்தினோம். எதனையும் சாதிக்க முடியவில்லை.
மஹிந்த ராஜபக்ஷ அரசு காலத்தில் 2015 மார்ச் 31 ஆந்திகதியன்று 52 ஆயிரம் பட்டதாரிகளுக்கு வேலைவாய்ப்பு வழங்கப்பட்டது. ஆனால் நாங்கள் ஆதரவு வழங்கிய ஐக்கிய தேசியக் கட்சியின் ஆட்சியில் மூன்றரை வருடகாலத்pல் முந்நூறு பட்டதாரிகளுக்;குக்கூட வேலை வாய்ப்பினைப் பெற்றுக்கொடுக்க முடியவி;ல்லை.
2015 ,16 மற்றும் 17 ஆம் ஆண்டுகளில் வரவு செலவுத்திட்டத்திற்கு எதிர்க்கட்சியிலிருந்துகொண்டே தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு ஆதரவு வழங்கியபோதெல்லாம் எதிர்க்கட்சியிலிருந்துகொண்டு ஆளுங்கட்சியின் வரவு செலவுத்திட்டத்திற்கு ஆதரவு வழங்குவதற்கு எவ்வளவு பணம் பெற்றுக்கொண்டீர்கள் என மக்கள் கேள்வி எழுப்பினார்கள்.
அவ்வாறிருக்கையில் அனைத்திற்கும் மகுடம் வைத்ததுபோல ரணில் விக்ரம சிங்கவைப்பாதுகாப்பதற்காகவும் கைகளை உயர்த்தினோம் ஆனால் எமது மக்களுக்கு எந்தப் பலனும் கிடைக்கவில்லை.
தற்போது யார் ஆட்சியமைப்பது என்ற பலப்பரீட்சை நடைபெற்றுக்கொண்டிருக்கும் சந்தர்ப்பத்தைப் பயன்படுத்தி சிறுபான்மைக்கட்சிகள் தமது சமூகத்தைப் பாதுகாக்கும் நடவடிக்கையில் ஈடுபடவேண்டும்.
எதுஎவ்வாறிருப்பினும் மட்டக்களப்பிலே எதிர்காலத்தில் உரிமையும் நாங்கள்தான் அபிவிருத்தியும் நாங்கள் தான் என்பதை அனைவரும் நினைவிற்கொள்ளவேண்டும்.
அபிவிருத்தியும் உரிமையும் ரயில் தண்டவாளங்கள்போல சமாந்தரமாக இருக்கவேண்டும்
அந்தவகையில் எதிர்வரும் காலத்தில் தேர்தலின்போது தமிழ் சமூகத்தில் பிரதிநிதியொருவரைத் தெரிவு செய்வதென்றால் உரிமைகளைப்பெறுவதற்காக களமிறங்கிப்போராடுபவர்கள் அதேபோன்று அதேவேகத்தில் அபிவிருத்திக்காகவும் போராடக்கூடிய தகுதிகளைக்கொண்டவர்களையே ஏற்றுக்கொள்ளவேண்டும். முஸ்லிம் சமூகம் கடந்தகாலங்களில் அபிவிருத்திக்காகப்போராடி எந்த உரிமையை இழந்திருக்கிறார்கள் என்ற கேள்வி உள்ளது. ஆனால் தமிழ் சமூகம் உரிமைக்காகப் போராடி உரிமையையும் பெறவில்லை. அபிவிருத்தியையும் அடையவில்லை.
தற்போது அரசாங்கம் ஒரு தளம்பல் நிலையில் உள்ள சந்தர்ப்பத்தில் பிரதானமான 17 அம்சக் கோரிக்கைகளை ஜனாதிபதியிடம் முன்வைத்துள்ளேன். இறைவனின் அருளால் எஞ்சியுள்ள ஒருவருடமும் பத்து மாதங்களுக்கும் கிழக்கு அபிவிருத்தி என்ற எனது அமைச்சு தொடருமென்றால் தமிழ் சமூகம் அரசியலில் கடந்த முப்பது வருடங்கள் மனதில் சுமந்திருக்கும் அபிலாசைகளை பூர்த்திசெய்துகாட்டுவேன் என்று சவாலுடன் கூறினார்.