மட்டக்களப்பு மாவட்டத்தில் உள்ள ஆரையம்பதி எனும் பிரதேசத்தில் புதன்கிழமை (19 ) இரவு ஆரையம்பதி இரண்டாம் வட்டாரத்தில் அமைந்துள்ள இந்து ஆலயம் ஒன்றில் உள்ள விக்கிரகங்கள் உடைக்கப்பட்ட சம்பவம் பதிவாகியது.
இச்சம்பவம் தொடர்பில் குற்றவாளிகளை போலிசார் கண்டுபிடிப்பதற்கு முன்னரே சில இனவாத இணையதளங்களும் ,பத்திரிக்கைகளும் ஒரு இனத்தின் மீது தனது காழ்ப்புணர்வை காட்டி செய்திகளை வெளியிட்டு இருப்பது நாட்டின் ஊடகத்துறையின் நிலையை கேள்விக்குறியாக்கியுள்ளது..
அந்த வகையில் தொடர்ச்சியாக இன வாத வாந்தி எடுத்து கிழக்கில் ஒற்றுமையாக வாழும் தமிழ் முஸ்லிம் மக்களுக்கு இடையில் முறுகல் நிலையை ஏற்படுத்த முற்படும் IBC தமிழ் எனும் இணையதளம் மற்றும் தலைநகரில் இருந்து வெளிவரும் "தமிழ்த்தந்தி" எனும் வாரப்பத்திரிக்கை ஆகிய ஊடகங்கள் இச் சம்பவம் தொடர்பில் காத்தான்குடி முஸ்லிம்கள் மீது குற்றம் சாட்டி செய்தி வெளியிட்டுள்ளனர்.
கடந்த ஞாயிற்றுக்கிழமை (23) திகதி வெளிவந்த "தமிழ்த்தந்தி" பத்திரிகையில் 7 ம் பக்கத்தில் இச் சம்பவம் தொடர்பில் இரா.துரைரத்தினம் (சுவிட்சர்லாந்து) எனும் கட்டுரையாளர் கற்பனை கட்டுரை எழுதியுள்ளார். இவரது கட்டுரையில் ஆரையம்பதியில் உள்ள இந்து ஆலயங்களில் உள்ள விக்கிரகங்கள் முஸ்லிம்களால் உடைக்கப்பட்டுள்ளதாக கண்ணால் கண்டது போல எழுதியுள்ளார். தொடர்ச்சியாக அவரது கட்டுரையில் முஸ்லிம்கள் அதிகமாக வாழும் காத்தான்குடி பிரதேசத்திற்கு அருகாமையில் இவ் ஆலயம் அமைந்து இருப்பதால் இவ் ஆலயத்தை அங்கிருந்து அகற்றுவதற்கு காத்தான்குடி முஸ்லிம்கள் தொடர்ச்சியாக தொல்லை கொடுப்பதாகவும் கற்பனை கதை ஒன்றை வடிவமைத்துள்ளார்.
இவரின் சொந்த கற்பனையில் கட்டுரை எழுதிவிட்டு இவ்வாறு முஸ்லிம்கள் மீது ஆரையம்பதி மக்கள் குற்றம் சுமத்துவது போல ஆதாரமற்ற சிறு பிள்ளை தனமாக கட்டுரையை எழுதி முடித்துள்ளார்..
மேற்படி ஆலயத்தின் விக்கிரகங்கள் சேதப்படுத்திய சம்பவம் தொடர்பில் உண்மை நிலை தொடர்பில் ஆராய்ந்த போது.
ஆலயத்தின் விக்கிரகங்கள் சேதப்படுத்தப்பட்ட சம்பவம் உண்மைதான் இருந்தாலும் இவ் இரு ஊடகங்களும் சுட்டிக்காட்டுவது போல காத்தான்குடி முஸ்லிம்கள்தான் செய்தார்களா? என சேதப்படுத்தப்பட்ட ஆலயத்தின் செயலாளர் புஷ்பநாதன் அவர்களிடம் கேட்ட போது இவ்வாறான எந்த குற்றச்சாட்டும் நாங்கள் கூறவில்லை, இந்த செயலை யார் செய்தார்கள் என்று உறுதியாக கூறமுடியாது. இவ்வாறு முஸ்லிம் மக்கள் மீது குற்றம் சுமத்துவது தனிநபர்களின் செயலாகும் என குறிப்பிட்டார்.
இது தொடர்பில் ஆலயத்தின் தலைவர் திரு.செந்தில் ராஜ் அவர்களிடம் கேட்ட போது.
ஆரையம்பதி காத்தான்குடி முஸ்லிம் தமிழ் மக்கள் ஒற்றுமையாக வாழும் சூழலில் இவ் இரு சமூகங்களுக்கும் இடையில் இனப் பிரச்சினைகளை உருவாக்கும் நோக்கத்தில் ஒரு சிலர் இந்த பிரச்சினையை காரணமாக வைத்து காத்தான்குடி முஸ்லிம்கள் மீது குற்றம் சுமத்தி சமூக வலைதளங்களில் பதிவிடுகிறார்கள் மாறாக நாங்களோ எங்கள் ஆலய நிர்வாகமோ முஸ்லிம்கள் மீது குற்றம் சாட்டவில்லை குற்றவாளி யார் என்பதை பொலிசார்தான் கண்டுபிடிக்க வேண்டும் அது அவர்களிம் பொறுப்பாகும் என உறுதியாக தெரிவித்தார்.
சம்பந்தப்பட்ட ஆலய நிர்வாகிகளே இவ்வாறு தெளிவாக கூறும் போது இவ் இரு இனவாத ஊடகங்களுக்கும் தகவல் வழங்கிய ஆரையம்பதி மக்கள் யார்? இக் கட்டுரையாளர் இரா.துரைரத்தினம் (சுவிட்சர்லாந்து) ஆரையம்பதியில் சம்பவ இடத்தில் இருந்து கள ஆய்வு செய்து கட்டுரை எழுதினாரா அல்லது சுவிட்சர்லாந்தில் இருந்து இனவாதம் கக்கினாரா?
தலைநகரில் இருந்து பத்திரிகை வெளியிட்ட "தமிழ்த்தந்தி" பத்திரிகை கட்டுரையின் உண்மை நிலை தொடர்பில் ஆராய்ந்ததா? இல்லை இன வாதம் கக்குவதை கடமையாக கொண்டுள்ளதா?
இவ்வாறான இனவாத தீயை உருவாக்கும் ஊடகங்கள் தொடர்பில் தமிழ் முஸ்லிம் மக்கள் அவதானமாக இருக்கவேண்டும்.