புனித நோன்புப் பெருநாள் பற்றிய சிறப்புக் கட்டுரை -எஸ்.எல்.எம்.ஹனிபா மதனி

-எம்.பைஷல் இஸ்மாயில்-
லகிலுள்ள ஏறக்குறைய நூற்றி ஐம்பது கோடிக்கும் அதிகமான முஸ்லிம்கள் இந்த நாட்களில்'ஈதுல் பித்ர்' எனும் நோன்புப் பெருநாளைக் கொண்டாடிக்கொண்ருக்கின்றனர்.

கடந்து சொன்ற ரமழான் மாதம் முழுவதும் பகலில் நோன்பு நோற்று இரவில் நின்று வணங்கிய முஸ்லிம்களே இப்பெருநாளை உரிமையுடனும் புழகாங்கித்ததுடனும் கொண்டாடி வருகின்றனர்.

'விசுவாசிகளே! நீங்கள் இறையச்சம் பெறும் பொருட்டு உங்களுக்கு முன் சென்றவர்கள் மீது விதியாக்கப்பட்டது போன்று உங்கள் மீதும் நோன்பு கடமைக்கப்பட்டிருக்கின்றது. (அல் குர்ஆன்) வருடத்தில் வருகின்ற 11 மாதங்களிலும், மனிதன் தனது தொழில், தனது வேலைகள், தனது வாழ்க்கை என லௌகீகத்தில் முற்றும் முழுதாக மூழ்கிக் கொண்டிருக்கும் போது ஆத்மீக உணர்வுகள் குன்றி லௌகீகம் மேலோங்குவது இயல்பே இவ்வேளை ரமழான் எனும் மாதத்தில் நோன்பை விதியாக்கி வணக்க வழிபாடுகளின் பால் ஈடுபட வைத்ததன் மூலம் மனிதன் ஆத்மீகத்தின் பால் ஈர்க்கப்பட்டு இறையச்சம் அதிகரிக்க அதிக வாய்ப்புக்கள் ஏற்படுகின்றன.

இதனை மேற்கூறப்பட்ட திருமறை வசனம் எமக்கு எடுத்து இயம்பிக் கொண்டிருக்கின்றது. மனித வாழ்வில் இறையச்சத்தை மேலோங்கச் செய்வதே நோன்பின் பிரதான நோக்காகக் கொள்ளப்படுகின்றது.

'பாவமான பேச்சுக்கள், செயற்பாடுகள் என்பற்றிலிருந்து ஒரு நோன்பளி விடுபடவில்லை என்றால் அவர் தனது உண்ணல், குடித்தல் என்பவற்றை விட்டும் தவிர்ந்து கொள்வதில் அல்லாஹ்வுக்கு எந்தத் தேவையும் கிடையாது' எனும் நபியவர்களின் ஹதீஸின் மூலம் பாவக்கறையிலிருந்து ஒருவர் விடுபடுவதே நோன்பின் பிரதானமான நோக்காகக் கொள்ளப்படுகின்றது என்பது புலனாகின்றது.

நோன்பு நோற்கின்றபோது பசியினதும், தாகத்தினதும் கொடுரங்களை உணர்ந்து கொள்ளும் சந்தர்ப்பங்களை இஸ்லாம் நோன்பாளிக்கு வழங்குகின்றபோதும் நோன்பின் பிரதான நோக்கம். மனித வாழ்வில் இறையச்சத்தின் விருத்தியை ஏற்படுத்துவதேயாகும். இதனை புனித குர்ஆனின் வசனங்களும் நபி மொழிகளும் தெளிவாக இயம்பிக் கொண்டிருக்கின்றன்.

ஓர் அடியான் தனது வணக்க வழிபாடுகளை அதிகரித்துக் கொள்ளும் போதும், பாவங்களிலிருந்து விடுபடும்போதும் அவனில் இறையச்சத்தின் அளவு அதிகரித்து விடுகின்றது.

 இந்த நிலை நோன்பு நோக்கும் போது அதிகமாக ஏற்படுவதை நாம் நடைமுறையில் கண்கூடாகக் கண்டு கொள்கின்றோம்.

இதனை விளக்கக் கூடியதாக பின்வரும் நபி வாக்கியம் அமைகின்றது. 'எவர் ஒருவர் ரமழானில் பகல் வேளைகளில் நோன்பு நோற்று இராக் காலங்களில் நின்று வணங்குகின்றாரோ அவர் முன் செய்த பாவங்கள் மன்னிக்கப்படுகின்றன'

புனித ரமழான் மாதத்தின் ஓர் இரவில்தான் இறுதி வேதமாகக் கொள்ளப்படுகின்ற புனித குர்ஆன் இவ்வுலகக்கு இறக்கி வைக்கப்பட்டிருக்கின்றது.

புனித குர்ஆனின் ஆரம்ப வசனங்களின் வருகை இம்மாதத்தில் இடம் பெற்றதால் இ;ம்மாதம் அதி சிறப்பு வாய்ந்த மாதமாகவும் பார்க்கப்படுகின்றது.

நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் தமது 40 வது வயதில் மக்காவின் புற நகர்ப் பிரதேசத்தில் அமைந்துள்ள ஹிறா எனும் மலைக் குகையில் தனித்துத் தியானித்துக் கொண்டிருந்தார்கள். வானவர்க் கோன் ஜிப்ரயில் (அலை) அவர்கள் அல்லாஹ்விடமிருந்து வஹி எனும் இறைத்தூதை நபிகளாருக்கு எடுத்து வந்தார்கள். இது புனித ரமழானின் ஓர் இரவிலேயே நடைபெற்றது.

'இக்ரஉ' என்ற சொல்லை ஆரம்பமாகக் கொண்ட அத்தியாயத்தையே அல்லாஹ் முதலில் இறக்கி வைத்தான். 'இக்ரஉ' என்ற இந்த அறபுச் சொல்லின் கருத்து 'ஓதுவீராக' என்பதாகும். ஆரம்பமாக இறக்கி வைக்கப்பட்ட அத்தியாயத்தின் ஆரம்பத்திருவசனங்களின் கருத்து பின்வருமாறு அமைந்திருக்கின்றது.

'நபியே இரத்தக் கட்டியிலிருந்து மனிதனைச் சிருஷ்டித்த உமது இறைவனின் பெயர் சொல்லி ஓதுவீராக மிக சங்கை பொருந்திய உமது இரட்சகன் அவனே! பேனாவின் மூலம் கற்றுக் கொடுத்தான். அறியாதவற்றை மனிதனுக்குக் கற்றுக்கொடுத்தவனும் அவனே'

அருள் மறையாம் திருக்குர்ஆன் இறுதித் தூதர் எம் பெருமானார் முஹம்மது (ஸஸ்) அவர்களுக்கு ரமழான் மாதத்தின் ஓர் இரவில்தான் அருளப்பட்டது. என்பதை பின்வரும் குர்ஆன் வசனங்கள் எடுத்து இயம்பிக் கொண்டிருக்கின்றன.

'ரமழான் மாதம் எத்தகையது என்றால் இம்மாதத்திலேயே புனித குர்ஆன் அருளப்பட்டது'

'நிச்சயமாக நாம் குர்ஆன் எனும் வேதத்தை 'லைலத்துல் கத்ர்' எனும் மாட்சிமை பொருந்திய இரவில் ஆரம்பமாக இறக்கி வைத்தோம். 'லைலத்துல் கத்ர்' இரவு எது என நபியே தங்களுக்கு யாது அறிவித்தது (குர்ஆன்) இறக்கி வைக்கப்பட்ட 'லைலத்துல் கத்ர்' இரவானது ஆயிரம் மாதங்களை விடச் சிறந்ததாகும்'

மேற்குறித்த இறை வசனங்கள் இறுதிவேதம் குர்ஆன் இறுதித்தூதர் முஹம்மது (ஸல்) அவர்களுக்கு ரமழான் மாதத்தின் லைத்துல் கத்ர் எனும் இரவில் அருளப்பட்டுள்ளது. என்பதை தெளிவு படுத்துகிள்றன. புனித 'லைத்துல் கத்ர்' இரவு ரமழான் மாதத்தில் எப்பகுதியில் இடம்பெறும் என்பது பற்றி பல அபிப்பிராயங்களும், கருத்துக்களும் தெரிவிக்கப்பட்டிருக்கின்றன. நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் பின்வரும் கூற்று லைத்துல் கத்ர் பற்றிய ஓர் தெளிவான கருத்தைச் சுட்டி நிற்கின்றது.

புனித லைலத்துல் கத்ர் இரவை ரமழான் மாதத்தின் பிந்திய பத்து நாட்களின் ஒற்றையாகவுள்ள இரவுகளில் தேடி அடைந்து கொள்ளுங்கள். அதாவது ரமழான் மாதத்தின் 21, 23, 25, 27 மற்றும் 29 ஆம் இரவுகளில் ஒன்றாக இப்புனித இரவு அமையலாம். என்பதுவே மேற்படி ஹதீதின் விளக்கமாகும்.
மகிமையும், மாட்சிமையும் நிறைந்த இந்த இரவில் செய்கின்ற வணக்க வழிபாடுகளுக்கு ஆயிரம் மாதங்களில் செய்யப்படுகின்ற வணக்க வழிபாடுகளுக்கு கிடைக்கின்ற நன்மைகளை விட கூடுதலான கூலி கொடுக்கப்படுவதாகக் கூறப்படுகின்றது. 'இறை திருப்தியை வேண்டி இந்த இரவில் எவர் நின்று வணக்கம் புரிகின்றாரோ அவருடைய முன்செய்த பாவங்கள் அனைத்தும் மன்னிக்கப்படுகின்றன.' என நபிகள் நாயகம் (ஸஸ்) அவர்கள் இவ்விரவின் சிறப்பு பற்றிச் சிலாகித்துக் கூறியுள்ளார்கள்.

ரமழான் மாதம் முழுவதும் நோன்பென்னும் உபவாசத்தை மேற்கொண்டவர்கள் அவர்தம் நோன்பை பூரணப்படுத்தும் வகையில் 'ஸக்காத்துல் பித்ர்' எனும் கட்டாய ஈகையை நிறைவேற்ற வேண்டும். நோன்பு நோற்ற அனைவரும் அவர்களின் பொறுப்பிலும் பராமரிப்பிலுமுள்ள சிறுவர்கள், குழந்தைகள் அனைவர் மீதும் இவ்வீகை கடமையாகும்.

நமது நாட்டில் நாம் பிரதான உணவாகக்கொள்ளுகின்ற அரிசியிலிருந்து ஒருவருக்கு சமாராக இரண்டரைக் கிலோ வீதம் இதனை வறியவர்களுக்கு வழங்கவேண்டும். நோன்பு நோற்றவர்கள் பெருநாள் தொழுகைக்கச் செல்லமுன் இதனை நிறைவேற்றியே ஆகவேண்டும். இவ்வீகையை நிறைவேற்ற வேண்டியது 'பர்ளு' எனும் கட்டாயக் கடமையாகும்.

பித்ர் என அழைக்கப்படும் இவ்வீகையை நிறைவேற்றாத நோன்பாளிகளின் நோன்புகள் முற்றுப்பெறாத நிலையில் விண்ணுக்கும், மண்ணுக்கும் இடையில் தொங்கி நிற்கின்றன.

ஈத்ல் பித்ர் எனும் ஈகைத்திருநாள் தினத்தில் இப்பிரபஞ்சத்தில் எந்தவொரு முஸ்லிமும் பட்டினியோடு இல்லாது உண்டு பசிதீர்த்து மகிழ்ந்திருக்கவேண்டும். என்பதே இந்த ஈகையின் தத்துவமாக அமைந்திருக்கின்றது. இதனாலேயே இத்திருநாளுக்கு ஈகையெனும் பொருள்கொண்ட'பித்ர்' என்ற சொல்லுடன் பெருநாளைக் குறிக்கும் 'ஈத்' எனும் சொல்லும் இணைக்கப்பட்டு'ஈத்ல் பித்ர்' ஈகைத் திருநாள் என்று அழைக்கப்படுகின்றது.

பெருநாள் தினத்தில் நாம் அனைவரும் ஜமா அத்துடன்
 பெருநாள் தொழுகை இரண்டு றக்அத்துக்களை நிறைவேற்றுவது,
தொழுகை நடைபெறும்வரை தக்பீரை முழங்குவது, தொழுகைக்குச் செல்ல முன் எதையாவது உண்டு கொள்வது, புத்தாடை பூண்டு மணம் பூசிக்கொள்வது, கொழுகைக்கு ஓர் வழியால் சென்று வேறோரு வழியால் திரும்பி வருவது, சந்திப்பவர்களுக்கு ஸலாம் சொல்லி கைலாகு கொடுப்பது, உறவினர்களைச் சந்தித்து குசேலம் விசாரிப்பது, முடியுமானவரை எழைகளுக்கும், வறியவர்களுக்கும் ஈகைசெய்வது, பெருநாள் தொழுகையை வைகறைப் பொழுதில் சூரியன் உதித்து சில நிமிடங்களில் தொழுது கொள்வது, இத்தொழுகைக்காக பொது மைதானங்களை தெரிவு செய்து இத்தொழுகையையும், கொத்பாப் பேருரையையும் நடாத்தி முடிப்பது என்பவை இத்தினத்தில் இஸ்லாம் எம்மிடமிருந்து எதிர் பார்க்கின்ற நல்ல அம்சங்களாகும்.

வணக்க வழிபாடுகள் பூத்துக் குலுங்கும் பனித ரமழானின் மீழ் தரிசனத்தையும், புனித லைலத்துல் கத்ர் இரவின் மீழ் தொடர்பினையும், பட்டினியற்று புசித்துப் பூரிப்படைகின்ற ஈகைத் திருநாளின் இன்னுமோர் வருகையையும் எம் எல்லோருக்கும் எமது இரட்சகன் அழ்ழாஹ் நற்பேறாக வழங்குவானாக!!! ஆமீன்.


இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :