மனித உரிமைகளுக்கு அடிப்படையாய் அமையும் மதங்களும் மத நூல்களும்



னிதர்களாக படைக்கப்பட்டவர்கள் அனைவரும் உரிமைகளை உடையவர்களாகவே கருதப்படுகின்றனர். மனித வாழ்வின் ஆதார கருவியாக மனித உரிமைகள் அடையாளப்படுத்துகின்றன. சமூக அங்கியாக விளங்கும் மனிதன் சுய கௌரவத்துடனும், சுயமரியாதையுடனும்,; மதிப்புடனும் வாழ்வதற்கு மனித உரிமைகள் அவசியமாகின்றன. விரும்பியோ விரும்பாமலோ ஒவ்வொரு அரசும், அரச அதிகாரிகளும் மனித உரிமை நியமங்களுக்கு உட்பட்டு செயல்பட வேண்டியுள்ளது. இன்றளவில் மனித உரிமைகள் மீறலுக்கான சட்டங்களும் தண்டனைகளும் மிகவும் கடுமையாக்கப்பட்டுள்ள நிலையினை எம்மால் அவதானிக்க முடிகிறது.

உலக அளவில் பார்க்கின்றபோது மனித உரிமைகளை பெற்றுக் கொள்வதற்கான மற்றும் மனித உரிமை மீறலுக்கு எதிரான குரல்கள் பல்வேறு தரப்புகளினால் ஒலிக்கப்படுகின்றன. மனித உரிமைக்கான போராட்டங்கள் பல்வேறு நாடுகளில் தீவிரமாக முன்னெடுக்கப்பட்ட நிலையிலேயே உள்ளது.

மனித உரிமைகளானவை தனிமனிதனை பாதுகாப்பதாகவும்; தனிமனித ஆளுமை விருத்திக்கான காரணியாகவும் விளங்குகின்றன. இத்தகைய மனித உரிமைக்கான அவசியப்பாடு உலக அளவில் உணரப்பட்டதன் விளைவாக 1948ஆம் ஆண்டு ஐக்கிய நாடுகள் சபை அனைத்துலக மனித உரிமைகள் பிரகடனம் ஒன்றை அறிமுகம் செய்து கைச்சாத்திட்டது. மனித உரிமை வரலாற்றில் அடிப்படை மனித உரிமைகள் பிரகடனம் மிகவும் முக்கியமான ஒரு சான்றாதாரம் ஆகும்.

மனித உரிமைகள் என்பதன் எண்ணக்கருவானது தேசியம், அரசு, பால், நிறம், இனம், மதம்,மொழி, அந்தஸ்து என்பவற்றின் அடிப்படையில் எவ்வித பாகுபாடும் இன்றி எல்லோருக்கும் பொதுவானதாகவே மனித உரிமைகள் அமைகின்றன. மனித உரிமைகள் ஆனவை சில அடிப்படை தத்துவங்களை கொண்டுள்ளன அவற்றில் மனித உரிமைகள் உலகளாவிய ரீதியானவை, பாராதீனப்படுத்தலுக்கு உட்படுத்த முடியாதவை, பிரிக்கப்பட முடியாதவை மேலும் சமமானதும் பாரபட்சங்களுக்கு உட்படுத்தப்பட முடியாதவையாகும்.

ஆரம்ப காலம் தொட்டே மதங்களும் மத நூல்களும் மனித உரிமையை வளர்த்தெடுப்பதில் பாரிய ஒத்துழைப்பினை வழங்கி உள்ளன எனலாம.; அந்த வகையில் பார்க்கின்றபோது சங்க காலம், சங்கம் மருவிய காலம் தொட்டு பல நூல்களில் மனித உரிமைகள் தொடர்பான அம்சங்கள் உள்ளடக்கப்பட்டுள்ளன. சங்கமருவியகால மற்றும் சங்க கால நூல்களில் இயற்றப்பட்ட பல சிந்தனை கொண்ட நூல்கள் மனித உரிமைகள் அதிக அளவில் உள்ளடக்கி உள்ளமை குறிப்பிடத்தக்கது.

பொதுவாகவே எல்லா சமயங்களும் பிற உயிர்களுக்கு தீங்கு விளைவிக்க கூடாது என்பதனை வலியுறுத்துகின்றன. பிற உயிர்களையும் தன் உயிராக கருதுதல் சாலச் சிறந்தது என குறிப்பிடப்படுகின்றது. இக்கருத்து மனித உரிமைக்கான மிக அடிப்படையான கருத்தாக பல்வேறு சமயங்களினால் பின்பற்றப்படுகின்றது.

இந்து சமயத்தை பொறுத்தவரையில் ஆணும் பெண்ணும் சமமானவர்கள் என்பதை புகட்டும் வண்ணம் அர்த்தநாரீஸ்வரர் உருவம் விளங்குகின்றது. ஆணுக்கும் பெண்ணுக்கும் எச்சந்தர்ப்பத்திலும் சமமான வாய்ப்புகளும் சம உரிமையும் வழங்கப்பட வேண்டும் என்பதனை அர்த்தநாரீஸ்வரர் உருவமானது எடுத்துக் காட்டுவதாக அமைகின்றது.

பொய்ப் பேசுதல், களவுசெய்தல், பிறர்மனை நோக்குதல், கொலை செய்தல், பிறர்நலனுக்கு தீங்கு விளைவித்தல் இவை அனைத்தையும் குற்றச்செயல்களாக இந்து சமயம் மட்டுமல்லாது பல்வேறு சமயங்கள் அடையாளப்படுத்துகின்றன. சைவ சமயத்தில் தோன்றிய திருக்குறள் எனும் மாபெரும் நூல் அறக்கருத்துக்களை ஒட்டுமொத்தமாக தாங்கிய நூலாக கருதப்படுகின்றது அறத்துப்பால், பொருட்பால், காமத்துப்பால் என முப்பாலும் அதிகப்படியான மனித உரிமை சார் கருத்துக்கள் நிறைந்துள்ளன. திருக்குறளில் குடியினதும் கோணினதும் உரிமைகளும் கடமைகளும் விளக்கப்பட்டுள்ளன. செங்கோல் ஆட்சி கொடுங்கோல் ஆட்சிக்குமான வித்தியாசங்கள் கூறப்பட்டுள்ளன. இவ்வாறாக அரசியல், சமயம், பொருளாதாரம், கல்வி, கலை, கலாசாரத்துடன் தொடர்புடைய பல மனித உரிமைகளை தாங்கியதாக திருக்குறள் எனும் புனித நூல் அமைகின்றது. இவ்வாறு ஒளவையாரின் ஆத்திசூடி, கொன்றைவேந்தன், நாலடியார், நான்மணிக்கடிகை என்பனவும் மனித உரிமை தொடர்பான கருத்துக்களை தாங்கிய நூல்களுக்கான சிறந்த உதாரணங்களாகும்.

கிறிஸ்தவர்களின் புனித நூலான பைபிளிலும் மனித உரிமையுடன் தொடர்புடைய எண்ணங்கள் முன் வைக்கப்பட்டுள்ளன. சகலரும் சமம், சகோதரத்துவம், பாவமன்னிப்பு என்பனவெல்லாம் கிறிஸ்தவம் கற்பிக்கும் மனித உரிமைகள் சார் எடுத்துக்காட்டுகளாகும். அந்தவகையில் கலாத்தியர், யாத்திராகமம் நீதிமொழிகள், ஆதியாகமம், மத்யேது போன்றவற்றில் பல மனித உரிமைகளுடன் தொடர்புடைய கருத்துக்கள் எழுதப்பட்டுள்ளன.

அவற்றில் கலாத்தியர் 3.28 குறிப்பிடுவதன் படி யூதனென்றும் கிரேக்கர் என்றும் இல்லை, அடிமை என்றும் சுயாதீனன் என்றும் இல்லை, ஆண் என்றும் பெண் என்றும் இல்லை நீங்கள் எல்லோரும் கிறிஸ்து இயேசுவுக்குள் ஒன்றியிருக்கிறீர்கள் என குறிப்பிடப்படுகின்றது. இதன் அடிப்படையில் பார்க்கும்போது கிறிஸ்தவம் அனைவருக்குமான சம வாய்ப்புகளையும் சம உரிமைகளையும் வழங்குகின்றமை குறிப்பிடத்தக்கதாகும், பிறர் பாவங்களை சுமந்து கொண்டிருக்கும் இயேசு கிறிஸ்துவும் அவர் சார்ந்த கிறிஸ்தவ மதமும் மனித உரிமைகளுக்கு தீங்கு விளைவிக்காத வண்ணம் மனித உரிமைகளை பாதுகாக்கும் வண்ணம் பல்வேறு வகையான கருத்துக்களை உலகிற்கு தந்துள்ளது.

இஸ்லாத்தைப் பொறுத்தவரையில் பெண்களுக்கும் ஆண்களுக்குமான சமத்துவத்தையும் சம உரிமைகளையும் வழங்குகின்றதாக திருக்குர்ஆன் குறிப்பிடுகின்றது. பெண்களுக்கும் வாழ்வதற்கான உரிமை, திருமணம் சார்ந்த உரிமைகள் மற்றும் சொத்து உரிமை என்பன ஆண்களுக்கு நிகரானதாக காணப்படுவதாக திருக்குர்ஆன் குறிப்பிடுகிறது. குர்ஆனின் நான்காவது , ஏழாவது மற்றும் 32வது வசனங்கள் மனித உரிமையுடன் தொடர்புடையவையாக அறியப்படுகின்றன.

இவ்வாறாக அடிப்படை உரிமைகள் ஆகவும் மனித உரிமைகளாகும் குறிப்பிடப்படும் குடியியல் உரிமை, அரசியல் உரிமை, சமூக உரிமை, கலாசார உரிமை மற்றும் பொருளாதார உரிமைகள் யாவும் அறிஞர்களால் இனங்காணப்பட்ட மற்றும் ஏற்றுக்கொள்ளப்பட்ட மனித உரிமைகளாகும். உலகில் ஆரம்ப காலம்தொட்டு உலகை வழி நடத்திச் செல்கின்ற மதங்களும் மத நூல்களும் மனித உரிமைகளை வளர்ப்பதில் பல்வேறு விதமாக தமது பங்களிப்புக்களை வழங்கி உள்ளன

மதங்கள் ஒவ்வொன்றும் தத்துவ கொள்கைகளின் அடிப்படையில் வேறுபட்டு இருப்பினும் அவை மனித உரிமை தொடர்பில் ஒற்றுமையாகவே செயலாற்றுகின்றன. மதங்களும் மத நூல்களும் மனித உரிமைக்கான தூண்கள் ஆகவே ஆரம்ப காலங்களில் விளங்கியமையை எம்மால் அவதானிக்க முடிகின்றது. மதங்கள் மற்றும் மத நூல்கள் கூறும் அறவழியில் நின்று மனித உரிமைகளைப் பாதுகாப்பதும் அதனை நடைமுறைப்படுத்துவதும், சக மனிதர்களை மனிதர்களாக மதித்து செயல்படுவதும் ஒவ்வொரு மனிதனின் கடமையாகும்.


ச.மங்களதர்ஷினி
ஊடகக்கற்கைகள் துறை
4ஆம் வருடம்
யாழ்ப்பாணப் பல்கலைக்கழகம்
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :