மதரசா ஒழுங்கையா? இசாக் சேர் ஒழுங்கையா?என்பது தான் இப்போது கிண்ணியா அரசியல் சர்ச்சையில் சிக்கியுள்ள மற்றுமொரு விஷயமாகும்.
பெரிய அரசியல்வாதிகள் தான் பொது இடங்களில் முட்டி மோதி ஊர் மானத்தை போக்குகிறார்கள் என்றால் இப்போது குட்டி அரசியல்வாதிகளும் அந்த நிலைக்கு வந்து விட்டார்கள் என கிண்ணியா புத்திஜீவிகள் கவலையை வெளிப்படுத்தியுள்ளார்கள்.
முன்னாள் தவிசாளர் ஹில்மி மதரசா ஒழுங்கை என பெயர்ப் பலகை நட இந்நாள் தவிசாளர் நளீம் இல்லை அது இசாக் சேர் வீதி என்கிறார். இசாக் சேர் வீதி என பெயர்ப் பலகை நடவுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
உண்மையில் இந்த ஒழுங்கையில் மதரசா ஓன்று இருப்பதால் மதரசா ஒழுங்கை என்றே நீண்ட காலமாக அழைக்கப் பட்டும் ஆவணங்களில் பயன்படுத்தப் பட்டும் வருகின்றது
இதனை இசாக் சேர் வீதி என்று மாற்றுவதில் யாருக்கும் எந்த ஆட்சேபனையும் இருக்க நியாயமில்லை. ஏனெனில் சமூகத்துக்காக தன்னை அர்ப்பணித்தவர்களுள் அவரும் ஒருவர் எனவும் பிரதேச மக்கள் குறிப்பிடுகின்றனர்.
ஆனால், பெயர்ப் பலகை போடுவதால் மட்டும் அந்த வீதி இசாக் சேர் வீதியாக மாறி விடாது. நகர சபையின் சட்டங்களின் படி நிறைய நடபடி முறைகளைத் தாண்டி இறுதியாக அந்த வீதிப் பெயர் மாற்றம் குறித்து வர்த்தமானி அறிவித்தல் விடுக்கப் படவேண்டும். அப்போது தான் அதி சட்ட ரீதியான பெயராக மாறும்.
இவற்றை செய்யாது வெறுமனே ஆளுக்காள் அரசியல் போட்டிக்காக பெயர்பலகை நடுவது நாளை இன்னுமொரு தவிசாளர் வந்து இன்னுமொரு பெயர்ப் பலகை நடுவதற்கு வழி வகுக்கக் கூடும் எனவும் குறிப்பிடுகின்றனர்.
எந்த தவிசாளராவது உரிய நடபடி முறை இல்லாது வர்த்தமானி அறிவித்தல் இல்லாது வெறும் பெயர்ப்பலகை நடுவது மக்களை ஏமாற்றும் செயலாகும்.
எனவே, பெயர்ப் பலகை நட முன் உரிய நடபடி முறைகளை முன்னெடுப்பதே விஷயம் தெரிந்தவர்களின் செயற்பாடாக இருக்கும் என்பது மக்களின் கருத்தாகும்.