இஸ்லாமிய நாடான இந்தோனேசியாவில் பாதுகாக்கப்படும் இந்து தீவை பார்வையிட முஸ்லிம் ஊடகவியலாளர்கள் பேரார்வம்
மல்லிகைத்தீவு நிருபர்-
சர்வதேச பிரசித்தி வாய்ந்த சுற்றுலா தலமாக மாத்திரம் அன்றி இந்து தீவாகவும் விளங்குகின்ற இந்தோனேசியாவின் பாலித்தீவுக்கு 10 ஊடகவியலாளர்கள் தேசிய நல்லிணக்கத்துக்கான ஊடக மையத்தின் ஏற்பாட்டில் jமாத நடுப்பகுதியில் அழைத்து செல்லப்படுகின்றனர்.
தமிழ், சிங்கள ஊடகவியலாளர்களை மாத்திரம் அன்றி கணிசமான எண்ணிக்கையில் முஸ்லிம் ஊடகவியலாளர்களையும் அழைத்து செல்ல தேசிய நல்லிணக்கத்துக்கான ஊடக மையம் பூர்வாங்க ஏற்பாடுகளை மேற்கொண்டு உள்ளது.
அதே போல உலகின் மிக பெரிய இஸ்லாமிய நாடான இந்தோனேசியாவில் இந்து சமயம் பாதுகாக்கப்படுவதற்கு கண் கண்ட சாட்சியாக உள்ள பாலித்தீவை பார்வையிட வேண்டும் என்று முஸ்லிம் ஊடகவியலாளர்களால் பேரார்வம் வெளிப்படுத்தப்பட்டு உள்ளது.
முஸ்லிம்கள் பெரும்பான்மையாக வாழ்கிற இந்தோனேசியாவில் பத்தாயிரத்துக்கும் மேற்பட்ட சிறிய சிறிய தீவுகள் உள்ளன. இந்த நிலையில், பாலித்தீவில் மட்டும் இந்துக்கள் அதிகமாக வாழ்கின்றனர்.
இந்து மற்றும் பௌத்த வரலாற்று பின்னணிகளுடன் பிணைந்ததாக உள்ள பாலித்தீவானது கடவுளின் தீவு, ஆயிரம் கோவில்களின் தீவு என்றெல்லாம் வர்ணிக்கப்படுகின்றது.
ஏனென்றால் இங்கு எங்கு பார்த்தாலும் ஆலய மயம்தான். 6200 கோவில்கள் பாலித்தீவில் அமைந்து உள்ளன என்று சொல்லப்படுகின்றது. 500 வருடங்களுக்கு முன்பு இந்து சமயம் எப்படி இருந்தது? என்பதை பாலியில் பார்க்கலாம் என்று உலகம் சுற்றிய தமிழரான ஏ. கே. செட்டியார் எழுதி உள்ளார். அதே போல உலகின் காலை பொழுதே பாலி, அதுவே உலகின் கடைசி சொர்க்கம் என்று பண்டிதர் ஜவஹர்லால் நேரு புகழ்ந்து உள்ளார்.
பாலித்தீவுக்கு ஆண்டு தோறும் இரண்டு மில்லியனுக்கும் அதிகமான சுற்றுலா பயணிகள் வருகை தருகின்றனர் என்பதும் இவர்களை வரவேற்க ஐம்பதாயிரத்துக்கும் அதிகமான அறைகள் ஆயத்தமாக உள்ளன என்பதும் குறிப்பிடத்தக்கவை.