முன்னாள் முதல்வரும் திமுக தலைவருமான கலைஞர் கருணாநிதி காலமானார்


முன்னாள் முதல்வரும் திமுக தலைவருமான கலைஞர் கருணாநிதி காலமானார். கடந்த சில மாதங்களாக உடல் நலக்குறைவால் அவதிப்பட்டு வந்த கருணாநிதி சென்னையில் காலமானார். 95 வயதான கலைஞர் கருணாநிதி இன்று மாலை 6.10 மணிக்கு காலமானார். 25ம் தேதி உடல்நிலை சரியில்லாமல் கோபாலபுர இல்லத்தில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. ஆனால் ரத்த அழுத்தம் காரணமாக 27 ம் தேதி அதிகாலை 1.30 மணி அளவில் காவேரி மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. 11 நாட்களுக்கு பிறகு சிகிச்சை பலனின்றி திமுக தலைவர் கருணாநிதி உயிரிழந்தார்.
திருவாரூர் மாவட்டம் அருகில் உள்ள திருக்குவளையில் முத்துவேல்- அஞ்சுகம் அம்மையாருக்கு மகனாக ஜூன் 3-ம் தேதி 1924-ம் ஆண்டு பிறந்தார். கருணாநிதியின் இயற்பெயர் தட்சிணாமூர்த்தி ஆகும். அவர் தன்னுடைய 14 வயதில் நீதிக்கட்சித் தலைவர்களில் ஒருவரான அழகிரிசாமியின் பேச்சின்பால் ஈர்க்கப்பட்டு அதற்கு பிறகு அரசியலில் ஈடுபட்டார். அதன் பின்னர் இந்தி எதிர்ப்பு போரட்டத்தின் மூலம் கருணாநிதி தன் அரசியலில் தீவிரத்தைக் காட்டினார்.
தமிழகத்தில் திராவிடர் இயக்க மாணவர் அணியை முதல் முதலாக தொடங்கியவர் கருணாநிதி ஆவார். தன் போட்டியிட்ட அனைத்து தேர்தல்களில் வெற்றி பெற்றவர் என்ற பெருமைக்குரியவர் கருணாநிதி. 1957-ம் ஆண்டு நடைபெற்ற சட்டமன்ற தேர்தலில் போட்டியிட முடிவெடுத்தார். பின்னர் குளித்தலையில் போட்டியிட்டு கருணாநிதி வெற்றி பெற்று முதல் முறையாக சட்டமன்றத்தில் திமுக அடியெடுத்து வைக்கவும், முதல் முறையாக தனது சட்டமன்ற வரலாற்றைத் துவக்கவும் வழிவகுத்தது.

1967-ம் ஆண்டு நடைபெற்றத் தேர்தலின் மூலம் திமுக முதல் முறையாக தமிழக ஆட்சியில் பங்குபெற்றது. கருணாநிதி பொருளாளராக கட்சியில் உயர்வு பெற்றார். மேலும் தி.மு.க.வின் தொடக்க கால உறுப்பினராக இருந்தவர் கருணாநிதி. அவர், 1957-ம் ஆண்டிலிருந்து தமிழக சட்டமன்ற உறுப்பினராகவும், கடந்த 50 ஆண்டுகளாக தி.மு.க.வின் தலைவராகவும் பதவி வகித்து வந்தார். தமிழகத்தின் முதல்வராக ஐந்துமுறை கருணாநிதி பதவி வகித்திருந்தார். ஒரு கட்சியின் தலைவாரக 50 ஆணடு தொடர்வது என்பது மிக பெரிய சாதனையாகும். அதை திமுக தலைவராக இருந்த கருணாநிதி நிகழ்த்தியுள்ளார். திமுக தலைவர் 50-ம் ஆண்டு பொன் விழாவை கடந்த மாதம் 27 ம் தேதி கொண்டாடினார்.
இந்நிலையில் காவேரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த கருணாநிதியின் உடல் நிலை குறித்து தொலைபேசியல் பிரதமர் மோடி, மு.க.ஸ்டாலினிடம் கேட்டறிந்தார். குடியரசு தலைவர், துணை குடியரசு தலைவர், காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி, தமிழக ஆளுநர் ஆகியோர் நேரில் சென்று ஸ்டாலினிடம் கேட்டறிந்தனர். மேலும் தமிழக முதல்வர், துணை முதல்வர் மற்றும் பல்வேறு அரசியல் கட்சி தலைவர்கள், வெளி மாநில முதல்வர்கள் , நடிகர்கள் ஆகியோர் கருணாநிதியின் உடல் நிலை குறித்து நேரில் சென்று கேட்டறிந்தனர். இந்நிலையில் 10 நாட்களாக சிகிச்சை பெற்று வந்த கருணாநிதியின் உயிர் மண்ணைவிட்டு பிரிந்தது.

கருணாநிதியின் தீராத தமிழ் காதல்:
கலை மற்றும் இலக்கிய துறைகளில் இடைவிடா எழுத்து பணியை தொடர்ந்தார். அவர் எழுதிய உடன் பிறப்புக்கு கடிதம் என்ற தொடர் உலகின் நீண்ட தொடர்களில் ஒன்றாகும். கருணாநிதிக்கு கலைஞர் என்ற பட்டத்தை தூத்துமேடை நாடகத்தின் போது எம்.ஆர்.ராதா சூட்டினார். அந்த கலைஞர் என்ற பட்டம் இன்று வரை அழைக்கப்படுகிறது. அவருக்கு முத்தமிழ் அறிஞர், உலகத் தமிழர்களின் ஒப்பற்றத் தலைவர், தமிழ் இனக் காவலர், கலைஞர் என்று பல பெயர்கள் உள்ளது. ஆனால், கலைஞர் என்று அழைப்பதையே அவர் மிகவும் விரும்பினார். இதை தோடர்ந்து முரசொலி வெளியீட்டுக் கழகம்’ என்ற பெயரில் 1942-ம் ஆண்டு நிறுவனம் ஒன்றைத் தொடங்கி, 'முரசொலி' என்ற மாத இதழைத் தொடங்கினார்.
அதில் சேரன் என்ற பெயரில் புரட்சியான பல கருத்துகளுடன் கட்டுரைகள் எழுதினார். திரைத்துறை மீதும் தீராத ஆர்வம் இருந்தது. எனவே, திரைப்பட இயக்குநர் ஏ.எஸ்.ஏ சாமி-யோடு பணியாற்ற, பெரியார் அனுமதியுடன் கோவைக்குச் சென்றார் கருணாநிதி. 'ராஜகுமாரி' படத்துக்கு வசனம் எழுதினார். அதை தொடர்ந்து பல படங்களுக்கு கதை, வசனம் எழுதியுள்ளார். கடைசியாக அவர் கதை, வசனம் எழுதிய திரைப்படம் பொன்னர்-சங்கர் மற்றும் தொலைக்காட்சி தொடர் ராமானுஜர் ஆகியவையாகும்.

கருணாநிதியின் ஆட்சி காலங்கள்:

* 1969-ம் ஆண்டு முதல் 1971-ம் ஆண்டு வரை (கா. ந. அண்ணாதுரை மறைவுக்குப் பின்) முதல் முறை ஆட்சி செய்தார்.
* 1971-ம் ஆண்டு முதல் 1976-ம் ஆண்டு வரை இரண்டாவது முறையாக ஆட்சி செய்தார்.
* 1989-ம் ஆண்டு முதல் 1991-ம் ஆண்டு வரை (எம். ஜி. இராமச்சந்திரன், மறைவுக்குப் பின்) மூன்றாம் முறை ஆட்சி செய்தார்.
* 1996-ம் ஆண்டு முதல் 2001-ம் ஆண்டு வரை நான்காம் முறை ஆட்சி செய்தார்.
* 2006-ம் ஆண்டு முதல் 2011-ம் ஆண்டு வரை ஐந்தாம் முறை ஆட்சி செய்தார்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -