மரணமடைந்த பாலமுனை, பனையடி வீதியைச் சேர்ந்த சரிபுத்தம்பி சித்தி உம்மா (வயது 59) என்பவரது மரணத்தில் உறவினர்களுக்கு சந்தேகம் ஏற்பட்டதையடுத்து அக்கரைப்பற்று பொலிஸில் செய்யப்பட்ட முறைப்பாட்டின் அடிப்படையில், அக்கரைப்பற்று நீதவான் நீதிமன்ற நீதிபதியும் மாவட்ட நீதிமன்ற நீதிபதியுமான அந்தோனிசாமி பீற்றர் போல் முன்னிலையில் நேற்று (21) செவ்வாய்க்கிழமை காலை 10.30 மணியளவில் சடலம் தோண்டி எடுக்கப்பட்டது.
இவ்வேளை, அம்பாறை சட்ட வைத்திய அதிகாரி, அக்கரைப்பற்று உதவிப் பொலிஸ் அத்தியட்சகர், பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி உட்பட சுகாதாரத் துறை அதிகாரிகளும் பிரசன்னமாகியிருந்தனர்.
இச்சம்பவம் தொடர்பாகத் தெரியவருவதாவது,
கடந்த வெள்ளிக்கிழமை (17) மாலை இவ்வயோதிபப் பெண் வீட்டில் தனிமையில் இருந்துள்ளார். வெளியே சென்றிருந்த அவரது மகளும் கணவரும் வீட்டிற்கு வந்தபோது, குளியலறையில் விழுந்து கிடந்துள்ளதைக் கண்டுள்ளனர். இதன் பின்னர், மயக்கமுற்றுள்ளதாக கருதி உடனடியாக பாலமுனை வைத்தியசாலைக்கு கொண்டு சென்றுள்ளனர். ஆனால், அவர் மரணமடைந்துள்ளதாக வைத்தியர்கள் தெரிவிக்க, குளியலறையில் வழுக்கி விழுந்ததால் இம்மரணம் சம்பவித்திருக்கலாம் எனக்கருதி அன்றைய தினம் இரவே ஜனாஸாவை அடக்கம் செய்துள்ளனர்.
மறுநாள் காலை பெண்ணின் மகள், தனது நகைப் பெட்டிக்குள் வைத்திருந்த நகைகள் யாவும் காணாமல் போயிருந்ததையும் தனது தாயின் கழுத்தில் கிடந்த மாலை காணாமல் போயுள்ளதையும் அறிந்து, தனது தாயின் மரணத்தில் ஏற்பட்ட சந்தேகத்தையடுத்து அக்கரைப்பற்று பொலிஸ் நிலையத்தில், மகள் தாவூதுலெவ்வை நஜீமா (வயது 29) என்பவரால் 'தனது தாயின் மரணம் இயற்கை மரணமல்ல என்றும் இம்மரணம் கொலையாக இருக்கலாம் என தாம் சந்தேகிப்பதாகவும்' முறைப்பாடு செய்யப்பட்டது.
இதனையடுத்து விசாரணை மேற்கொண்ட பொலிஸார், மரணமடைந்த வயோதிபத் தாயின் சகோததரரின் மகனான அவரது மருமகன், அன்று மாலை இங்கு வந்துள்ளதாகவும் அவரே நகைகளை எடுத்தபோது இதனைக் கண்ட மரணமடைந்த பெண்ணை தாக்கியதால் அவர் உயிரிழந்திருக்கலாம் எனவும் அதன் பின்னரே அவரைக் குளியலறையில் போட்டுவிட்டு மரண வீட்டிலும் நிற்காமல் தப்பிச் சென்றதாகவும் விசாரணைகளிலிருந்து தெரிய வந்தது.
இதனையடுத்து திருடப்பட்ட நகைகளுடன் குறித்த நபர் திங்கட்கிழமை (20) சந்தேகத்தின் பேரில் திருகோணமலையில் வைத்து அக்கரைப்பற்று பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
பிரேத பரிசோதனை மேற்கொள்ளப்பட்ட பின்னர், அதன் அறிக்கையை நீதிமன்றிற்கு சமர்ப்பிக்குமாறு அம்பாறை சட்ட வைத்திய அதிகாரிக்கு அக்கரைப்பற்று நீதவான் நீதிமன்ற நீதிபதியும் மாவட்ட நீதிமன்ற நீதிபதியுமான அந்தோனிசாமி பீற்றர் போல் உத்தரவிட்டுள்ளதுடன், பரிசோதனைக்கு பின்னர், சடலத்தை உறவினர்களிடம் ஒப்படைக்குமாறும் உத்தரவிட்டார்.
இது தொடர்பாக பொலிஸார் மேலதிக விசரணைகளை மேற்கொண்டள்ளனர்.