அவர்களது திறமைகளை யாரும் இலகுவாக மதிப்பிட்டு விட முடியாது.
வரலாற்றின் பல்வேறு காலப்பகுதிகளில் மாற்றுத் திறனாளிகள் நிகழ்த்திய இமாலய சாதனைகளை சரித்திரங்கள் சான்று பகர்கின்றன.
இவ்வாறு வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரும் மீள்குடியேற்றம்,புனர்வாழ்வு,வடக்கு அபிவிருத்தி பிரதி அமைச்சர் கெளரவ காதர் மஸ்தான் குறிப்பிட்டார்.
செவிப்புலனற்றோருக்கான தேசிய விளையாட்டு விழா வவுனியா பூந்தோட்டம் கல்வியியல் கல்லூரி மைதானத்தில் இடம்பெற்ற பொழுது பிரதம அதிதியாக கலந்துகொண்டு உரையாற்றிய பொழுதே இக் கருத்துக்களை அவர் தெரிவித்தார்.
அவர் தனதுரையில் மேலும் குறிப்பிட்டதாவது.
பேசமுடியாமை என்பதை குறைபாடு என்ற வகுதிக்குள் உள்ளடக்கி விடமுடியாது,அது இயலாமையாக இருந்தாலும் அவர்கள் வெளிப்படுத்தும் ஆற்றல்களை கண்டு சிலவேளைகளில் ஆச்சரியப்படுகிறோம்.
அபிவிருத்தியடைந்த நாடுகளில் மாற்றுத்திறனாளிகளின் வாண்மைத்துவ விருத்திக்கான சிறப்பான ஏற்பாடுகளும் அதன் விளைவாக சிறப்பான அடைவு மட்டங்களையும் அவர்கள் கண்டு வருகின்றனர்.
எமது வடமாகாணத்தில் ஒரேயொரு மாற்றுத் திறனாகளிகளுக்கான பாடசாலையை மாத்திரம் பெற்றிருக்கின்ற நாங்கள் இதனையிட்டு சிந்திக்க வேண்டும்.
எமது நல்லாட்சி அரசாங்கத்தின் கொள்கைகளில் மாற்றுத் திறனாளிகளின் திறன் விருத்திகளுக்கான ஏற்பாடுகள் பலவுண்டு
அவற்றை சீரிய முறையில் நடைமுறைப்படுத்துகின்ற பொழுது அவர்களது வாழ்வில் வசந்தங்களை ஏற்படுத்தலாம் எனவும் குறிப்பிட்டார்.
எட்டு மாவட்டங்களை சேர்ந்த மாற்றுத்திறனாளிகள் கலந்துகொண்ட இவ் விளையாட்டு விழாவில் வவுனியா கல்வியல் கல்லூரி உப பீடாதிபதி திரு.பரமானந்தம் சிறப்பு அதிதியாக கலந்து சிறப்பித்தார்.
போட்டிகளில் சாதனைகளை நிகழ்த்திய வீரர்களுக்கு சான்றிதழ்களும் வெற்றிக் கிண்ணங்களும் வழங்கி வைக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.