லண்டன் வாழ் இலங்கைப் பிரஜையான ஹமீத் முனவ்வர் எழுதிய ‘விஞ்ஞானத்துக்கு அப்பால் ஓர் ஒளி’எனும் நூலின் வெளியீட்டு விழா எதிர்வரும் 11ஆம் திகதி சனிக்கிழமை மாலை 4.00 மணிக்கு கொழும்பு -10, மாளிகாகந்தையிலுள்ள ஜம்மியத்துஷ் - ஷபாப் கேட்போர் கூடத்தில் இடம்பெறவுள்ளது.
ஸ்ரீலங்கா முஸ்லிம் மீடியா போரத்தின் தலைவர் என்.எம். அமீன் தலைமையில் இடம்பெறும் இவ்விழாவில், பிரதம அதிதியாக நகரத் திட்டமிடல் மற்றும் நீர் வழங்கல் வடிகாலமைப்பு அமைச்சர் ரவூப் ஹக்கீம் கலந்து கொள்கிறார்.
பிரதம பேச்சாளர்களாக, தென்கிழக்குப் பல்கலைக்கழக முன்னாள் உபவேந்தர் எம்.எம்.எம். நாஜீம்,சட்டத்தரணி எஸ்.ஜீ. புஞ்சிஹேவெ, அபிவிருத்திக்கும் பயிற்சிக்குமான உலக கலாசார நிலையத்தின் பணிப்பாளர் எஸ்.எல். நௌபர் மௌலவி ஆகியோர் கலந்து கொள்வதோடு, நூலின் முதற்பிரதியை புரவலர் ஹாசிம் உமர் பெற்றுக் கொள்கிறார்.
இலங்கையின் தந்துரைப் பிதேசத்தைச் சேர்ந்த நூலாசிரியர் ஹமீத் முனவ்வர் தற்போது லண்டனில் வசித்து வருகிறார்.
இவர் மண்ணிலிருந்து விண்வெளிவரை அல் - குர்ஆன், சூரியன் கழற்றப்படும் போது - கடலில் தீ மூட்டப்படும் போது ஆகிய இதர நூல்களையும் எழுதியுள்ளார்.
புதிய பல விடயங்களை உள்ளடக்கியுள்ள விஞ்ஞானத்துக்கு அப்பால் ஓர் ஒளி எனும் நூல் வாழ்க்கையின் அடிப்படை நோக்கமான இரட்சகனைப் புரிந்து, அவனுக்கு நன்றி செலுத்தி வாழ்தல் என்ற மையக்கருவைக் கொண்டுள்ளது குறிப்பிடத்தக்கது.